போட்டி 44: இங்கிலாந்து vs பாகிஸ்தான்
மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 11, மதியம் 2 மணி
2023 உலகக் கோப்பையில் இதுவரை: இங்கிலாந்து
போட்டிகள் - 8, வெற்றிகள் - 2, தோல்விகள் - 6, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மலான் - 373 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆதில் ரஷீத் - 13 விக்கெட்டுகள்
ஒரு உலக சாம்பியனுக்கு இப்படியொரு உலகக் கோப்பை அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். வங்கதேசம், நெதர்லாந்து அணி பாதாளத்தில் இருக்கும் இரண்டு அணிகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து. மற்ற 6 போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது. மிக மோசமான தொடராக இருந்தாலும், கடைசிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.
2023 உலகக் கோப்பையில் இதுவரை: பாகிஸ்தான்
போட்டிகள் - 8, வெற்றிகள் - 4, தோல்விகள் - 4, புள்ளிகள் - 8
புள்ளிப் பட்டியலில் இடம்: ஐந்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 359 ரன்கள்
சிறந்த பௌலர்: 16 விக்கெட்டுகள்
2 வெற்றிகளோடு நன்றாக தொடங்கிய பாகிஸ்தான், அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்று தடுமாறியது. இருந்தாலும் கடைசி 2 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் 400 ரன்களை விட்டிருந்தாலும், அதை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு DLS உதவியுடன் வென்றது அந்த அணி.
மைதானம் எப்படி இருக்கும்?
கொல்கத்தாவில் இதுவரை நடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டில் முதலில் விளையாடிய அணி வென்றிருக்கிறது. மற்றொரு போட்டியில் சேஸிங் செய்த அணி வென்றது. ஈடன் ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது கடினமாகவே இருக்கிறது. இந்தப் போட்டியும் அப்படியெ இருக்கும்.
வெற்றியோடு வெளியேறுமா இங்கிலாந்து?
இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், மோசமான இந்த உலகக் கோப்பையை நல்லபடியாக முடிக்க நினைக்கும். அதுமட்டுமல்லாமல் டாப் 8 இடங்களுக்குள் முடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற முடியும் என்பதால், இந்தப் போட்டியின் வெற்றி அவர்களுக்கு முக்கியம். கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியிலும் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாகவே இருந்தது. இந்தத் தொடரில் அனைத்து வீரர்களுமே நல்ல ஸ்கோர் எடுக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்கள். காயம் காரணமாக 3 போட்டிகளில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் தான் அந்த அணியின் இரண்டாவது டாப் ஸ்கோரர் என்பது, அவர்கள் பேட்டிங் எவ்வளவு சுமாராக இருந்தது என்பதைப் புரியவைக்கும். தொடர் முழுக்க பல மாற்றங்கள் செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பெரிய மாற்றங்கள் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் மாயத்தை நிகழ்த்துமா பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்த அணி 250+ ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 40 ஓவர்கள் மீதம் வைத்தோ பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும். பிராக்டிகலாக அதற்கு வாய்ப்பே இல்லை என்றாலும், குறைந்தபட்சம் பாகிஸ்தான் அணி பெரிய வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கவாவது செய்யும். முதலில் பேட்டிங் செய்வதே அதற்கு சரியான வாய்ப்பு. ஃபகர் ஜமான் மீண்டும் வந்த பிறகு அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் இன்னும் சற்று பலமடைந்திருக்கிறது. பந்துவீச்சு மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்தால் நிச்சயம் இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் அணியால் சவால் கொடுக்க முடியும்.
கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்
இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்: ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரிலும் சேர்ந்தே 111 ரன்கள் தான் எடுத்திருக்கிறார் ஜாஸ் பட்லர். இந்தத் தொடரில் இங்கிலாந்து கேப்டனாக குறைந்தபட்ச பங்களிப்பாவது கொடுத்து வெளியேறவேண்டும் என்று அவர் விரும்புவார். ஒரு பெரிய இன்னிங்ஸ் காத்திருக்கலாம்.
பாகிஸ்தான் - ஃபகர் ஜமான்: அதிரடியாக விளையாடி ரன் மழையாக பொழியு நினைக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் தவிர்த்து வேறு எந்த நல்ல ஆப்ஷன்கள் இருக்கிறது.