அருகி வரும் விலங்குகளின் ஒன்றான புலிகளை வேட்டையாடி அதன் தோல் மற்றும் கழிவுகளை சட்ட விரோதமாக விற்பனைச் செய்து வந்த வனவிலங்கு பாதுகாப்பு முன்னாள் அதிகாரி ஒருவரை போலிசார் டெல்லியில் அவரது இல்லத்தில் கைது செய்துள்ளனர். அதைப்பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
டெல்லியைச் சேர்ந்த 81 வயதான மிஷ்ரம் ஜகாத் என்பவர், புலிகளின் தோல் மற்றும் அதன் எலும்புகள், நகங்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நிலையில் அவரை வனவிலங்கு குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.
WPSI (Wildlife Protection Society of India) இன் முன்னாள் கள அதிகாரியான ஜகாத், புலி வேட்டையாடுதல் மற்றும் அதன் விற்பனை தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தவர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரே இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தது ஒரு வெட்ககேடான செயல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை WCCB (wildlife crime control bureau) சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் மகாராஷ்டிரா வனத்துறை குழுவுடன் இணைந்து, டெல்லி துவாரகாவில் மிஷ்ரம் ஜகாதிற்கு சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொண்ட சமயம், மிஷ்ரம் ஜகத் ரூ14.8 லட்சம் மதிப்புள்ள புலிகளின் தோல் மற்றும் கழிவுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் கள அதிகாரியாக பணியாற்றியதற்கான அடையாள அட்டையை திரும்ப பெற்றதாக WCCB கூடுதல் இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய பொழுது, “இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கும் நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட புலிகளின் தோல்கள் மற்றும் எலும்புகள், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இருந்து வந்துள்ளது. உடனடியாக எங்களின் சிறப்பு புலனாய்வு குழு மாராஷ்டிரா வன அதிகாரிகளுடன் சேர்ந்து வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 இன் விதிகளின் கீழ் புலி வேட்டையாடுதல் மற்றும் சட்ட விரோத வர்த்தக செயல்பாட்டை ஆழமாக விசாரித்து வருகிறது” என்றார்.
முன்னதாக, கடந்த ஜூம் 28 அன்று குவஹாத்தியில் புலியின் உதிரி பாகங்கள் விற்பனை செய்த ஐந்து குற்றவாளிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.