வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல், ஐந்து வருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தன் குழந்தையோடு பெங்களூரு பேருந்து நிலையத்தில் நிர்க்கதியாக நின்று கொண்டிருந்தார் சிஃபியா கனீஃப். 20 வயதிலேயே கணவரை இழந்து விதவையான சிஃபியா, அப்போதே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். தனது வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வரவும், பழையபடி பள்ளி செல்லவும் வேலை தேடவும் பெங்களூரு நகரமே அவருக்கு கடைசி புகலிடமாக இருந்தது. ஆனால் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்திருந்த நண்பர்கள் அவரை கடைசி நேரத்தில் கைவிட்டார்கள்.
தான் பாட்டி என்று அன்போடு அழைக்கும் நபர் வந்து மீட்கும் வரை சிஃபியாவிற்கு போக்கிடம் எதுவும் இல்லை. ஆம், பேருந்து நிலையத்தில் அவர் சந்தித்த வயதான அந்த பெண்மணி தான், சிஃபியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உணவழித்து, இருப்பிடமும் கொடுத்து அடுத்த எட்டு மாதங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
‘’எனது கணவர் உயிரோடு இருந்த போது சில காலம் பெங்களூரில் வசித்தோம். அப்போது அங்கு சில நண்பர்கள் இருந்தனர். நான் உதவி கேட்டபோது அவர்கள் உதவுவதற்கு தயாராகவே இருந்தார்கள். ஆனால் என் இளைய மகனை அழைத்துச் சென்ற போது அவர்கள் குடும்பம் என்னை ஏற்க மறுத்துவிட்டனர். எனக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து பல மைல் தூரம் தள்ளியிருந்தோம். யாருடைய உதவியும் இன்றி மிகவும் பயந்துபோய் இருந்தேன்.
அந்த சமயத்தில் ஒரு வயதே ஆகியிருந்த என் மகனின் உடல் காய்ச்சலில் கொதித்து கொண்டிருந்த்து. எனக்கோ நகரத்தைப் பற்றி எதுவும் தெரியாது.
வேறு வழியின்றி இரண்டு இரவுகளும் மஜெஸ்டிக் பேருந்து நிலையத்தில் தான் உறங்கினேன். பாட்டி மட்டும் என்னை அழைத்துச் செல்லாவிட்டால் நான் இதிலிருந்து மீண்டிருக்கவே முடியாது” என நினைவு கூர்கிறார் சிஃபியா.
தொடர்ந்து அவர், “என் மகளும் 22 வயதிலேயே விதவை ஆகிவிட்டாள். நீயும் அவளைப் போலவே இருக்கிறாய் என பாட்டி கூறுவார். தன்னோடு இருக்குமாறு அவர் வற்புறுத்தி வந்தார். கால்சென்டரில் வேலை பார்த்துக் கொண்டே இடையில் நின்ற 11 மற்றும் 12-ம் வகுப்பை அஞ்சல் வழியில் படித்தேன். என் மகனை அவர் பார்த்துக் கொண்டதால் தான் இதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. இதுநாள் வரை இதற்காக அவர் என்னிடம் எந்த பணமும் பெற்றதில்லை’’ என்கிறார் அவர்.
ஆனால் சில மாதங்கள் கழித்து பெங்களூருவின் தினசரி வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாயும் மகனும் திணறினர். கேரளாவில் உள்ள சிஃபியாவின் மூத்த மகனுக்கும் தாயின் அரவணைப்பு தேவையாக இருந்தது. ஆகவே சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்தார் சிஃபியா. ஆனால் இந்தமுறை பாட்டியின் ஆசிர்வாதம் மற்றும் தன்னுடன் என்றும் நிலைத்திருக்கும் படியான படிப்பினைகளோடு ஊருக்கு வருகிறார். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டே அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்ற தொடங்கினார் சிஃபியா. தான் ஈட்டும் சிறிய வருமானத்தை கொண்டு தன்னைப்போல் உதவி தேவைப்படும் விதவைப் பெண்களுக்கு சேவை செய்யவும் முடிவெடுத்தார் சிஃபியா.
“பாட்டி எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கற்றுக் கொடுத்துள்ளார். உதவி தேவைப்படுவோரை ஒருபோதும் கைவிடாதே என்பது அவர் சொல்லி கொடுத்த முக்கியமான பாடம். இங்கு எனது சொந்த ஊரிலும், எந்த உதவியும் கல்வியும் இல்லாத விதவைகளை பற்றி யோசித்தேன்”. என்று கூறும் சிஃபியா, உதவி செய்ய ஆர்வமாக உள்ள பெண்களை கண்டுபிடிப்பதற்காக ஃபேஸ்புக்கில் Chithal என்ற பெயரில் தனியாக பேஜ் ஒன்றை ஆரம்பித்தார். உதவி தேவைப்படும் விதவைகள் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டே 2015-ம் ஆண்டு தான் ஆரம்பித்த சிதல் தொண்டு நிறுவனத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
இன்று 100 குடும்பங்கள் தங்கள் மாதாந்திர வருமானத்தை பெறுவதற்கும், 38 விதவைகள் அரசாங்கத்தின் ஓய்வூதியம் பெறுவதற்கும், நூற்றுக்கணக்கானோர் கல்வி பெறவும் உதவி புரிந்துள்ளார் சிஃபியா. மேலும் 2013-ம் ஆண்டிலிருந்து கணவரை இழந்த 60 குடும்பங்களின் மொத்த செலவுகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்.
கடந்த ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற விழாவில், தான் இதுவரை செய்த பணிகளுக்காக ‘நீரஜா பனோட்’ விருதை பெற்றார் சிஃபியா. கராச்சிக்கு விமானத்தை கடத்தி சென்ற போது பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை இழந்த விமானப் பணிப்பெண்ணான நீரஜா பனோட்டின் நினைவாக இந்த விருது 1990-ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தன்னுடைய கஷ்ட காலத்தில் உதவி புரிந்தவர்களை மறக்காமல் இருக்கிறார் சிஃபியா.. “பாட்டிக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் ஒருமுறை அவரை விமானத்தில் அழைத்துச் சென்றேன். விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் கருப்பு நிறத்தில் முடி இருக்க வேண்டும் என்று நினைத்த பாட்டி, தன் முடிக்கு கருப்பு நிற டையை அடித்துக் கொண்டார்” என பாட்டியோடு வாழ்ந்த நாட்களை நினைவு கூர்கிறார் சிஃபியா.
அடுத்தவர்களை கவனித்து கொள்ளும் அதே சமயத்தில் கல்லூரி மூலம் தனது படிப்பையும் தொடர்கிறார். சமூகப் பணியில் முதுகலை, பொது நிர்வாகத்தில் டிப்ளமோ மற்றும் பி.எட் முடித்துள்ளதோடு இப்போது இலக்கியத்தில் முதுகலை படித்து வருகிறார். எம்.ஃபில் படிக்கும் திட்டமும் உள்ளது என்று கூறும் சிஃபியா, வருமானத்திற்காக தன்னம்பிக்கை மற்றும் டியூஷன் வகுப்புகளை எடுத்து வருகிறார். விரைவில் தனது பால்யகால நண்பரை திருமணம் செய்யவுள்ளார் சிஃபியா.