ரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் ?

ரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் ?
ரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் ?
Published on

வரிசையில் நின்று வாக்களிப்பதில் இருந்து சத்தமின்றி உதவுவது வரை எதிலும் வித்தியாசமானவர் அஜித்!

அப்படித்தான், சென்னையில் தான் சந்திக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில், ரசிகர்களை தேடி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தியதும்!

ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு நாளில் ரசிகர் மன்றத்தினரை, சந்திப்பார் அஜித். பெரிய கல்யாண மண்டபம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் அடுத்த மாதம் வேறு பகுதி, வேறு ரசிகர்கள் எனச் செல்வார். இதற்காக ஒரு டீமே செயல்பட்டது. 

இப்படி ரசிகர்கள் மீது பாசம் கொண்டிருந்த அஜீத், திடீரென ரசிகர் மன்றங்களைக் கலைத்து அதிரடி முடிவெடுத்தார், தனது நாற்பதாவது பிறந்த நாளுக்கு முன்! அதாவது 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி! 

ஏன்?

ஒவ்வொரு வருடமும் அஜீத் பிறந்த நாளுக்கு (மே 1) அவர் வீட்டின் முன் ரசிகர்கள் கூடுவது வழக்கம். அவர்களைச் சந்திப்பார் அஜித். சில நேரம் புகைப்படமும் எடுத்துக்கொள்வார். அன்று வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் முன்பாகவே அஜித் வீட்டுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூடினார்கள், கூடிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், ரசிகர்களைச் சந்திக்க அஜித் வர இயலவில்லை. தாமதமாக வந்து சந்தித்தார். 

அதற்குள் ரசிகர்கள் கூச்சலிட்டனர். நீண்ட நேரம் காத்திருந்ததாகத் தெரிவித்தனர். வெளியூரில் இருந்த வந்திருந்த ரசிகர்கள், கஷ்டப்பட்டு வந்ததாகச் சொன்னார்கள். சிலர், அவரைப் பார்க்க காலையில் இருந்தே சாப்பிடாமல் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். இது அஜித் மனதை பாதித்தது. தனக்காக, ரசிகர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே என்று நினைத்தார்.

ஒவ்வொரு வருடமும் இதே நிலைதான். பிறந்த நாளன்றும் அதற்கு சில நாட்களுக்கு முன்னும் அவர் வீட்டுக்கு ரசிகர்கள் வந்துவிடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், சில ரசிகர்கள், மன்றத்தை தங்கள் சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதும் அவருக்கு வருத்தத்தை தந்திருந்தது. 


அதோடு, ரசிகர்கள் தன்னை புகழ்பவர்களாக மட்டுமல்லாமல் சமுதாய நோக்கத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்பிய வர் அஜித். ஆனால், அவர் மன்றத்தைச் சேர்ந்த சிலர், மன்ற கொடியுடன் அரசியல் கட்சி பிரசாரங்களில் கலந்துகொண்டதும் அவரை பாதித்தது. ‘அரசியல் லாபங்களுக்காக எப்போதும் என் ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்’ என்றும் கூறி வந்தவர் அவர். 

இந்நிலையில்தான், அன்று ரசிகர்களைச் சந்தித்துவிட்டு வீட்டுக்கு சென்ற அஜித், யாரும் எதிர்பார்த்திராத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் தனது மன்றங்களை கலைக்கும் முடிவு. அந்த அறிவிப்பு, பரபரப்பாகப் பேசப்பட்டது. 

அப்போது அவர் அனுப்பிய அறிக்கை இதுதான்!

வணக்கம் பல,
’அமராவதி’ திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் ’மங்காத்தா’ 50-வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும்
ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் இந்த அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

நீண்ட நாட்களாகவே என்னைச் சிந்திக்க வைத்த ஒரு கருத்தைச் சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை, எனது சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும்- சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன். 

கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து.

வரும் மே மாதம் 1 ஆம் தேதி எனது நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை என் முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவும் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவளிக்கும் என உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.


அஜித்குமார்.

ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகவே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்தநாள். இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்ட அவரது ரசிகர்கள் 2011ம் ஆண்டு அஜித் அளித்த அறிக்கையை இன்றும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com