ஐஃபோனோ, ஆண்ட்ராட்டு ஃபோனோ புதிதாக அறிமுகமான மாடலுக்கு இருக்கும் மவுசும் மதிப்பும் பழைய மாடல்களுக்கு இருப்பதில்லை. அதனால்தான் எப்போதுமே ஃபோன் பிரியர்களுக்கு அடுத்து அறிமுகமாகவுள்ள புதிய மாடல்களை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், இதில் ஐஃபோன் விதிவிலக்காக இருக்கிறது.
எப்போதுமே புதிதாக அறிமுகமாகும் மாடல் மட்டும்தான் சிறந்தது என கருத வேண்டியதில்லை. ஒரு சில அம்சங்களில் சமசரம் செய்துகொள்ளத் தயாராக இருந்தால், முந்தைய மாடல் ஃபோனே சிறந்ததாக இருக்கும். இதற்கு உதாரணம் தேவை என்றால், முந்தைய ஐஃபோன் 11 மாடலையே எடுத்துக்கொள்வோம். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ஐஃபோன் 13 மாடலைவிட இந்த பழைய மாடலே பலவிதங்களில் மேம்பட்டது என தொழில்நுட்ப இணையதளமான சிநெட் (cnet) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், இந்த மாடலை அடித்துக்கொள்ள முடியாது' என வாதிடும் அந்தக் கட்டுரை, ஐஃபோன் 11 மாடல் ஏன் சிறந்தது என்பதற்கான காரணங்களையும் விரிவாக அலசியுள்ளது.
முதல் காரணமாக, இதன் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 500 டாலர் எனும் விலையில் இந்த 64 ஜிபி ஃபோன், புதிய ஃபோனை விட 300 டாலர் குறைவானது என்பது முக்கிய விஷயமாகிறது. ஆப்பிளின் பட்ஜெட் ஃபோனான ஐபோன் எஸ்.இ, மாடல் இன்னும் 100 டாலர் குறைவானது என்றாலும், இந்த ஃபோனில் உள்ள அம்சங்களை மனதில் கொண்டால், இது பெரிய வேறுபாடல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், புதிய ஐஃபோன் அல்லது கடந்த ஆண்டு வெளியான ஐஃபோன் 12 ஆகியவற்றுக்கு பதிலாக பழைய ஃபோனை தேர்வு செய்யும்போது, சில அம்சங்களை இழக்க வேண்டியிருக்கும்தான். புதிய ஐஃபோனில் உள்ள 5ஜி சப்போர்ட் மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்களை உதாரணமாக குறிப்பிடலாம். அதேபோல ஒ.எல்.இ.டி திரையும் இல்லாமல் போகலாம்.
இருப்பினும், 5ஜி வசதி இப்போதைக்கு பெரிய வேறுபாடாக அமையவில்லை என்பதை கருத்தில் கொள்ளும்போது 300 டாலர் குறைவான பழைய ஐஃபோன் அசத்தலானதே. எப்படியும் 5ஜி-க்கு ஏற்ற செயலிகளும் இன்னும் பெரிய அளவில் உருவாகவில்லை. எனவே 5ஜி இல்லாததால் அதிக இழப்பு இல்லை எனக் கருதலாம்.
மற்றபடி ஐஃபோன் 11 அடிப்படையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐஃபோன் 8 மாடலில் இருந்து முன்னேறி வருபவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதன் பயோனிக் பிராசஸர் வேகமான செயல்பாட்டை அளிக்க கூடியது. மேலும், இது யு1 சிப் கொண்டு உருவான முதல் ஃபோனாக அமைகிறது. வயர்லெஸ் அம்சங்களுக்கு இது மிகவும் ஏற்றது.
மேலும், இந்த மேம்பட்ட சிப் கொண்டிருப்பதால் ஆப்பிள் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தாலும் இந்த ஃபோன் பின்தங்கிவிடாது. இதன் திரை புதிய ஃபோன் திரை அளவுக்கு துல்லியமானது இல்லை என்றாலும், இன்ஸ்டா மற்றும் வீடியோ பார்க்க ஏற்றது.
பேட்டரியை பொறுத்தவரை ஐஃபோன் 12-க்கு நிகரான ஆற்றலை கொண்டுள்ளது. 17 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு இந்த சேமித்திறனும் அபாரம். 64 ஜிபியில் நிறைய சேமிப்பு ஆற்றல் இருக்கிறது. கேமரா அம்சங்களை எடுத்துக்கொண்டாலும், புதிய ஃபோன்களுக்கு நிகரான அம்சங்கள் இதிலும் இருக்கின்றன.
அதேநேரத்தில் விலை குறைந்த ஐஃபோனுடன் ஒப்பிட்டால் இதில் உள்ள அம்சங்கள் அதிகம்தான். இப்படி வாதிடுகிறது சிநெட் கட்டுரை. இது ஐஃபோனுக்கு மட்டும் அல்ல, பொதுவாக எல்லா போன்களுக்குமே பொருந்தும் அல்லவா?!
உறுதுணைக் கட்டுரை: c|net
தொடர்புடைய செய்தி: ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்