"நன்றிக் கடன்" - தென்னிந்திய படங்களுக்கு டாப்ஸி முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி

"நன்றிக் கடன்" - தென்னிந்திய படங்களுக்கு டாப்ஸி முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி
"நன்றிக் கடன்" - தென்னிந்திய படங்களுக்கு டாப்ஸி முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி
Published on

இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த படங்களால் கோலோச்சி வரும் நிலையிலும் தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னிலை வகித்து வந்தாலும், தென்னிந்திய படங்களுக்கு முக்கியத்துவதும் கொடுப்பது குறித்து டாப்ஸி தெளிவுபடுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் 'அனபெல் சேதுபதி'. இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. இந்தப் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரத் தவறியது வேறு கதை. ஆனால், படம் தொடர்பாக பேசியிருக்கும் டாப்ஸி, "இந்த ஸ்கிரிப்ட் இந்தி சினிமாவில் எனக்கு கிடைத்தாலும் செய்திருப்பேன். ஆனால், இந்தியில் ஒரு நாயகிக்காக இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை எழுத மாட்டார்கள். தென்னிந்திய சினிமாவில் மட்டுமே இந்த ஜானர் திரைப்படங்களை விரும்புகிறார்கள். மேலும், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய இதுபோன்ற கதைகளை எழுதுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டாப்ஸி இந்தி சினிமாவை பற்றி இப்படிக் கூறுவது இது முதல்முறையல்ல. இத்தனைக்கும் பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 2011-ஆம் ஆண்டில் வெற்றிமாறனின் தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான பின் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு நிகராக பாலிவுட்டிலும் கோலோச்சி வருகிறார். 'தப்பாட்', 'பட்லா', `பிங்க்' என முக்கிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். என்றாலும் இப்போதுதான் அவரை சோலோவாக கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஹசின் தில்ரூபா படத்தை தொடர்ந்து, 'ராஷ்மி ராக்கெட்', 'லூப் லாபேடா', 'டோபாரா', 'சபாஷ் மிது' என அடுத்தடுத்து முக்கிய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களில் அறிமுகமாகி பாலிவுட் வரை சென்ற நடிகைகள் பலரும் மீண்டும் தென்னிந்திய சினிமா பக்கம் வரமாட்டார்கள். ஆனால், டாப்ஸியை பொறுத்தவரை பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் அதேநேரத்திலும் தென்னிந்திய சினிமாவில் பணிபுரிந்து வருகிறார். மேலும், ''ஒருபோதும் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை கைவிட மாட்டேன்'' எனக் கூறும் டாப்ஸி, அதற்கு காரணமாக முன்வைப்பது 'நன்றிக் கடன்'.

''நன்றியின் வெளிப்பாடாகவே தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால், மொழிகள் தெரியாதபோதும் என்னை நடிகையாக்கியது தென்னிந்திய சினிமாதான். சினிமாவின் அடிப்படையே நான் அங்கேதான் கற்றுக்கொண்டேன். எனது தவறுகளை அறிந்துகொண்டதும் அங்கேதான். பாலிவுட் சினிமாவில் பணிபுரிவதால் நான் தென்னிந்திய சினிமாவை பாலிவுட்டை விட ஒருபடி கீழாக நினைப்பேன் என யாரும் எண்ணிவிட வேண்டாம். அப்படி நினைப்பதை நான் விரும்பவும் இல்லை.

நன்றி கடன் என்பதை தாண்டி, தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை கைவிடுவது என்பது ஒரு வணிகத் தவறு ஆகும். நீங்கள் ஏற்கெனவே ஒரு மொழியில் அறிமுகமாகி நடிக்கிறீர்கள் என்றால், உங்களை நம்பி முதலீடு செய்ய தயாராக இருப்பார்கள். அத்துடன், உங்களை நம்பி உங்கள் படங்களை பார்க்க பார்வையாளர்கள் தயாராக இருப்பார்கள். அப்படி இருக்கும் திடீரென வேறு மொழிக்காக அவர்களின் நம்பிக்கையை இழப்பது தவறு. தென்னிந்திய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் முன்னனிலையில் இருப்பது எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. அதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றுள்ளார்.

டாப்ஸியின் இந்த எண்ணம் காரணமாகவே தற்போது தென்னிந்திய சினிமாவிலும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இதனால்தான் 'கேம் ஓவர்' போன்ற அவரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் படங்கள் தென்னிந்திய சினிமாவில் கிடைத்துவருகின்றன. இதோ இப்போது 'அனபெல் சேதுபதி' படத்தில் நடித்துள்ள டாப்ஸி, அடுத்து தெலுங்கில் 'மிஷன் இம்பாசிபிள்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இன்னும் சில படங்களில் கமிட் ஆகும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிக மொழிகளில் நடிப்பது ஒரு நடிகரை ஒரு மொழியில் மட்டுப்படுத்தாமல் இருப்பதோடு, அவருக்கான வணிகத்தையும் அதிகரிக்கிறது என நம்புகிறார் டாப்ஸி. ''குறிப்பாக, ஓடிடி போன்ற புதிய வரவுகள் திரைப்பட ரசிகர்களிடையே, மொழி வரம்புகளை குறைத்து வருகின்றன. இப்போது நிறைய படங்களை, மற்ற மொழி திரைப்படங்களை வரவேற்கிறார்கள். இதனால், பன்மொழியில் நடிப்பது ஒரு நடிகரின் திரை வணிகத்தை அதிகரிக்க உதவும்" என்றுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு டாப்ஸிக்கு கிடைத்து வரும் தென்னிந்திய திரைப்படங்கள் நாயகியை மையப்படுத்திய படங்களாக, பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் இல்லாத, பெரிய பட்ஜெட் இல்லாமல் சிறிய பட்ஜெட் படங்களாக கிடைத்து வருகின்றன. இது அவரின் நடிப்பையும் ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைக்கிறது என்பதால் டாப்ஸியும் அது போன்ற நல்ல கதைகளை விரும்பி தேர்ந்தெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை - India today

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com