விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்காதது விவாதத்தை எழுப்பியுள்ளது.
“எங்களது சிறந்த ஆடும் லெவன் அணி இது தான். அதனால் தான் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நாங்கள் ஆடும் லெவனை அறிவித்ததில் எந்த தவறும் இல்லை என கருதுகிறேன்” என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தோல்விக்கு பிறகு சொல்லி இருந்தார் இந்திய கேப்டன் கோலி. நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அந்த இந்திய அணிக்கும், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகின்ற இந்திய அணிக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. காயம் காரணமாக விலகிய கில்லுக்கு மாற்றாக கே.எல்.ராகுல் விளையாடுகிறார். இஷாந்த் ஷர்மாவுக்கு மாற்றாக முகமது சிராஜ் விளையாடுகிறார். மூன்றாவதாக அஷ்வினுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர் ஆடுகிறார்.
இதில் அஷ்வின் விளையாடாதது தான் பேசு பொருளாகி உள்ளது. ஏனெனில் அயலக தொடர்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதால் தான்.
அஷ்வினும் அயலக டெஸ்ட் போட்டிகளும்!
கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார் அஷ்வின். இதுவரை மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகள். அதில் 32 போட்டிகள் அயலக மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 10 போட்டி, இங்கிலாந்தில் 7 போட்டி, இலங்கையில் 6 போட்டி, வெஸ்ட் இண்டீசில் 4 போட்டி, தென் ஆப்பிரிக்காவில் 3 போட்டி, நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்தில் தலா ஒரு போட்டி அடங்கும்.
அதன் மூலம் 127 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் தலா இரண்டு அரை சதங்கள் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் அஷ்வின் எப்படி?
இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். எட்ஜ்பாஸ்டன், கென்னிங்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ரோஸ் பவுல் மற்றும் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானங்களில் விளையாடி உள்ளார். 200 ஓவர்கள் வீசி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 14 இன்னிங்ஸ் விளையாடி 261 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்சமாக 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அயல் நாட்டு மண்ணில் அஷ்வின் அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றிய நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கியுள்ளார் அஷ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் நான்காவது இடம், பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். இதனால் தான் அவரை அணியில் சேர்க்காதது பேசு பொருளாகி உள்ளது.
கோலியின் கணக்கு என்ன?
சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை காட்டிலும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை பரிசோதித்து பார்க்கலாம் என்ற முயற்சியில் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஹர்திக் பாண்ட்யா இல்லாததை இவர் மூலம் ஈடுகட்ட கோலி முயற்சி செய்யலாம்.
ஜடேஜாவை டிராப் செய்திருக்கலாமே?
இங்கிலாந்தில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா இரண்டு அரை சதங்களை பதிவு செய்துள்ளார். அதே போல பவுலராக 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஃபீல்டிங்கிலும் கெட்டிக்காரர். அதனால் அவர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
மேலும் இந்த தொடரில் இந்தியா 5 போட்டிகளில் விளையாட உள்ளதால் பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் சில ரிஸ்க்குகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளன. தற்போது தான் தொடர் ஆரம்பமாகி உள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன. அதில் அஷ்வின் நிச்சயம் இடம் பிடிப்பார் என நம்புவோம்.