மோடியின் அமெரிக்கப் பயணம்: இவ்வளவுதான் விஷயம்!

மோடியின் அமெரிக்கப் பயணம்: இவ்வளவுதான் விஷயம்!
மோடியின் அமெரிக்கப் பயணம்: இவ்வளவுதான் விஷயம்!
Published on

2017 ஜூன் 25 ஆம் தேதி போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றடைந்தார். ஜூன் 25 காலை போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலிருந்து வாஷிங்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டு தொழிலதிபர்கள், பெரு நிறுவன அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று டிரம்ப்பை சந்தித்து பேசும் மோடி, அதிபர் மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்திலும் பங்கேற்றார். டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிபர் மாளிகை இரவு விருந்துக்கு அழைக்கப்படும் முதல் உலகத் தலைவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் வருகை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடியை வரவேற்பதாகக் கூறியுள்ளார். முக்கியமான விஷயங்கள் குறித்து உண்மையான நண்பருடன் ஆலோசிக்க இருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்க ஐடி நிறுவன நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை

வாஷிங்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார் மோடி. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக், அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பண மதிப்பிழப்பு விவகாரத்தால் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்ததாகத் தெரிகிறது. மேலும், மேக் இன் இந்தியா திட்டம் குறித்தும் அமெரிக்க டெக் நிறுவன தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேச்சு

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசியதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனே முக்கியமானது. நாட்டின் நலனை பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது. இதற்கு இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை உதாரணமாக கூறலாம் என பாகிஸ்தானை மறைமுகமாகத் தாக்கினார். இந்த விவகாரத்தில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்ட நாட்டை தவிர பிற நாடுகள் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. இது தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. எனது ஆட்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்தும் மாற்றமடைந்துள்ளன. வளர்ச்சியடைந்த இந்தியாவைப் பற்றிய அமெரிக்க வாழ் இந்தியர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தைவிட எனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே சரியான இடத்தில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. புதிய இந்தியாவை பொறுத்தவரை இளைஞர்களே முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பலம். எப்போது அவர்களின் நம்பிக்கைகளுக்கு சரியான தலைவர்கள் கிடைக்கிறார்களோ, அதுவே அவர்களை சாதனையடையச் செய்கிறது. நாங்கள் மக்களின் நம்பிக்கைகளுக்காக எங்களது கொள்கைகளை தக்க வைத்து கொள்கிறோம். கடந்த மூன்று வருடங்களில் உலகில் எந்த மூலையிலுள்ள இந்தியர்கள் துன்பப்பட்டாலும் அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் உலகில் பல்வேறு இடங்களில் சிக்கிய சுமார் 80,000 பேரை இந்திய வெளியுறவுத்துறை மீட்டுள்ளது. மேலும் உலகிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தங்களுக்கு இந்திய தூதரகம் உதவும் என்று நன்கு உணர்ந்துள்ளனர் என்று பேசினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக மோடி - ட்ரம்ப் கூட்டாக குரல்

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து மோடியும், ட்ரம்பும் கூட்டாக பேசியதாவது, "பிற நாடுகளைத் தாக்க தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தன் மண்ணில் இடமளிக்காது என்று அந்நாடு உறுதியளிக்க வேண்டும். மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும்" என இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தினர். மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கவும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவும் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் வர்த்தகத்தை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பேசினர்.

இந்திய கடற்படைக்கு 22 ஆளில்லா உளவு விமானங்கள்

பாதுகாப்புத்துறையில் அமெரிக்கா - இந்தியா இடையே ஒத்துழைப்புக்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சில முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கார்டியன் ட்ரோன் எனும் 22 ஆளில்லா உளவு விமானங்கள் இந்திய கடற்படைக்காக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கப்படும். இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம் பெரிதும் பயன்படும். இந்த உளவு விமானங்களால் வானில் தொடர்ந்து 27 மணிநேரம் பறக்க முடியும், சுமார் 50000 அடி உயரத்தில் பறக்க முடியும். இதை கப்பலில் இருந்தும் இயக்க முடியும், தானியங்கியாகவும் செயல்படும் திறனுடையது. மேலும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்கள், சி-17 ரக ராணுவ விமானங்களும் பிற்காலத்தில் இந்தியா வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்திய கடல் பகுதியில் இந்திய கடற்படை விரைவில் நடத்தும் வருடாந்திர மலபார் போர் ஒத்திகையில் அமெரிக்க கடற்படையும், ஜப்பானின் கடல்வழி பாதுகாப்புப் படையும் சேர்ந்து பங்குபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு மோடி நெதர்லாந்து நாட்டிற்கு இன்று பயணமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com