குளித்தலையில் கபடி வீரர் ஒருவர் இன்று மாரடைப்பால் மரணம், ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போல் கபடி வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். விளையாட்டுகளின் போது ஏற்படும் மாரடைப்புகளுக்கு என்ன காரணம்? எப்படித் தவிர்க்கலாம்? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கின்றனர்.
பொதுவாகவே 100-இல் 4.5% நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் பிரதானமாக சில காரணங்களை பட்டியலிடுகின்றனர் இதயவியல் நிபுணர்கள்.
1. இதயத்துடிப்பு மாறுதல் என்று கூறப்படும் அரித்மியாசிஸ். அதிலும் குறிப்பாக வெண்ட்ரிகுலார் அரித்மியாசிஸ்.
ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை ஒருவரின் இதயத்துடிப்பு இருப்பது சீரானது. ஆனால், 200 க்கும் மேல் துடிப்பு செல்லும்போது ரத்த ஓட்டம் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் தடைபடுகிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
2. இதய தசை வீக்கம் - (ஹைப்போ ட்ரோபிக் அப்ஸ்ட்ரக்டிவ் கார்டியோ மையோபதி )- வெகு சிலருக்கு பிறப்பிலிருந்தே இதய தசைகளில் இருக்கும் வீக்கம் விளையாட்டு வீரர்கள் மற்றும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறது.
இதைத் தவிர, மகா தமனிக்குள் ரத்த ஓட்டம் குறைதல், பிறவியிலேயே ரத்தக் குழாய் சரியான இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருத்தல் (அனாமிலஸ் ஆரிஜின் ஆஃப் கொரோனரி ஹார்ட் டிசீஸ்), இரண்டு பெரிய ரத்தக் குழாய்களுக்கு நடுவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய் அமைந்திருப்பதால் ஏற்படும் அழுத்தம் , இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையே செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்டவற்றால் திடீர் மாரடைப்பு ஏற்படலாம் என்கின்றனர் இதயவியல் நிபுணர்கள்.
இதுகுறித்து இதயவியல் நிபுணர் மரு.செசிலி மேரி மெஜில்லா கூறுகையில், "விளையாட்டு வீரர்களின் மாரப்புகளுக்கு இதய தசை வீக்கமே பெரிதும் காரணமாகிறது. அவர்களுக்கு ஈசிஜி, எக்கோ பரிசோதனைகளை செய்ய வேண்டியது கட்டாயம். எளிய பரிசோதனை மூலம் இதய நோய்களை கண்டறிய முடியும். இதய நோய் கண்டறியப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் பரிசோதிப்பதால் இறப்புகளை தடுக்கலாம்” என்கிறார்.
இவை மட்டுமல்ல, கொழுப்புச்சத்து உடலில் அதிக அளவு தேங்கக் காரணமாகி வரும் நவீன பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் கலாசாரமும் மாரடைப்புகளுக்கு காரணமாகலாம். ஒரு விளையாட்டு வீரர் களத்திற்கு செல்லும் முன் அவருக்கான முழு உடல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உடலில் தேவையான அளவில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய சிறு சிறு உடல்ரீதியான பிரச்னைகள் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு கூட விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது என்றும், முழு உடல்நலத்துடன் இருப்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்த பிறகே விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். அப்போது தான் இதுபோன்ற திடீர் மாரடைப்பு மரணங்களில் இருந்து வீரர்களை காக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.