குளிர்காலம் வந்தாலே நம்மில் பலபேருக்கு காதடைப்பு ஏற்படும். பொதுவாக தொண்டை மற்றும் மூக்கில் வைரஸ் தொற்றால் சளி மற்றும் இருமல் ஏற்படுவதுதான் காதடைப்புக்கு காரணம். குளிர்காலத்தில் காதடைப்பு மட்டுமில்லாமல் மூக்கு ஒழுகுதல், அடைப்பு, உடல் வலி மற்றும் காய்ச்சல் போன்றவையும் ஏற்படும். குளிர்காலத்தில் சளி காய்ச்சல் ஏற்பட்டால் காது மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மந்தமான வலி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அடைப்பு
காதுகளிலுள்ள யூஸ்டாசியன் குழாயானது காதின் நடுப்பகுதியை மேல் தொண்டை மற்றும் மூக்கின் பின்பகுதியுடன் இணைக்கிறது. எனவே சளிப்பிடிக்கும்போது மூக்கிலுள்ள திரவமானது யூஸ்டாசியன் குழாயையும் அடைக்கிறது. இதனால் வலி மற்றும் அசௌகர்யம் ஏற்படுகிறது. மேலும் காதில் சீழ் அடைப்பும் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் காதடைப்பு ஏற்படுவதும் பின்னர் சரியாவதும் பொதுவாக நடப்பதுதான். ஆனால் அதுவே அதிகமாகும்போது தொற்றுக்கு வழிவகுக்கிறது.
நடுக்காதில் தொற்று
நடுக்காதில் ஏற்படும் அடைப்பை ஓட்டிடிஸ் என்கின்றனர். இது சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படுகிறது. அதாவது மூக்கு மற்றும் தொண்டையிலுள்ள வைரஸானது யூஸ்டாசியன் குழாய் வழியாக காதுக்கு செல்வதால் தொற்று ஏற்படுகிறது. தொற்றால் காது வீக்கம், சிவந்துபோதல் மற்றும் காது அடைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் காது கேளாமை, சீழ் வடிதல் மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேர்கிறது.
சைனஸ்
சைனசஸ் என்பவை நெற்றி, நாசி எலும்புகள், கன்னம் மற்றும் கண்களிலுள்ள காற்று நிறைந்த பகுதி. ஆரோக்கியமான சைனசஸில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் சளி மற்றும் காய்ச்சல் வரும்போது காலியாகவுள்ள சைனசஸ்களில் அடைப்பு ஏற்படுவதால் காது அடைப்பு ஏற்படுகிறது. சைனஸ் தொற்றை சைனசைட்டிஸ் என அழைக்கின்றனர். இதனால் காதில் அதீத அழுத்தம் ஏற்பட்டு வலி உருவாகிறது. மேலும் இதனால் தலைவலி, பல்வலி, இருமல், முகர்தலின்மை, வாய்துர்நாற்றம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.
காதடைப்பிலிருந்து விடுபட சில எளிய வழிகள்
சில இயற்கை வழிகள் காதடைப்பிலிருந்து விடுபட உதவும்.
மூக்கை அடைத்தல்
காதடைப்பிலிருந்து விடுபட வாயை மூடிக்கொண்டு மூக்கையும் அடைக்கவும். இது சீக்கிரத்தில் காதடைப்பிலிருந்து விடுபட உதவும்.
நாசி ஸ்ப்ரே
நாசி ஸ்ப்ரே மற்றும் வாய்வழி டிகோங்கஸ்டெண்ட்ஸ் போன்றவை விமானத்தில் பறக்கும்போது உதவியாக இருக்கும். இது மூக்கு மற்றும் சைனஸ் அடைப்புக்கும் உதவியாக இருக்கும். இவை மெடிக்கல்களில் எளிதாக கிடைக்கக்கூடியவை.
ஆவிபிடித்தல் அல்லது சூடான ஒத்தடம்
காதடைப்புக்கு சிறந்த தீர்வுகளில் இதுவும் ஒன்று. சுடுதண்ணீரில் குளித்துவிட்டு காதை சுற்றிலும் சூடான ஒத்தடம் கொடுப்பதும், ஆவி பிடிப்பதும் காதடைப்பால் ஏற்படும் அசௌகர்யத்தை குறைக்கும். ஆனால் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களாவது ஆவிபிடிப்பது அவசியம்.