தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியின் நாகலாந்து பிரிவு உபசார விழா நிகழ்வை அம்மாநில ஊடகங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டாக புறக்கணித்துள்ளனர். இதன் பின்னணியில், பத்திரிகையாளர்களிடம் அவர் காட்டிய வெறுப்பும் அலட்சியமும்தான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், அதுகுறித்த பின்னணியை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நாகாலாந்து மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக சமீபத்தில் மாற்றப்பட்டார். இதனையடுத்து சில நாள்கள் முன் நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். அவருக்கு நாகாலாந்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு நடக்கும் அறிவிக்கப்பட்ட உடனேயே, கொஹிமா பத்திரிகை கிளப் தலைவர் ஆலிஸ் யோஷோ அம்மாநில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ``ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிரிவு உபசார விழாவை கொஹிமா பிரஸ் கிளப் புறக்கணிக்க சொல்லி கட்டாயப்படுத்தாது. புறக்கணிக்கும் முடிவு உங்களுடையது. ஆனால், விழாவில் கலந்துகொள்ளும் முன் பழைய சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது. கொஹிமா பிரஸ் கிளப் உடன் ஒற்றுமையாக இருந்தால் எங்கள் பாராட்டு உங்களுக்கு இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு பின் ஆர்.என்.ரவி பிரிவு உபசார விழாவை நாகாலாந்து ஊடகங்கள் அனைத்தும் ஒருங்கே புறக்கணித்தன. இந்த புறக்கணிப்பு நாகாலாந்து உடனான ஆர்.என்.ரவியின் கடைசி தருணத்தில் சலசலப்பை உண்டாக்கியது.
புறக்கணிப்புக்கு காரணம் என்ன? - நாகாலாந்து மாநிலத்தின் 19-வது ஆளுநராக கடந்த 2019 ஜூலையில் நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி. ஆளுநராகப் பொறுப்பேற்றபோதே நாகா பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெறும் முக்கியப் பொறுப்பும் தரப்பட்டது. இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆர்.என்.ரவி ஆரம்பம் முதலே நாகாலாந்து ஊடகங்களிடம் கடுமை காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஊடகங்களை அவர் மதித்தில்லை என்பதே புறக்கணிப்பின் பிரதான குற்றச்சாட்டு. பத்திரிகையாளர்கள் மீதான அவரின் அலட்சியம், வெறுப்பாக மாறிப்போனது. இதற்கு உதாரணமான மோசமான சம்பவங்கள் ஏராளம் என்னும் பத்திரிகையாளர்கள், ஆளுநராக பதவிவகித்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தியதில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் நாகா பேச்சுவார்த்தை தொடர்பாக கூட அவர் பத்திரிகைகளை சந்திக்கவில்லை என்பதாலே புறக்கணிப்பு என்கிற ஒருமித்த முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள்.
கொஹிமா பத்திரிகை கிளப் (கேபிசி) தலைவர் ஆலிஸ் யோஷோ இதுதொடர்பாக பேசுகையில், "ஆளுநர் ரவியின் பிரியாவிடை நிகழ்வை புறக்கணிக்கும் முடிவை கேபிசி ஒருமனதாக எடுத்தது. ரவி தனது இரண்டு வருட பதவியில் பத்திரிகை மற்றும் ஊடக சகோதரத்துவத்தை எவ்வாறு முற்றிலும் அலட்சியமாக நடத்தினார் என்பதை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாகாலாந்தை தளமாகக் கொண்ட உள்ளூர் மற்றும் தேசிய ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களை ஒதுக்கி வைத்தது, பத்திரிகையாளர்கள் பல முறை அணுகியபோதும் பேச மறுத்தது என ரவி முழு வெறுப்புடன் நடந்து கொண்டார். நாகாலாந்தை தளமாகக் கொண்ட பத்திரிகை/ஊடகத்தை அவர் முற்றிலும் புறக்கணித்ததன் மூலம் அவர் நாகாலாந்து மக்களுக்கு அவமதிப்பை செய்தார்.
ரவியின் காலத்துக்கு முன்பு, ராஜ் பவன் அணுக முடியாததாக இருந்ததில்லை. ஆனால், ரவி அணுக முடியாத அளவு அதை மாற்றினார். நாகாலாந்தில் பத்திரிகை மற்றும் ஊடக சகோதரத்துவத்துக்கு எதிராக இருந்த ஆளுநர் ரவியின் நடத்தை அடுத்து வருபவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக புறக்கணிப்பு முடிவை எடுத்தோம்" என்று கூறியிருந்தார்.
நாகாலாந்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கல்லூல் டே என்பவரும் ஆளுநர் ரவிக்கு கடும் எதிர்வினையை பதிவு செய்திருந்தார். தனது டிவிட்டர் பக்கம் மூலமாக, ``ரவியை போல இதற்கு முன் எந்த ஆளுநரும் விசித்திரமாக நடந்துகொண்டு கிடையாது. தனது ஆணவமான நடத்தை காரணமாக நாகலாந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் ரவி எப்போதும் நினைவில் வைக்கப்படுவார். பிரியாவிடை நிகழ்வு புறக்கணிப்பு என்ற பிரஸ் கிளப் எடுத்த முடிவுகளை நான் வெகுவாக வரவேற்கிறேன். இந்த புறக்கணிப்பை இதற்கு முன்பே செய்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதேபோல், பிடிஐ மூத்த பத்திரிகையாளர் நாராயண பகதூர் என்பவரும், ``நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. இதற்கு முன் பல முறை அரசு விழாக்களில் அழைப்புகள் இல்லாதபோதும் கலந்துகொண்டு நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளோம். அது எங்கள் கடமை. ஆனால் தற்போதைய பிரஸ் கிளப் புறக்கணிப்பை முழு மனதுடன் ஆதரிக்கிறேன். அதற்கு தகுதி வாய்ந்த நபர் தான் ரவி. தனது பதவிக்காலத்தில் பத்திரிகையாளர்களை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்தியது கண்டிக்கதக்கது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
நாகாலாந்து ஊடகங்களின் இந்தப் புறக்கணிப்பு பேசுபொருளாகி இருக்கும் நிலையில்தான் தமிழக ஆளுநராக பதவியேற்கப் போகிறார் ஆர்.என்.ரவி. இதனால் இங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- மலையரசு