நாகாலாந்து மக்களும் ஹார்ன்பில் திருவிழாவும் - தற்போதைய நிறுத்தமும், வரலாறும்!

நாகாலாந்து மக்களும் ஹார்ன்பில் திருவிழாவும் - தற்போதைய நிறுத்தமும், வரலாறும்!
நாகாலாந்து மக்களும் ஹார்ன்பில் திருவிழாவும் - தற்போதைய நிறுத்தமும், வரலாறும்!
Published on

நாகாலாந்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 10ம் தேதி வரை ஹார்ன்பில் திருவிழா (Hornbill Festival)வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2000ம் ஆண்டு முதல் மாநில அரசின், சுற்றுலா மற்றும் கலை, கலாசார துறைகள் சார்பில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டு நடைபெறாமல் இருந்த ஹார்னபில் திருவிழா தற்போது நடைபெற்று வந்த நிலையில், அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லபட்டதையொட்டி திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஹார்ன்பில் திருவிழா என்றால் என்ன?

நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களின் நாட்டுப்புற கதைகளில் இருவாட்சி பறவைக்கு பெரிய அளவில் முக்கியத்தும் அளிக்கப்படும். இருவாட்சி பறவையின் ஆங்கிலப்பெயர் தான் ஹார்ன்பில். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், விழிப்புடன் செயல்படக்கூடியவை. கம்பீரமானவையும் கூட. விழிப்புத்தன்மை மற்றும் கம்பீரத்தன்மை போன்ற பண்புகளுக்காக நாகாலாந்து இன மக்களால் போற்றக்கூடிய ஹார்ன்பில் பறவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

'திருவிழாக்களின் திருவிழா' என அழைக்கப்படும் இந்த திருவிழாவில் பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் மரபு ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் விதமாக இது அமையும். நாகாலாந்து தலைநகரான கொஹிமாவை ஒட்டியுள்ள, `கிஸாமா' கிராமத்தில், அரசே ஒரு பெரிய திறந்தவெளி மைதானம் அமைத்து, பல வணிகக் கட்டடங்கள் அமைத்து, ஹார்ன்பில் விழாவை நடத்துகிறது. பத்து நாள் திருவிழாவில், கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு "கிங்க் சில்லி" (King Chilly) சாப்பிடும் போட்டி, நாகாலாந்தின் புகழ்பெற்ற அன்னாசிப்பழம் சாப்பிடும் போட்டி என்று தினமும் களைக் கட்டும் இந்த திருவிழா.

தற்போது நடைபெற்றுவரும் 22வது ஆண்டு ஹார்ன்பில் திருவிழாவின் முதல் நாளில் மட்டும் 12,420 பேர் கலந்துகொண்டுள்ளனர். உள்ளூர்வாசிகளைத்தாண்டி, ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹார்ன்பில் திருவிழாவின் போது 1.12 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாகாலாந்துக்கு வந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் 2.82 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

நாகாலாந்து மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் குறித்த நெருக்கமான புரிதலையும், உணவு, ஆடல், பாடல், பாரம்பரிய நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது இந்த திருவிழா. 10 நாட்களும் கலை மற்றும் கைவினைப்பொருட்களின் விற்பனை, மூலிகை மருந்து விற்பனை, மலர் கண்காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். நடனங்களைத்தவிர்த்துவிட்டு பார்த்தால், பேஷன் ஷோக்கள், உள்ளூர் விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை திருவிழாவின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஹார்ன்பில் இன்டர்நேஷனல் ராக் ஃபெஸ்டிவல், நடத்தப்படுகிறது, அங்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ராக் இசைக்குழுக்கள் நிகழ்ச்சி நடத்துகின்றன.2000-ம் ஆண்டு முதல், நாகா பழங்குடியினரின் கலாச்சார பன்முகத்தன்மையின் கண்ணாடியாக திகழும் இந்த திருவிழா மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆண்டுதோறும் மகிழ்ச்சியாக இந்த திருவிழாவை கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு இந்தாண்டு 14 அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு அழியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com