இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இடி மின்னல் தாக்கி 1619 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேர் வரை உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இடி மின்னல் தாக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றங்களில் மிக முக்கியமாக இடி மின்னல் தாக்குலதில் 35.3 சதவிம் பேர் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
இதில் கடந்த ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு தொடங்கி மார்ச் 31, 2021 தேதி முடிய இந்தியாவில் இடி மின்னல் தாக்கியதால் 1,619 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பீகார் மாநிலத்தில் 401 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 238 பேரும், மத்திய பிரதேசத்தில் 228 பேரும் பலியாகி இருக்கிறார்கள். மொத்த மரணத்தில் 53 சதவிதம் இந்த மூன்று மாநிலங்களில் ஏற்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல இடி மின்னல் ஏற்படுவதும் கடந்த ஓராண்டில் 34 சதவிதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
2019 - 2020 ஆம் ஆண்டில் 138,00,000 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. அதேவேளையில் 2020- 2021 ஆம் ஆண்டு காலத்தில் 185,44,367 முறை மின்னல் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்காண்ட் மாநிலத்தில் மின்னல் அதிக முறை தாக்கியிருக்கிறது. அதில் அதிகபட்சமாக ஒடிசாவை 14.20 லட்சம் முறை மின்னல் தாக்கியிருக்கிறது. மொத்தம் 207 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மின்னல் தோன்றுவது எதனால்?
மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போதோ, வேறு பல காரணங்களாலோ மின்னூட்டம் பெற்றுவிடும். எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது காற்றின் வழியாக மின் பரிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகிற ஒளிக்கீற்றுதான் மின்னல். இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. இடிச்சத்தம் அதற்குப் பிறகுதான் நம் காதுகளை அடைகிறது.
மின்னல் நிலத்தை தாக்குவது எப்படி?
வானில் தோன்றும் மின்னல் மரங்களின் வழியே நிலத்தில் பாய்ந்துவிடும். விலங்குகளும், மனிதர்களும்கூட மின்னல் தாக்கி இறக்க நேரிடுகிறது. மின்னல் ஏற்படும் பகுதியைவிட உயரத்தில் விமானங்கள் பரப்பதால், அவை மின்னலால் பாதிப்படைவதில்லை. இருந்தாலும் சில சமயம் ஆகாய விமானங்களும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வட இந்தியாவில் பருவக் காலங்களின்போது அதிகமான மின்னல்கள் தோன்றி நிலத்தை தாக்குகிறது. அப்போது விவசாயிகள் நிலத்தில் வேலையில் ஈடுபடும்போது அவை தாக்கி உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
மின்னலின் வகைகள்
மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் (Inter-cloud): ஒரே மேகத்திற்குள் உள்ள நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி கவர்தலினால் மின்னல் ஏற்படலாம். இதனை மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் எனப்படுகிறது.
வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் (Intra-cloud): ஒரு மேகத்தில் உள்ள நேர்மின்அயனி அருகில் இருக்கும் மற்றொரு மேகத்தின் எதிர்மின் அயனியை கவர்தலினால் ஏற்படும் மின்னல் வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் என்கிறோம்.
மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் (Cloud-to-ground): மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எதிர்மின் அயனியானது புவியில் இருக்கும் நேர்மின் அயனியை கவர்ந்திழுக்கும்போது ஏற்படும் மின்னல் மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் ஆகும். இதுவே மிகவும் ஆபத்தானது. இவ்வகை மின்னலே பூமியில் இருக்கும் மரம், கட்டடம் உட்பட்ட உயரமான இடங்களை தாக்கி, சில நேரங்களில் மனிதனையும் பலி வாங்குகிறது.