காடுகள் சுருங்க சுருங்க மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஓரு மாநிலம் என்று இல்லாமல் பெரும்பாலான மாநிலம் அனைத்திலும் இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. அதிலும் யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகும் பிரச்னையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவது கவலை தரும் விஷயமாக மாறி வருகிறது.
அண்மையில் கூட சமூக வலைத்தளமான ட்விட்டரில் வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலானது. அதில் அசாம் மாநிலத்தின் காசிரங்கா வனப்பகுதியையொட்டிய சாலையில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது சிறுத்தையொன்று பாய்ந்து தாக்கியது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சைக்களில் சென்ற இளைஞருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஓடிசா, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் சிறுத்தை - மனிதன் இடையிலான மோதல் தொடர் கதையாக இருக்கிறது.
இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை எவ்வளவு?
2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 12,172 - 13,535 சிறுத்தைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014 கணக்கெடுப்பின்படி ஒப்பீடு செய்து பார்த்தால் இந்தியாவில் 63 சதவிதம் அளவுக்கு சிறுத்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிலும் மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கோவா மாநிலங்களில் அதிகளவிலான சிறுத்தைகள் வாழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக சிறுத்தைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.
சிறுத்தைகள் ஊருக்குள் புகுவது ஏன்? அதற்கான காரணம் என்ன? அவை ஊருக்குள் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
சிறுத்தையின் குணம்: சிறுத்தைகள் மனிதர்களைக் கண்டு பயந்து ஒதுங்கிப்போகும் இயல்புடையவை. ஒவ்வொரு சிறுத்தையும் அதற்கென குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கேயே சுற்றித் திரிந்து வாழும். ஒரு பகுதியிலிருந்து சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்துவிட்டால் அந்த இடத்துக்கு வேறொரு சிறுத்தை (பொதுவாக வயதில் சிறிய) குடி புகுந்துவிடும். புதிய இடமாறுதலால் அந்தச் சிறுத்தை சில வேளைகளில் எதிர்பாராதவிதமாக மனிதர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கக் கூடும்.
சிறுத்தைகள் ஊருக்குள் வருவது ஏன்?
சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களில் பல காலமாகவே வாழ்ந்து வருகின்றன. பெருகும் மக்கள் தொகை அதனோடு பெருகும் மனிதனின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கால்நடைகளின் எண்ணிக்கை, இதனால் அழியும். காட்டுப்பகுதி, காட்டினுள் போதிய மான், காட்டுப்பன்றி முதலான இரை உணவு இல்லாமல் போதல் ஆகிய காரணங்களாலேயே சிறுத்தைகள் கால்நடைகளையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களையோ தாக்க நேரிடுகிறது. இதுவே சிறுத்தை - மனிதன் மோதலுக்கு வித்திடுகிறது. மேலும், மனிதர்களுக்கு ஊறு விளைவிப்பவை எனக் கருதப்படும் சிறுத்தைகளைப் பொறி வைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது. மாறாக, இது பிரச்னையை மேலும் அதிகரிக்கும் என்று வன உயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுத்தைகளை தடுப்பது எப்படி?
வனப் பகுதியையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகேயுள்ள புதர்களை அகற்ற வேண்டும், கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கக் கூடாது. மாமிச கழிவுகளை கிராமங்களிலேயே கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம்தான் காட்டுக்குள் இருக்கும் சிறுத்தையை ஊருக்கும் வர ஊக்குவிக்கும் விஷயங்களாக மாறும். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வு இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுத்தையைக் கண்டால்?
சிறுவர், சிறுமியரை இரவு நேரங்களில் தனியே வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். சிறுத்தையைக் கண்டால் அதைப் பின்தொடர்ந்து விரட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை அது பயந்து நம்மை தாக்கக்கூடும். இரவில் தனியே வெளியே செல்லும்போது கைவிளக்கை (டார்ச்) எடுத்துச் செல்லவும். உரத்தக் குரலில் பாடிக்கொண்டோ, உங்களது கைப்பேசியில் பாடல்களை வைத்துக் கொண்டோ செல்வதும் நல்லது. இதனால் சிறுத்தை, நீங்கள் அதன் இரவு உணவு இல்லை என்பதை உணர்ந்து விலகிப் போய்விடும் என்று பொதுவான அறிவுறைகளை வழங்குகிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.