இன்றும், நாளையும் (மே 3, 4) விமானச் சேவையை நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியால், பயணிகள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், குறிப்பிட்ட தேதிகளில் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கு பணம் திரும்பச் செலுத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக இரண்டு நாட்களுக்கு (மே 3, 4) விமானச் சேவை நிறுத்தப்படுவதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் நேற்று அதிரடியாக அறிவித்தது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் மற்றும் விட்னி நிறுவனம் விமான எஞ்சின்களை வழங்கி வந்தது. அண்மைக்காலமாக அந்த நிறுவனம் வழங்கிய எஞ்சின்கள் அதிகம் பழுதடைந்துள்ளன. அவற்றை சரிசெய்வதற்குத் தேவையான பணம் கையிருப்பில் இல்லாத நிலையில் விமானச் சேவையை தொடர முடியவில்லை என கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இந்த அறிவிப்பால், நேற்று இரண்டு விமானங்கள் திடீரென சூரத்தில் தரையிறக்கப்பட்டன. திவால் அறிவிப்பை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கையாக தெரிவித்துள்ளது. மேலும், பங்குதாரர்களின் நலன் கருதியே திவால் நோட்டீஸ் வழங்கியதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. திவால் தீர்வு நடவடிக்கை குறித்த தகவலை மத்திய அரசுக்கும் கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விரைவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏவிடம் இதுகுறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திட்டமிடப்பட்ட விமான சேவைகளை வழங்க தவறியதால், பயணிகளின் சிரமத்திற்கு வழிவகுத்தது.
இது விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இதற்காக விமான நிறுவனத்திற்கு எதிராக ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது? மே 3 மற்றும் 4ம் தேதிகளுக்கான விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர மே 5ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட அட்டவணையின்படி விமானங்களை இயக்குவதற்கான செயல் திட்டத்தையும் தாக்கல் செய்யவேண்டும்' என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில், திவால் அறிவிப்பைத் தொடர்ந்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விமானச் சேவை தொடர மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குறைந்த கட்டண விமானச் சேவைக்கு பெயர்பெற்ற நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிறுவனத்தை மிகப் பழைமையான வாடியா குழுமம் நிர்வகித்து வருகிறது. 2005ஆம் ஆண்டு தனது சேவையை தொடங்கிய இந்த நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் 5வது மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக வளர்ந்தது. (இந்திய விமானப் போக்குவரத்தில் 56 சதவீதம் பங்குகளுடன் இண்டிகோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. 8.9 சதவீத பங்குகளுடன், 2வது இடத்தில் ஏர் இந்தியாவும் 8.7 சதவீத பங்குகளுடன் 3வது இடத்தில் விஸ்தாராவும் உள்ளன).
8 வெளிநாட்டு விமானங்கள், 27 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 35 நகரங்களுக்கு தினசரி விமானச் சேவையை வழங்கி வந்த இந்த நிறுவனம், கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக்கிக்கும் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கூட வழங்க முடியாமல் கோ பர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திடம் இருந்து என்ஜின்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் குறித்த நேரத்தில் என்ஜின்கள் டெலிவிரி செய்யப்படாததாலும் இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால், 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்க முடியாமல் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்கள் இயங்காததால் ஏறத்தாழ 10,800 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோ ஃபர்ஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’6,521 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, ஐ.டி.பி.ஐ. பேங்க், ஆக்சிஸ் பேங்க், Deutsche bank ஆகிய வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளதாகவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், அதன் கடன் தொகை பல்லாயிரம் கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் பங்குகளை விற்க தனியார் முதலீட்டாளர்களிடம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தவிர, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் விளக்கம் அளிக்கவும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் சார்பில் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நிறுவனத்தின் திவால் காரணமாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வரும் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளனர்.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் விமானச் சேவையை ரத்து செய்திருப்பதால், மற்ற விமான நிறுவனங்கள் அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கான விமான கட்டணத்தை, அதிரடியாக உயர்த்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் விமானச் சேவையில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மட்டும் திவாலாவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு Kingfisher Airlines, NEPC Airlines, Air Sahara, Damania Airways, Jet Airways, Air Deccan, Vayudoot Airlines, Indian Airlines, Air Pegasus, Air Mantra, Air Carnival, Paramount Airways, MDLR Airlines, East West Airlines, ModiLuft, Kalinga Airlines எனப் பல நிறுவனங்கள் திவாலாகிய கதைகளும், சில விமானங்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட கதைகளும் உண்டு.