சீனப் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் மின்வெட்டு பிரச்னை: பின்புலம் என்ன? - ஒரு பார்வை

சீனப் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் மின்வெட்டு பிரச்னை: பின்புலம் என்ன? - ஒரு பார்வை
சீனப் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் மின்வெட்டு பிரச்னை: பின்புலம் என்ன? - ஒரு பார்வை
Published on

ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை என்றால், சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை. கடந்த ஜூன் மாதம் முதலே ரேஷன் அடிப்படையில் மின்சாரத்தை சீனா விநியோகம் செய்து வந்தது. தற்போது கடும் மின்வெட்டு சூழல் உருவாகி இருக்கிறது. வீடுகளில் மின்சாரம் இல்லை. பல மாகாணங்களில் பல மணிநேரம் மின் வெட்டு இருக்கிறது. இதுகுறித்த பின்புலத்தையும் தாக்கத்தையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சீனாவில் தொழிற்சாலைகளில் செயல்பட மின்சாரம் இல்லை. ஆப்பிள் மற்றும் டெஸ்லா ஆலைகளும் செயல்படுவதற்கு மின்சாரம் இல்லை. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், "மின்வெட்டு மிக முக்கிய பிரச்னை" என ட்வீட் செய்யும் அளவுக்கு சிக்கல் பெரிதாகி இருக்கிறது. இதைவிட இந்த மின்வெட்டு காரணமாக, சீனாவின் ஜிடிபி 0.4 சதவீதம் அளவுக்கு சரியும் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது. மற்றொரு முக்கிய ஆய்வு நிறுவனமான நொமுராவும் மின்வெட்டு காரணமாக சீனாவின் ஜிடிபி சரியும் என கணித்திருக்கிறது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தகட்ட முதலீட்டுக்கு வேறு நாடுகளுக்குச் செல்ல இருப்பதாகவும் அமெரிக்கா - சினா பிசினஸ் குழு தெரிவித்திருக்கிறது.

கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் முக்கிய நடவடிக்கை எடுத்துவருகின்றன. சீனாவின் மின்சார தேவையில் மூன்றில் இரு பங்கு நிலக்கரியை நம்பியே இருக்கிறது. (இந்தியாவை எடுத்துக்கொண்டால் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு நிலக்கரியை நம்பி இருக்கிறது). இதனைக் குறைக்க சீனா முடிவெடுத்திருக்கிறது. இயற்கை எரிவாயு, காற்றாலை மற்றும் சோலார் ஆகியவற்றுக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இருக்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் மற்றும் நகரமயமாக்கம் ஆகிய காரணங்களால் மின்சாரத் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி உயராத சூழ்நிலையிலும் கூட, ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி வாங்குவதில்லை என சீனா முடிவெடுக்கிறது.

இதுதவிர இந்தோனேஷியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் கடும் மழை காரணமாக நிலக்கரி எடுக்கும் பணியும் பாதிக்கப்பட்டது. கோவிட், மழை, பணியாளர்கள் பற்றாக்குறை என பலவும் சேர்ந்திருப்பதால் மின் உற்பத்தி தடைபட்டிருக்கிறது. தவிர, சர்வதேச அளவில் நிலக்கரி விலையும் உயர்ந்திருக்கிறது. ஆனால், சீனாவில் மின்சாரத்தின் விலையை அரசு நிர்யணம் செய்யும். அதிக விலைக்கு நிலக்கரி வாங்கி மின்சாரத்தை தயாரிப்பது நிறுவனங்களுக்கு நஷ்டம் என்பதால் மின்சார தயாரிப்பும் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், மின்சார விலையை உயர்த்த சீனா திட்டமிட்டிருப்பதாக 'புளூம்பெர்க்' செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

சீனாவின் முக்கியமான உற்பத்தி நகரான குவாங்டாங் (Guangdong) முழுவதும் கடும் மின் தட்டுப்பாடுகள் இருப்பதால் உணவு, டெக்ஸ்டைல், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல வகையான உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்நாட்டில் மட்டுமல்ல, ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி ஆர்டரை பூர்த்தி செய்யாமல் இருக்க முடியாது என்பதால், ஜெனரேட்டர் மூலம் ஆலைகள் நடக்கின்றன. இதனால் நிறுவனங்களின் நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதைவிட ஸ்டீல் உள்ளிட்ட தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படும் ஆலைகளுக்கும் போதுமான மின்சாரம் இல்லை என்பதால் அங்கு இதைவிட உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே சுற்றுச்சூழல் மாசினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில், குளிர்கால ஒலிம்பிக் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் (4, பிப்ரவரி 2022) தொடங்குகிறது. அதனால், சீனா மேலும் கவனமாக இருப்பதால் இந்த ஆண்டு இறுதி வரை மின்பற்றாக்குறை சரியாக வாய்ப்பில்லை என்றே செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலக்கரியை அதிகம் நம்பி இருப்பது, ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி வாங்காமல் இருப்பது, மற்ற நாடுகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டிருப்பது, அதனால் ஒட்டுமொத்த நிலக்கரி விலை உயர்ந்திருப்பது, சீனாவில் மின்சார விலையை அரசு கட்டுப்படுத்துவதன் காரணமாகவும் மின் உற்பத்தி குறைந்திருப்பது என பல தொடர் நிகழ்வுகள் உள்ளன. இது ஜிடிபி சரிவு வரை கொண்டு வந்திருக்கிறது.

சீனாவில் இருந்து கோவிட் தொடங்கி இருந்தாலும் கோவிட் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மின்சாரம் பெரும் தாக்கதை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com