“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
“எங்களில் மலைப் பகுதிகளில், ’குக்கி’ என்ற பழங்குடியினரும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களும் வசிக்கிறோம்”
மணிப்பூர் மக்கள்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று, மணிப்பூர். இம்மாநிலம் முக்கால்வாசி பகுதி மலைகளையும், பள்ளத்தாக்கையும் நிலப்பரப்பாகக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில், பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இதில் மலைப் பகுதிகளில், ’குக்கி’ என்ற பழங்குடியினரும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். அதாவது, மாநிலத்தின் மொத்த பரப்பளவில் வெறும் 10 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மெய்டீஸ் இனத்தவரும், 90 சதவிகித பகுதியைக் கொண்டிருக்கும் மலைப் பகுதிகளில் குக்கி இனத்தவரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 35% பேர் குக்கி இனத்தவராக உள்ளனர். இவர்கள், மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் போன்ற பல பழங்குடியினரை உள்ளடக்கிய ஓர் இனக்குழுவினர் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், மாநிலத்தின் மக்கள்தொகையில் 64% பிடித்துள்ள பழங்குடியினர் அல்லாத மெய்டீஸ் இனத்தவர், வடக்கில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
தற்போது இவ்விரு இன மக்களுக்கு இடையேதான் மோதல் வெடித்து, கலவரமாக மாறியிருக்கிறது. ஆனால், இந்த மோதல் என்பது இன்று, நேற்றல்ல.. கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலமாக நீடித்து வருவதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1980-90களில் குக்கி இன மக்கள் வசிக்கும் சில பகுதிகள், மெய்டீஸ் மற்றும் நாகா பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுடன் இணைக்கப்பட்டதாகவும், அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் குக்கி இன மக்கள் போராடத் தொடங்கியதாகவும் இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்தப் பகுதிகளில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வர்த்தகம் மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அந்த இரு சமூகத்துக்குள்ளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வீடுகள் தீக்கிரையாவதும், பொதுமக்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதுபோன்ற மோதல் காரணமாக 1992இல் குக்கி இனத்தவர்களில் 1,000 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த இணையதளத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், ’மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் எங்களையும் சேர்க்க வேண்டும்’ என்பது மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மெய்டீஸ் சமூகத்தினர், கடந்த 2012ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகின்றனர்.
”மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் குடியேறும் நபர்களால் எங்களுக்கு பல்வேறு இடர்பாடுகளும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனாலேயே எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என மெய்டீஸ் இனத்தவர் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை, பழங்குடியினர் நீண்டகாலமாகவே எதிர்த்து வருகின்றனர்.
”இந்தியாவில் உள்ள சில வடகிழக்கு மாநிலங்களில், இந்திய குடிமகனாகவே இருந்தாலும், எல்லோராலும் அம்மாநில நிலங்களை வாங்கவும் வேறு மாநிலத்தவருக்கு விற்கவும் முடியாது என சட்டமியற்றப்பட்டுள்ளன. அதில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. அரசியலைமைப்பு சட்டம் 371சியின்படி, மணிப்பூரில் உள்ள மலைப் பிரதேச பகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் பழங்குடியினர் மக்கள் பள்ளத்தாக்குப் பகுதிகளில்கூட நிலம் வாங்கிக் குடியேற முடியும். ஆனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்கூட, மலைப் பகுதிகளில் நிலம் வாங்குவதற்கு உரிமை இல்லை. ஆனால், இதை மாற்றுவதற்காகத்தான் மணிப்பூர் அரசு முயல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பழங்குடியினரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் காட்டுப் பகுதிகளை தன் வசப்படுத்தவும் மெய்டீஸ் சமூகத்தினர் முயல்கின்றனர். இதற்காக, அரசியல் ஆளுமை பொருந்திய அச்சமூகத்தினர் அரசை நிர்பந்தப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை, மெய்டீஸ் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால், அவர்கள் பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் குடியேறுவதுடன், அங்கிருக்கும் நிலங்களை எளிதில் வாங்கி பெருமுதலாளிகளுக்கு விற்றுவிடுவார்கள். இதனால், பல இயற்கைச் செல்வத்தைத் தரும் காட்டு வளம் விரைவில் அழிந்துவிடும். இதன்காரணமாகத்தான் மணிப்பூர் பழங்குடியினர் மக்கள் ஆண்டாண்டுக்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.
”அரசியல் பிரதிநிதித்துவம், வசதி உள்ளிட்ட பலவற்றிலும் மெய்டீஸ் சமூகத்தினரே, ஆதிக்கம் செலுத்துகின்றனர். குறிப்பாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேறிய மெய்டீஸ் இனத்தவரின் இந்த கோரிக்கை தேவையற்றது. தாங்கள் தகுதியற்றவர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்கள் இடஒதுக்கீடு கேட்பது நியாயமற்றது. மேலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், அது எங்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே அவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்” என்கின்றனர், குக்கி இன மக்கள்.
இதற்கிடையே, ‘இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தைச் சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் மெய்டீஸ் இனத்தவர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து கடந்த ஏப்ரம் மாதம் 20ஆம் தேதி விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், ”மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்கவும்” என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசமும் வழங்கியது.
இதற்குப் பிறகுதான் அங்கு போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. இவ்விரு சமூகத்துக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த இந்த விவகாரம், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் வேகமெடுக்க ஆரம்பித்தது. அதன் விளைவு, ஏப்ரல் 3 ஆம் தேதி மணிப்பூரின் 8 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் மணிப்பூர் மாநிலமே தீயில் கருகியது. அதிலும், மோரே நகரில் மெய்டீஸ் இனத்தினரைக் குறிவைத்து, குக்கி இனத்தவர் தாக்கிய நிலையில், அந்தப் பகுதியில் வசித்துவந்த தமிழ்ச் சமூக மக்களின் சொத்துக்களும் தீக்கிரையாகின.
தமிழர்களின் சில வீடுகளும் எரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குச் சொந்தமான சில உணவகங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த மோரே நகரம் என்பது, மியான்மர் நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மோரே நகரத்தில்தான், இரண்டாம் உலகப் போர் காலத்தில் மியான்மரிலிருந்து (பர்மா) நாடு திரும்பிய தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறை காரணமாக மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணையச் சேவையை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்த இடத்தில் காவல் துறையினர், கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களைக் கலைத்து நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வன்முறை குறித்து 5 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
கலவரம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் மணிப்பூரில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களுக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சுமார் 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பையும் ராணுவத்தினர் நடத்தியுள்ளனர்.
இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அப்படி நேற்றும், இம்பாலின் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மணிப்பூருக்குக் கூடுதல் ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மத்திய விரைவுப் படையும் மணிப்பூருக்கு விரைந்திருக்கிறது. வன்முறை குறித்து மாநில முதல்வர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன் மூலம் கேட்டறிந்தார்.
இதுகுறித்துப் பேசிய முதல்வர் பிரேன் சிங், ”மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்கக் கூடுதல் துணை ராணுவப் படை தேவையாக இருக்கிறது. வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள், அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநிலப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த மோதலுக்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூர் பற்றி எரிகிறது. அழகான அந்த மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்துவிட்டது.
பாஜகவின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் செயல்பாடு, அதிகாரத்தின் மீது அதற்கு இருக்கும் பேராசை ஆகியவையே இதற்குக் காரணம். அமைதியை கடைப்பிடிக்குமாறு மக்களை காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில், "மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட, அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.