சிவாஜி கணேசன் யார் ?

சிவாஜி கணேசன் யார் ?
சிவாஜி கணேசன் யார் ?
Published on

அமெரிக்கா அரசால் கௌரவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நடிகர் திலகத்தை மக்கள் திலகம் வாழ்த்தி 1962 இல் நடிகன் குரல் பத்திரிகையில் எழுதிய பெரிய கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இவைகள்:

''நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.

‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார். பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.

இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல்திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.

அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!''
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com