மறைந்த இந்திய கல்வியாளரும், பெண்ணியவாதியுமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாளை இன்று கூகுள் டூடுல் நினைவு கூர்ந்துள்ளது. யார் இந்த பாத்திமா ஷேக் என்று பார்ப்போம்....
1831ல் புனேவில் பிறந்த பாத்திமா ஷேக், இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியையாக கருதப்படுகிறார். இவர் சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருடன் இணைந்து, 1848 இல் சுதேச நூலகத்தை நிறுவினார், இதுதான் இந்திய நாட்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான முதல் பள்ளியாகும்.
புனேவில், பாத்திமா ஷேக் தனது சகோதரர் உஸ்மானுடன் சேர்ந்து பட்டியலின மக்கள் கல்வி கற்பதற்காக தங்கள் வீட்டை வழங்கினார். இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளிகளில் ஒன்றான சுதேசி நூலகம் பிறந்த இடமாக ஷேக்கின் இல்லம் செயல்பட்டது. "சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் வகுப்பு, மதம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள், முஸ்லீம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தார்கள்" என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பூலேவின் சத்யசோதக் சமாஜ் (உண்மை தேடுபவர்கள் சங்கம்) இயக்கத்தில் ஷேக் தீவிர பங்கு வகித்தார், அனைத்து மக்களும் கல்வி கற்கவும், இந்திய சாதி அமைப்பின் கடினத்தன்மையிலிருந்து வெளியேறவும் வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்தார். ஆதிக்க சாதியினரின் பெரும் எதிர்ப்பையும் அவமானத்தையும் எதிர்கொண்ட போதிலும், ஷேக் தனது கொள்கையில் விடாபிடியாக இருந்தவர் என்று கூகுள் விவரித்துள்ளது. மேலும், பாத்திமா ஷேக்கின் "வரலாற்றுப் புறக்கணிக்கப்பட்டது" என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது