யார் ஊழல் செய்தது என்பது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உருவான குற்றச்சாட்டுகள், தற்போது கடுமையான வார்த்தை போராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நீங்களே ஊழல்வாதி என ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக இன்னும் சில மாதங்களில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்கு தொடக்கப்புள்ளியாக யார் ஊழல்வாதி என்ற கருப்பொருளை கையில் எடுத்துள்ளன அதிமுகவும், திமுகவும். கடந்த 3 ஆம் தேதி சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சர்க்காரியா கமிஷன், 2ஜி ஊழல் என்று தமிழக பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்த கட்சி திமுக என கூறி திமுக மீது முதல் தாக்குதலை தொடங்கினார்.
முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்காத திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் துணைப் பொது செயலாளர் ஆ.ராசாவை களத்தில் இறக்கினார். அவரோ ஊழல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட கட்சி அதிமுகதான் என்றும், 2ஜி குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன், கோட்டையில் வைத்து விவாதிக்கலாமா எனவும் முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.
ஆ.ராசாவின் இந்த சவாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் ஏதும் சொல்லாத நிலையில், மீண்டும் ஜெயலலிதா குறித்த விமர்சனத்தை முன்வைத்து முதலமைச்சரை விவாதத்துக்கு அழைத்தார் ஆ.ராசா. இந்த சூழலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ.ராசாவின் சவாலை ஏற்றதுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சை கண்டித்து பல்வேறு மாவட்டங்களிலும் அவரின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். இதனை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் இடையிலான இந்த வார்த்தை மோதலில் ஜெயலலிதா குற்றவாளியா என்ற விவாதம் எழ, திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் அவரது முன்னாள் வழக்கறிஞர் ஜோதி. தொடக்கத்தில் அதிமுகவில் இருந்து பின்னர் திமுகவில் தஞ்சம் அடைந்தவர் தான் வழக்கறிஞர் ஜோதி. இத்தனை காலம் அமைதி காத்து வந்த வழக்கறிஞர் ஜோதி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுடன் விவாதிக்க தாம் தயார் என கூறியுள்ளார்.
ஏற்கனவே சசிகலா மீது அதிருப்தியில் இருந்த வழக்கறிஞர் ஜோதி , தற்போது ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால்தான் அவர் அந்த தீர்ப்பில் ஏ 1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்ற நிலையில் இவர் இருந்த இந்த விவாதத்தை சசிகலாவை நோக்கி திருப்பி இருக்கிறார் ஜோதி. சரி யார்தான் ஊழல்வாதி என மக்கள் பரபரப்பாக பேசி வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையோ மக்களே ஊழல்வாதிகள் என சாடி இருக்கிறது. வாக்காளர்களே ஓட்டுக்கு பேரம் பேசி பணம் வாங்குவதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இப்படி சொல்லி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஊழல் என்ற வார்த்தை முக்கிய இடம் பிடிப்பது உறுதி. அதற்கு முன்னோட்டமாக இப்போதே அரசியல் களம் வார்த்தைப் போரால் கனன்று எரிய தொடங்கிவிட்டது.