முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்துள்ள அதேவேளையில், இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. ஜெயலலிதா பல ஆண்டுகாலமாக வசித்த வேதா இல்லம் யாருக்கு?, இதுதான் கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் மிகவும் பேசப்பட்ட தலைப்பாகும். அரசே அதனை நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து விட்டாலும், சட்டரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இதற்கு பல தடைகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதாவும்.... வேதா இல்லமும்....
எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜெயலலிதா நடிக்கத் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குப் பின், போயஸ் கார்டனில் உள்ள இடத்தை, ஜெயலலிதாவும், அவரது தாயார் சந்தியாவும் இணைந்து 1967-ஆம் ஆண்டில் வாங்கினர். அப்போது இதன் மதிப்பு ரூ.1.32 லட்சம். அந்த இடத்தில் வீடு கட்டி, தனது பெற்றோரின் நினைவாக, வேதா நிலையம் என பெயர் சூட்டினார் ஜெயலலிதா. அதன் பின் செல்வாக்குமிக்க தலைவராக ஜெயலலிதா உருவெடுத்ததும் அந்த வீட்டில் இருந்துதான். எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை பிடித்த ஜெயலலிதா, அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரையில் வேதா இல்லத்தில் இருந்தபடிதான் முக்கிய முடிவுகளை எடுத்து வந்துள்ளார்.
அரசின் அறிவிப்பும்...... எதிர்ப்பும்...
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா தரப்பினர் அந்த வீட்டில் வசித்து வந்ததற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் கண்டனம் தெரிவித்தார். தங்களுக்கு சேர வேண்டிய வேதா நிலையத்தை சட்டப்படியாக மீட்போம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், வேதா நிலையத்தில் தங்கியிருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றதை தொடர்ந்து அந்த வீட்டில் வசிப்பதை அனைவரும் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மட்டும் அந்த வீட்டில் சில நேரங்களில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சுமார் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை நினைவில்லம் ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வேதா நிலையத்தில் சட்டரீதியாக தங்களுக்கு உரிமை உள்ளது என்றும், அதனால் அதனை நினைவில்லமாக அறிவிப்பது தொடர்பாக தங்களிடம் பேசியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், உரிய வாரிசிடம் தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டு வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.
உரிமையும்....... குழப்பமும்......
ஜெயலலிதாவும், அவரது தாயார் சந்தியாவும் இணைந்து இந்த வேதா நிலையத்தின் நிலத்தை வாங்கியதாக கூறப்படுவதால், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் இந்த வீட்டில் உரிமைக்கொண்டாடுவது நியாயம்தான் என்கின்றனர் ஒரு தரப்பினர். இதேவேளையில் மறைந்த ஜெயலலிதா தனது சொத்துகள் யாருக்கு சொந்தம் என உயில் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா என்பதும் ரகசியமாக உள்ளது. ஒருவேளை அவ்வாறு யார் பெயரிலாவது ஜெயலலிதா சொத்துகளை எழுதி வைத்திருந்தால், அவருக்கும் வேதா நிலையத்தின் மீது உரிமை கொண்டாட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை தீர்ந்து வாரிசுகள் அனுமதி அளித்தால்தான், தமிழக அரசால் சட்டப்படி வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மக்களால் நான்...... மக்களுக்காகவே நான்.....
தற்போது வேதா நிலையத்தில் தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் விவகாரம் இன்னும் பல மாதங்களுக்கு நீளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் சொத்துகளுக்காக கடந்த பல மாதங்களாகவே மறைமுக போர்கள் நடைபெற்றுத்தான் வருகிறது. இந்த பிரச்சனையால், கணவன் மனைவியை இழந்தார், மனைவியை கணவன் பிரிந்தார், சகோதரன் எதிரியானார், எதிரி சகோதரன் ஆனார், சாமானியன் ஆட்சியாளர் ஆனார், ஆட்சியாளர் சாமானியன் ஆனார், உயரத்தில் இருந்த சிலர் தரையில் விழுந்தனர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன்னுடைய கடைசி மூச்சு வரை கூறிக்கொண்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு பின் தன்னுடைய சொத்துகள் அனைத்தும் மக்களுக்கே என்றும் பலமுறை கூறியிருக்கிறார். இதனை தற்போது சுட்டிக்காட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தான் சம்பாதித்து வாங்கிய இந்த வேதா நிலையம் இல்லத்தை ஜெயலலிதா மிகவும் நேசித்தார். பல கோடி ரூபாய் சொத்துகள் அவரிடமிருந்தாலும் ஆரம்பம் முதல் ஜெயலலிதா அனுபவித்த இன்பங்களையும் துன்பங்களையும் இந்த வேதா நிலையம் மட்டுமே அறியும். அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் நினைவுகளுடன் ஒன்றிப்போன இந்த வீட்டை நினைவில்லமாக ஆக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தினகரன் என மூன்று அணிகளாகப் பிரிந்திருந்த போதும் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றுவதற்கு அனைவரும் ஆதரவே தெரிவித்துள்ளனர். எனவே தற்போது எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு வேதா இல்லம் விரைவில் ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.