ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி எப்படி இருக்குமென்றால், எப்போதும் அமைதியாகவே இருக்கும். அதாவது, வெளிநாட்டு ஆடுகளங்களில் எதிரணி வீரர்கள் வார்த்தைகளால் சீண்டினாலும் உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பார்கள். இந்த ஸ்லெட்ஜிங்கை சாதகமாக்கி சாதனையாக்கிய வீரர்கள் இருந்தாலும், பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டு பயந்து விரைவாக அவுட்டாகிய வீரர்கள்தான் ஏராளம். இதெல்லாம் ஒரு காலம் வரைதான். எப்போது கங்குலி இந்திய அணிக்கு தலைமை தாங்கினாரோ அப்போதிருந்து இந்த நிலைமை மாறியது. இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி, எதிரணியின் எந்தப் பேச்சுக்கும் பயப்படுவதில்லை. ஜெர்சியின் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு எந்த நாடாக இருந்தாலும் 'சம்பவம்' செய்துவிட்டே வருகின்றனர்.
எதிரணி வீரர்களை உசுப்பேற்றி, வெறுப்பேற்றி, தகாத வார்த்தைகளில் பேசுவதில் ஆஸ்திரேலியோ, இங்கிலாந்து வீரர்கள் வல்லவர்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் நாட்டுக்கே சென்று அவர்களுக்கே விபூதி அடிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் இந்திய வீரர்கள். அப்படியொரு கெத்தான சம்பவம் அண்மையில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. எப்போதும் அமைதியாக பந்துவீசும் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் சீண்ட, அது கடைசியில் அவர்களுக்கே ஆப்பான கதையை இப்போது பார்க்கலாம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று அரங்கேறியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 22 ரன்கள் எடுத்திருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் 16 ரன்களில் அவரது பந்துவீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியதுபோல் தெரிந்தது. அப்போதுதான் களத்துக்கு பும்ராவும், ஷமியும் வந்தனர்.
வாய்விட்ட இங்கிலாந்து பவுலர்கள்
ஆண்டர்சனுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே போட்டி முழுவதும் இருந்து வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 17-ஆவது ஓவரின்போது, ஆண்டர்சன் வீசிய பந்தில் புஜாரா ரன் எடுக்க ஓடினார். அப்போது பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த மறுமுனை பேட்ஸ்மேன் கோலி, "இது போட்டியின் பிட்ச், உங்கள் வீட்டுத் தோட்டம் கிடையாது" எனத் தெரிவித்து சில கெட்ட வார்த்தைகளையும் பேசினார். இவையெல்லாம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து பேட் செய்யும்போது ஆண்டர்சன் வந்ததும் பும்ரா பவுலிங் போட்டார்.
அந்த ஓவரில் அசுரத்தனமாக பந்துவீசிய பும்ரா, ஆண்டர்சனின் ஹெல்மெட்டை பதம்பார்த்தார். அனைத்து பந்துகளையும் உடம்பிலேயே வாங்கிக் கொண்டு இருந்தார் ஆண்டர்சன். பின்பு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பும்போது பும்ராவை கடுமையாக சாடினார். ஆனால் பும்ராவோ சிரித்துக்கொண்டே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதனால் கடுப்பான இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் "லெஜெண்ட்" ஆண்டர்சனுக்கே இந்த நிலைமையா என பும்ராவை பழிவாங்கத் துடித்தனர்.
அதற்கான சமயம் லாவகமாக அமைந்தது. பும்ராவுக்கு தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை இங்கிலாந்த பவுலர் மார்க் வுட் வீசினார். பல்வேறு குடைச்சல்களும் கொடுத்தனர். இதில் மார்க் வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார். அடுத்த பந்தை பவுண்டரியாக்கினார் பும்ரா. பின்பு மார்க் வுட் ஏதோ சொல்ல, பும்ராவும் பதில் பேசினார்.
இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் ஆஜரான ஜோஸ் பட்லருக்கும், பும்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக நடுவர் தலையிட்டு சமாதானப்படுத்தினார். எப்போதும் அமைதியாக இருக்கும் பும்ராவையும், ஷமியையும் ஆக்ரோஷமாக்கியது இங்கிலாந்து வீரர்களின் வார்த்தைப் போர்தான். இதன் பின்பு மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்துவீச்சை வறுத்தெடுத்தார். மொயின் அலியின் பந்தை சிக்ஸருக்கு விரட்டி அரைசதமடித்து கலக்கினார். பழி வாங்கியே தீர வேண்டும் என ஆண்டர்சனிடம் பந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவராலும் பும்ரா - ஷமி இணையை வீழ்த்த முடியவில்லை.
ஆண்டர்சனுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு பழதீர்க்க நினைத்து இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட வார்த்தை சீண்டல்கள் அவர்களுக்கு எதிராக திரும்பியதுதான் சோகம். இங்கிலாந்து வீரர்களால் தூண்டப்பட்ட ஆக்ரோஷம், இந்தியாவுக்கு போட்டி முடியும் வரை இருந்தது. இந்தியாவும் லார்ட்ஸில் அபார வெற்றி பெற்றது. இதுபோன்ற ஓர் ஆக்ரோஷமான கெத்தான போட்டியை கடந்த 20 ஆண்டுகளில் விளையாடவில்லை என பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருதியதுதான் இந்திய கிரிக்கெட்டின் மாஸான தருணமாக அமைந்தது.