1996-ல் ஆஸி.க்கு எதிரான போட்டியை நினைவுப்படுத்திய சஹார் - புவனேஷ்வர்! ஒரு 'பிளாஷ்பேக்'
இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடி இந்தியாவை வெற்றிப்பெற வைத்த பவுலர்களான தீபக் சஹார் - புவனேஷ்வர் குமார் ஜோடியின் நேற்றைய ஆட்டம் 1996-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்போது ஜவகல் ஸ்ரீநாத் - அனில் கும்பளேவிண் ஆட்டத்தை ஞாபகப்படுத்துவதாக சமூக வலைத்தளத்தில் பலரும் நினைவு கூறி வருகின்றனர்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில், முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தெரிவு செய்த நிலையில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஃபெர்ணான்டோ, அசலங்கா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி 116 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் 53 ரன்களிலும், க்ருணால் பாண்ட்யா 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை, பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர்குமார் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்தியா 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் சேர்த்த தீபக் சஹார் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்தப் போட்டியில் பவுலர்களான தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பேட்டிங் அவர்களின் மன உறுதியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற திடமான திட்டத்தின் மூலம் வெற்றியை சாத்தியப்படுத்தினர்.
இந்த இருவரின் ஆட்டம் 1996-இல் நடைபெற்ற டைடடன் கோப்பை போட்டியை நினைவுப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர்.
1996 "டைட்டன் கோப்பை" நடந்தது என்ன?
1996 ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கோப்பை நடைபெற்றது. அதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி ஆஸ்திரேலியா - இந்தியா இடையே போட்டி நடைபெற்றது. அப்போது இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஆஸ்திரேலியாவுக்கு மார்க் டெய்லர் ஆகியோர் கேப்டனாக இருந்தார்கள். அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்தது.
215 என்ற எளிய இலக்கை வென்றுவிடலாம் என்ற நோக்கில் களமிறங்கியது இந்திய அணி. இதில் சச்சின் மட்டும் ஒருபக்கம் விளையாடிக்கொண்டு இருக்க மறுமுனையில் விக்கெட்டுகளை சரிந்துக்கொண்டு இருந்தது. சுஜித் சோமசுந்தர், ராகுல் டிராவிட், முகமது அசாருதின், சவுரவ் கங்குலி என அனைவரும் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். மறுமுனையில் அஜய் ஜடேஜாவும், நயன் மோங்கியாவும் ஏமாற்றமளித்தனர். ஆனால் சற்றும் மனம் தளராமல் விளையாடிக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கரும் 88 ரன்கள் ஆட்டமிழந்தனர்.
சச்சின் டெண்டுல்கர் அவுட்டானபோது இந்தியா 8 விக்கெட்டை இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது. சச்சின் அவுட்டானதும் தொலைக்காட்சியை ஆஃப் செய்த பலருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. இன்னும் வெற்றிக்கு 52 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் அனில் கும்பளேவும் மிகப்பிரமாதமாக விளையாடி ஆச்சரியமளித்தனர்.
ஸ்ரீநாத் அதிரடியாக விளையாட மறுமுனையில் கும்பளே நிதானமாக அவருக்கு துணையாக நின்றார். அப்போது சின்னச்சாமி மைதானத்தின் மொத்த ரசிகர்களும் துள்ளிக் குதித்தனர். இறுதியில் 48.5 ஆவது பந்தில் இந்தியாவின் வெற்றி வசமாகிக் கொடுத்தனர் பவுலர்களான ஸ்ரீநாத்தும் கும்பளேவும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இப்போதும் உலக கிரிக்கெட்டில் போற்றப்படுவது உண்டு. பவுலர்கள் சில நேரங்களில் பொறுப்பான பேட்ஸ்மேன்களாக அவதாரமெடுத்து பல போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளனர். ஆனால் இதுபோன்ற போட்டிகள் வெகு அறிதாகவே நிகழும். அப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தீபக் சஹாரும் - புவனேஷ்வர் குமாரும் தேடிக்கொடுத்துள்ளனர். இந்த வெற்றி காலத்தால் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.