பாரிஸ் நகரில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்திய மக்களில் எவ்வளவு பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ ஆனால், மல்யுத்த வீராங்களை வினேஷ் போகத் விவகாரம் ஒலிம்பிக் போட்டியை இந்திய மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது என்றே சொல்லலாம். குட்டிக் குட்டி நாடுகள் கூட குட்டிக்கரணம் போட்டாவது பதக்கப்பட்டியலில் முந்திச் செல்ல முயன்ற நிலையில், 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வெறும் 6 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது வேதனைக்குரிய விஷயம்.
இந்தியா சார்பாக 117 வீரர்கள் கலந்து கொண்ட பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், நீரஜ் சோப்ரா பெற்ற ஒரு வெள்ளி, மனு பாக்கர் பெற்ற இரண்டு வெண்கலம், ஹாக்கி அணி பெற்ற ஒரு வெண்கலம் சரப்ஜோத் சிங், குசால், அமன் ஷெராவத் ஆகியோர் பெற்ற தலா ஒரு வெண்கலம் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் இந்தியா 71வது இடமே பிடிக்க முடிந்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து புதிய தலைமுறையின் புதிய கோணம் பகுதியில், பத்திரிகையாளர் அதிஷா உடன் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பார்வையாளர்கள் தரப்பில் இருந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா?
பார்வையாளர் தரப்பில் எப்போதும் இருப்பதை விட கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. ஆனால், அதிகமாக இல்லை. ஒலிம்பிக் போட்டியை 150 மில்லியன் பார்வையாளர் பார்த்ததையே சாதனையாக சொல்கிறார்கள். ஆனால், ஐபிஎல் போட்டிகளின் முதல்நாள் பார்வையாளர்கள் 168 மில்லியன். இவ்வளவுதான் ஒலிம்பிக் மீது மக்களின் ஆர்வம். தோனியோ, கோலியோ முக்கியமான கட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, 10 கோடி 12 கோடி பேர் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒலிம்பிக் போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடி, 2 கோடியை தொடுவதே ரொம்ப கஷ்டம். ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்ற போதுதான் 5 கோடி பேர் பார்த்துள்ளனர். அதற்கு காணரம் இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி நிலவியது. ஆனால், எல்லா போட்டிகளுக்கும் சமமான பார்வை கிடைப்பதில்லை.
இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் பதக்கப்பட்டியலில் பின்தங்கியிருப்பது ஏன்?
இந்த ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு அரசு 450 கோடி ரூபாய் செலவு செய்தது. இது நமக்கு பெரிய தொகையாக இருக்கலாம். ஆனால், சீனாவோ அமெரிக்காவோ விளையாட்டுத் துறைக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சீனா 3 லட்சம் கோடி செலவு செய்கிறார்கள். அதேபோல் அமெரிக்கா 5 லட்சம் கோடி செலவு செய்கிறார்கள். ஆனால், மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கென 3500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். இந்த 3500 கோடியில் இருந்துதான் விளையாட்டுக்குத் தேவையான அனைத்து செலவுகளும் செய்யப்படுகிறது. 35 கோடி மாணவர்கள் உள்ள இந்தியாவில், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கொண்ட ஒரு லட்சத்திற்கும் குறைவான மைதானங்களே உள்ளன. இதை வைத்துக் கொண்டு எப்படி சாம்பியன்களை உருவாக்க முடியும்.
8 முதல் 10 வருடங்களாகதான் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருக்கிறோமா?
1996ல் தான் முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்றோம். அதுவே அப்போது பெரிய சாதனையாக இருந்தது. இந்தியா வளரும் நாடாக இருந்ததால் விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க முடியவில்லை. கல்விக்கான தேவையே அதிகமாக இருக்கும்போது, விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் அன்றைக்கு இல்லை. 30 வருடங்களுக்கு முன் ஒரு பதக்கம் பெற்ற இந்தியா இன்று 30 முதல் 35 பதக்கங்களை பெறும் நாடான வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், நம்மால் 6 பதக்கங்ளை மட்டுமே பெற முடிந்தது.
இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே முதன்மைப் படுத்தப்படுகிறதா?
கிரிக்கெட் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் முகமாக கிரிக்கெட் மாறுவதற்கு முக்கிய காரணமே பணம் தான். இந்திய விளையாட்டுத் துறைக்கு தனியார் பங்களிப்பு ரொம்ப முக்கியம். கேலோ இந்தியா போட்டிகளுக்கு மொத்தமே 400 கோடிதான் செலவு செய்கிறோம். 10 லட்சம் விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த 400 கோடியில் இருந்து எவ்வளவு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது. அதிகமாக செலவு செய்தால்தான் அதிக வெற்றி கிடைக்கும்.
தனியார் பங்களிப்பால் விளையாட்டுத் துறைக்கு பாதிப்பு வராதா?
இது கிரிக்கெட்டில் நடந்தாலும் கிரிக்கெட்டில் ஏதாவதொரு ரிசல்ட் வந்து கொண்டே இருக்கிறது. விளையாட்டுத் துறைக்கு இந்தியாவால், சீனா போலவோ, ஜெர்மனி போலவோ மற்ற நாடுகளை போலவோ செலவு செய்ய முடியாது. வளரும் நாடாக நாம் இருப்பதால் நமக்கு மற்ற தேவைகள் அதிகமாக இருக்கிறது. அதனால் நமக்கு தனியார் பங்களிப்பு தேவைப்படுகிறது. நமது நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மைதானம் என்று பார்த்தால் கிரிக்கெட்டையும் சேர்த்து வெறும் 50 மைதானங்கள் தான் இருக்கிறது. இதுபோன்ற கட்டமைப்பை வைத்துக் கொண்டு எவ்வாறு பதக்கப்பட்டியலில் முதல் 10 இடங்களையோ, முதல் 20 இடங்களையோ பிடிக்க முடியும்.
விளையாட்டு கலாச்சாரமாக மாற வேண்டுமா?
ஒரு தடகள வீரரை 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டியில் மட்டும்தான் பார்ப்போம். ஆனால், வருடம் முழுவதும் இந்த தடகள வீரர்கள் ஏதோ ஒரு போட்டியில் பங்கேற்றுக் கொண்டுதான் இருப்பார்கள். இதையாரும் பார்ப்பதும் இல்லை. இது யாருக்கும் தெரிவதும் இல்லை. காமன் வெல்த், ஏசியன் கேம்ஸ் மட்டுமே பார்ப்போம். உதாரணத்துக்கு கால்பந்து என்றால் உலகக் கோப்பை போட்டிகளை மட்டுமே பார்ப்பார்கள். இதற்கு காரணம் விளையாட்டுகளை பார்ப்பதை நமக்கு பழக்கப்படுத்தப்படவில்லை. ஆனால், கிரிக்கெட் நமக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணம், 1936ல் இருந்தே கிரிக்கெட் கமென்ட்ரி வானொலியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதனால்தான் கிரிக்கெட் போட்டியின் அனைத்து விதிகளும் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், மற்ற விளையாட்டுகளின் விதிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. ஒரு கிராமத்து பாட்டியிடம் கேட்டால் தோனியை தெரியும் கோலியை தெரியும். சிறு குழந்தைகளிடம் கேட்டாலும் சொல்வார்கள்.
விளையாடடுத் துறையை மேம்படுத்துவதற்கான தீர்வு என்ன?
எனக்கு என்ன கிடைக்கிறது என்பதை பொறுத்துதான் நான் அதில் அதிகமாக ஈடுபடுவேன். அவர்களுக்கு பாராட்டு மட்டும் போதாது பணமும் தேவைப்படுகிறது. படிப்பவருக்கும், விளையாடுபவருக்கும் எதிர்காலம் என்ற ஒன்று உண்டு. அதற்கு தேவை பணம். இந்தியா ஒதுக்கும் 3500 கோடியை வைத்துக் கொண்டு விளையாட்டுக்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட முடியாது. பள்ளிகளில் போதுமான பிரத்யேக பயற்சியாளர்கள் கிடையாது. இந்தியாவில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க முடியும்.