’கத்தி’ To ’கேப்டன் மில்லர்’: தமிழ் சினிமா உலகில் புயலை கிளப்பிய கதை திருட்டு சர்ச்சைகள்! ஓர் அலசல்

வசூல்ரீதியாக வெற்றிபெற்று வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், கதை திருட்டுப் புகாரில் சிக்கியிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தின் முக்கியச் செய்தியாக உள்ளது.
வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்திட்விட்டர்
Published on

’கத்தி’ டு ’கேப்டன் மில்லர்’: தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் கதை திருட்டு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக, கதை திருட்டு கோலோச்சி வருகிறது என்பதை சிலர் வேதனையுடன் குமுறுவதை ஊடகங்கள் அவ்வபோது உலகுக்கு எடுத்துரைத்து வருகின்றன. நடிகர் விஜய்யின் ‘கத்தி’ ஆரம்பித்து தற்போது நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ வரை கதை திருடு பற்றிய செய்திகளை அவைகள் வெளிச்சம்போட்டு காட்டிவருகின்றன.

அந்த வகையில் சமீபத்திய பொங்கல் விருந்தாய், வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. நடிகர் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். வசூல்ரீதியாக வெற்றிபெற்று வரும் இத்திரைப்படம், கதை திருட்டுப் புகாரில் சிக்கியிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தின் முக்கியச் செய்தியாக உள்ளது.

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி குற்றஞ்சாட்டு

தன்னுடைய 'பட்டத்து யானை' என்ற நாவலைத் தழுவி இக்கதை எடுக்கப்பட்டு இருப்பதாக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், “ ‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை எனது நாவலை பின்னணியாகவைத்து உருவாகியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பார். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து வைத்திருக்கிறேன். அதைக் கொஞ்சம் மாற்றி ‘கேப்டன் மில்லர்’ படமாக எடுத்துள்ளனர்.

நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதிகேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்று என் சிறுகதைகள், நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்த் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்திருப்பதுடன், தற்போது இதுதொடர்பாக அவர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இயக்குநர் அட்லியின் படங்கள் மீது குற்றச்சாட்டு

சினிமாவில் கதை திருட்டு என்பது இன்று, நேற்று நடப்பவை அல்ல.. சமீபத்திய ஆண்டுகளாகவே கதை திருட்டு பற்றிய குமுறல்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. முதலில், இயக்குநர் அட்லியின் படங்கள் எல்லாம் பிற படங்களின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அவருடைய முதல் படமான, ‘ராஜா ராணி’ (2013 ரிலீஸ்) இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெளன ராகம்’ படத்தையும், ‘தெறி’ படம், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் ‘சத்ரியன்’ படத்தையும், ‘மெர்சல்’ படம், ரஜினியின் ‘மூன்று முகங்கள்’ மற்றும் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தையும் தழுவி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

’கத்தி’ படம் மீது வழக்கு தொடர்ந்த கோபி நாயனார்

இப்படி, இந்தப் படங்கள் எல்லாம், பிற படங்களின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், பின்னாட்களில் எழுத்தாளர்களுடைய நாவல்களில் இருந்த கருவின் சாயலே திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அந்த வகையில், நடிகர் விஜய்யும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் மீண்டும் இணைந்த படம், ‘கத்தி’ (2014 ரிலீஸ்). இப்படம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் கதை, தன்னுடையது எனக் கூறி எழுத்தாளர் கோபி நாயனார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால் தனது தரப்பை நிரூபித்த முருகதாஸ் பிரச்னையைத் தீர்த்தார்.

’சர்கார்’சந்தித்த கதைத் திருட்டு

அடுத்து இயக்கநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ’எந்திரன்’ படத்தின் கதை, எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடனாலும், பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படம், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முன்னால் ஆக்சிடென்ட் சுரேஷ் என்பவராலும் கதை திருட்டால் விவாதத்திற்குள்ளானது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சர்கார்’ படமும் ரிலீசுக்கு முன்பே கதைத் திருட்டு சிக்கலைச் சந்தித்தது. வருண் ராஜேந்திரன் என்பவர் ’சர்கார்’ படம் தன்னுடைய கதை எனக் கூறி வழக்கு தொடர்ந்தார்.

அப்போது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், வருண் ராஜேந்திரன் எழுதிய ’செங்கோல்’ கதையின் கருவும் ’சர்கார்’ கதைக்கருவும் ஒன்றுதான் எனத் தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ’சர்கார்’ கதைத் திருட்டு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்வதாக முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த விளக்கம்

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ‘வழக்கம்போல் நிறைய வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு கள்ள ஓட்டு பிரச்னையை மையமாக வைத்து வருண் என்பவர் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். மற்றபடி ’செங்கோல்’ கதைக்கும் ’சர்கார்’ கதைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு ஓர் உதவி இயக்குநர் இப்படியொரு மூலக்கதையை பதிவு செய்திருக்கிறார். அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் கார்டு போடுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார். அந்த வகையில் மட்டுமே, அவர் பெயர் வரும். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ”சினிமாவில் கதை திருட்டுகள் நடப்பதாக அதிகமான புகார்கள் வருகின்றன. சந்தன கடத்தல் வீரப்பன் கதையை யாரும் படமாக எடுக்கலாம். ஆனால், ஒரு கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுப்பது தவறு'' என ஆலோசனை தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு கதைத் திருட்டைச் சந்தித்த ’அயோத்தி’

இதையடுத்து, கதை திருட்டு பற்றிய செய்திகள் கொஞ்ச நாட்கள் கோடம்பாக்கத்தில் மறைந்திருந்த நேரத்தில்தான், இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) வெளியான ‘அயோத்தி’ படமும் இதுபோன்ற ஒரு பிரச்னையைச் சந்தித்தது. இப்படத்தின் கதையை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதினார் என, அவரது பெயர் படத்தின் டைட்டில் கார்டில் போடப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக மற்றொரு எழுத்தாளர் மாதவராஜும் தன்னுடைய வேதனையைத் தெரிவித்ததை அடுத்து, எல்லோரும் கூடிப் பேசியதில் இப்பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.

கதைத் திருட்டு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்

கதைத் திருட்டு விவகாரம் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருந்த இயக்குநர் பா.ரஞ்சித், ”சினிமாவில் கதைத் திருட்டை கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. அதை நிரூபிக்க வேண்டியது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. கதையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற பயம் தற்போது உள்ளது. இதற்குப் பிறகு கட்டாயமாகக் கதையைப் பதிவுசெய்வார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது. கதைத் திருட்டு விவகாரத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையும், பொய்யும் கலந்தே உள்ளது” என எச்சரித்திருந்தார்.

இயக்குநர்கள் ஏன் பிறருடைய கதையைத் திருட வேண்டும்?

திரைத்துறைக்குள் சாதிக்க வருபவர்கள் எவரும் அவ்வளவு சாதாரணமாக நுழைந்துவிடுவதில்லை. எல்லா கஷ்டநஷ்டங்களையும் தெரிந்தும், அறிந்தும் அனுபவப்பட்டுமே வருகிறார்கள். அப்படியிருக்கையில், மேற்சொன்ன படங்களின் இயக்குநர்கள் எல்லோருமே நல்ல திறமையானவர்கள்; அனுபவஷாலிகள்தான். இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான இயக்குநர்கள் எனப் பெயர்வாங்கியவர்கள். அதேநேரத்தில், இப்படிப்பட்ட இயக்குநர்கள் ஏன் பிறருடைய கதையைத் திருட வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.

திரைத்துறைக்குள் சாதிக்க வருபவர்கள் எவரும் அவ்வளவு சாதாரணமாக நுழைந்துவிடுவதில்லை. எல்லா கஷ்டநஷ்டங்களையும் தெரிந்தும், அறிந்தும் அனுபவப்பட்டுமே வருகிறார்கள்.

அதற்கு ஒரே பதில்தான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது, ’படம் சம்பந்தப்பட்டவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில், இப்படியான ஒருவித அரசியல் இருக்கின்றனர்’ என்கின்றனர் பெரும்பாலான திரைத்துறையினர். உண்மையில், ’கதைச் சுருக்கத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அதை காப்பி என்று கூறுவது நியாயம் இல்லை அல்லது இதுபோன்ற ஒரு கதையை உருவாக்க நினைத்திருந்தேன் என வாய்வழியாகச் சொல்வதும் நியாயம் கிடையாது’ என்பதே அவர்களின் விவாதமாக இருக்கிறது.

படைப்பிலக்கியங்கள் திருடப்படுவது ஏன்?

படைப்பிலக்கியங்களைப் பொறுத்தவரை, அவை வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர்களின் சிந்தனைகளால் எழக்கூடியவை. அதற்கு உரிமையுள்ளவர்களே பொறுப்பாளர்கள் ஆவர். ஆனால், காலமாற்றத்தில் செய்திகளைத் திருடும் ஊடகங்களைப் போன்று, தனிமனிதர்களின் படைப்புகளும் திருடப்பட்டு வருகின்றன. அதன்காரணமாகவே சில படைப்புகள் திருடப்பட்டு தமிழ் சினிமாவில் படைக்கப்படுகின்றன. எனினும், திருடுவது தவறில்லை. அந்தத் திருட்டைச் செய்வதற்கு முன்பு, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசித் தீர்ப்பதுதான் பிரச்னைக்கு சுமுகத் தீர்வாக அமையும்.

model image
model imagefreepik

இந்த விஷயத்தில் சிலர் தங்களை ஈர்த்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை, தங்கள் படைப்புகளிலேயே படைப்பாளிகள் அளித்து விடுவர். மேலும் சிலரோ, எவ்வித வெகுமதியும் பெறாமல், ஒருவித நம்பிக்கையில் தங்கள் படைப்பைப் பிறர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அதன் விளைவுகளால்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், உண்மையில் இன்னொருவரின் படைப்பைத் திருடும் ஒருவர், சட்டப்படி அந்தப் படைப்பின் உரிமையாளருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதுதான் நியாயமான தர்மம். இதைக் கடைப்பிடிக்காததாலேயே தமிழ் சினிமா உலகில் கதைத் திருட்டு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சிலர் தங்களை ஈர்த்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை, தங்கள் படைப்புகளிலேயே படைப்பாளிகள் அளித்து விடுவர். மேலும் சிலரோ, எவ்வித வெகுமதியும் பெறாமல், ஒருவித நம்பிக்கையில் தங்கள் படைப்பைப் பிறர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.

கதைத் திருடப்படுவதற்கு வேறு காரணம் யாது

மேலும், இயக்குநர் என்றால் சொந்தமாக கதை வைத்திருக்கவேண்டும் என்கிற மாய பிம்பம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள், ஏதாவது ஒரு கதையைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அதன்வகையில்கூட இவ்வகை திருட்டு நடைபெறுகிறது. அடுத்து, பொதுவாக இயக்குநர் ஒருவர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்துப் பணிகளிலும் ஈடுபடும் சூழலில், அனைத்திலும் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாத நிலையில், அவர் தம்முடைய காட்சியமைப்புகளிலோ அல்லது கதைத் திருட்டுகளிலோ தவறிச்செல்ல வழிவகுத்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், இயக்குநர் பா.ரஞ்சித் சொன்னப்படி, கதைத் திருட்டு விவகாரத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையும், பொய்யும் கலந்தே உள்ளது என்பதுதான் பொதுவான விஷயம்.

இயக்குநர் என்றால் சொந்தமாக கதை வைத்திருக்கவேண்டும் என்கிற மாய பிம்பம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள், ஏதாவது ஒரு கதையைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
model image
model imagefreepik

தமிழ்த் திரையுலகில் கதைக்குப் பஞ்சமா?

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், தமிழ்த் திரையுலகில் கதைப் பஞ்சமும் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாகவே, பழைய படங்களைத் தழுவி இந்தக் காலத்திற்கு ஏற்ப சில படங்கள் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, சமீபகாலமாக குறிப்பிட்ட ஒரு சம்பவத்துக்குள்ளேயே சுற்றிவரும் போக்கு, தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. கதை என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் ஒரிரு சமபடங்களின் தொகுப்பாக திரைப்படங்கள் மாறி வருகின்றன என்பதுதான் திரைத்துறையில் உள்ள பலரது விமர்சனமாக உள்ளது.

கதை என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் ஒரிரு சமபடங்களின் தொகுப்பாக திரைப்படங்கள் மாறி வருகின்றன என்பதுதான் திரைத்துறையில் உள்ள பலரது விமர்சனமாக உள்ளது.

’கதை இலாகா இல்லை’ - சுட்டிக்காட்டிய பாக்யராஜ்

இதை இயக்குநர் கே.பாக்யராஜ், வெளிப்படையாகவே கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார். அவர், “சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர். வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுக்கின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான்” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, கதாசிரியர்கள் இல்லாத நிலை தமிழ் சினிமாவில் உருவாகி வருகிறது எனச் சுட்டிக்காட்டி இருந்தார், பாக்யராஜ். இதே கருத்தை, இயக்குநர் வசந்தபாலனும் முன்வைத்திருந்தார்.

திரைத்துறைக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விடுகின்றனர். இப்படி, ஒருவரே அனைத்துத் துறைகளையும் கவனிக்கும்போது, அவருடைய வருமானமும் உயர்கிறது; தவிர, பேரும் புகழும் வாங்குகிறார். ஆனால், வெறும் கதை மட்டும் என்றால், அவருக்கு அடுத்தகட்ட வாய்ப்புகள் கிடைப்பது என்பதே அரிதாகிவிடுகிறது. இதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கப்படுகின்றனர். எனினும், அதிக பொறுப்புகளைச் சுமக்க விரும்பாத, இயக்கத்தை மட்டும் நேர்த்தியாகச் செய்ய விரும்பும் சில இயக்குநர்கள், எழுத்தாளர்களைத் தேடிச் செல்லும் நிலையும் தமிழ் சினிமாவில் உள்ளது.

திரைத்துறைக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விடுகின்றனர். இப்படி, ஒருவரே அனைத்துத் துறைகளையும் கவனிக்கும்போது, அவருடைய வருமானமும் உயர்கிறது

பிறமொழிகளில் கதை எப்படி தேர்வு செய்யப்படுகிறது?

அந்த வகையில் பல நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சிலரோ, தங்களுடைய நாவல்களையே திரைப்படமாக எடுத்து வருகின்றனர். எனினும், இதற்கும் போட்டிகள் மிகுந்துள்ளதால் தொழில்திறமையும் அணுகுமுறையும் அவசியம். ஆனால் மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய மொழி எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அம்மொழிகளில் பெரும்பாலும் திரைப்படங்களை இயக்குநர் வெறும் இயக்கப் பணியை மட்டுமே மேற்கொள்கிறார். அவர், கதை இலாகாவை எழுத்தாளர் வசம் ஒப்படைத்துவிட்டு, இயக்குநர் பணியில் தன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் பெரும்பாலும் எழுத்தாளர்களை வசனம் எழுத மட்டுமே உபயோகிக்கிறார்கள். இதனால்தான் தமிழ் சினிமாவில் அதிக கதைத் திருட்டுகளும், தரமற்ற கதைகளும் உருவாகி வருகின்றன.

மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய மொழி எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அம்மொழிகளில் பெரும்பாலும் திரைப்படங்களை இயக்குநர் வெறும் இயக்கப் பணியை மட்டுமே மேற்கொள்கிறார். அவர், கதை இலாகாவை எழுத்தாளர் வசம் ஒப்படைத்துவிட்டு, இயக்குநர் பணியில் தன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறார்.
model image
model imagefreepik

எது எப்படியோ, தமிழ் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல... அதனால் உண்மைகளும் உணர்வுகளும் வெளிக்கொணரப்படுகின்றன என்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டும். ஆகையால், எந்தப் படைப்பாளனையும் பாதிக்காத வகையில் தமிழ் சினிமா தழைத்தோங்கி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதுதான் பலருடைய குரலாக இருக்கிறது. ஆகவே, வருங்காலங்களிலாவது தமிழ் சினிமா திருட்டுகளைத் தடுத்து நிறுத்தி, திறமையை ஊக்குவிக்கும் படைப்பாளிகளின் கரங்களைத் தூக்கிப் பிடித்து அவர்களின் கண்ணீரைத் துடைக்கும் என்று நம்புவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com