ராகுல் அறிவித்த ‘குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம்’ என்றால் என்ன..? அது எங்கிருந்து வந்தது..?

ராகுல் அறிவித்த ‘குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம்’ என்றால் என்ன..? அது எங்கிருந்து வந்தது..?
ராகுல் அறிவித்த ‘குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம்’ என்றால் என்ன..? அது எங்கிருந்து வந்தது..?
Published on

Universal Basic Income : எல்லோருக்குமான அல்லது பொதுவான வருவாய் திட்டம் என்பது மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சத்தீஸ்கரில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்தால் அனைத்து ஏழை மக்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். அது என்ன, யார் அதனால் பயன்பெறுவார்கள் என்ற எந்தவிதமான மேற்கொண்ட தகவல்களையும் ராகுல் காந்தி கூறவில்லை. ஆனால் ஏழைகளின் வறுமையை போக்க, பசியில் இருந்து மக்களை மீட்க இந்த திட்டம் பயன் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Universal Basic Income எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. மக்களை பணம் என்னும் பிரச்னையில் இருந்து மீட்க வேண்டுமானால் அவர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைக்கச் செய்வதே தீர்வு என்றும் அதனை அரசே அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் 16-ம் நூற்றாண்டில் தாம்ஸ் மோர் என்பவர் ஆரம்பிக்க, இப்போது வரை பல்வேறு மாறுதல்களோடு இந்த திட்டம் உலகம் முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை பொருத்தவரை எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பிட்ட தொகையை நேரடியாகவோ அல்லது அரசு அமைப்புகள் மூலமோ வழங்குவார்கள். தற்போதைய நிலையில் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் முறை அறிமுகமாகியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இதனை மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் செயல்படுத்தினார்கள். சில நாடுகளில் சோதனை திட்டமாக சில கிராமங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட தொகுதிகளுக்கோ மட்டும் செயல்படுத்தினார்கள். ஆனால் அனைத்து இடங்களிலும் நடைமுறை சிக்கல் எழுந்தது. அதிகப்படியான செலவு, ஊழல், பணக்காரர்களும் பயன்பெற்ற நிலை போன்றவை முக்கிய சவால்களாக இருந்தன.

இந்தியாவை பொருத்தவரை இந்த திட்டம் குறித்த ஆராய்ச்சி மற்றும் விவாதங்கள் பல ஆண்டுகளாகவே தொடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. சில கிராமங்களை தேர்வுச் செய்து, அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.1500 கொடுக்கப்பட்டது. குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் அந்த பணம் செலுத்தப்பட்டது. அதே போல் 2011-ம் ஆண்டு வாக்கில் டெல்லியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு ஆண்டு சோதனைக்கு பிறகு இதன் பலன்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் “சுகாதாரம், நிதித்தேவை, சார்பில்லா தன்மை ஆகியவற்றில் அதிக முன்னேற்றம் இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு செல்லும் விகிதத்திலும் முன்னேற்றம் இருந்ததோடு, விவசாயம் , அது சார்ந்த தொழில்கள் அதிகரித்திருந்தன. இதனால் பொதுவான வருவாய் திட்டத்தை அமல்படுத்தலாம் என்ற பரிந்துரையும் கொடுக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இந்த திட்டம் குறித்த பேச்சு மீண்டும் எழுந்தது. சிக்கிம், தெலுங்கானா, ஒடிசா மாநில முதல்வர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக இதனை முன்னிறுத்தியதே அதற்கான காரணம். மேலும் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த நேரத்தில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவிக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அரசிடம் இருந்து எந்தவிதமான பெரிய சமிக்ஞைகளும் இல்லை. ஆனால் மத்திய பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம் தனது நண்பர்களோடு சேர்ந்து Universal Basic Income குறித்து ஆய்வில் ஈடுபட்டு , அதில் புதிய முறை ஒன்றை முன்மொழிந்தார். அது Quasi Universal Basic rural Income. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் அல்லது மாதம் ரூ 1500 வழங்குவது. இதனை வழங்க தொடங்கும் நாளில் அரசு வழங்கும் மற்ற மானியங்களை நிறுத்தி விட வேண்டும். இதனால் தேவையற்ற செலவுகள் குறையும். மேலும் இந்த திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்த வேண்டும். இதனால் 75 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் 2019-20 ஆண்டில் 2.64 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் ராகுல் காந்தி ஏழை மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் கொண்டு வரப்படும் என கூறியிருக்கிறார். மேலும் அது அமல்படுத்தப்பட உள்ள முறை குறித்து காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் இருக்கும் என ப சிதம்பரம் கூறுகிறார். அதே நேரத்தில் இது ஏற்படுத்தும் செலவீனம், வரையறை, அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதா, மாநில அரசுகளின் பங்கு, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு எப்படி என பல கேள்விகள் உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com