தொழில்நுட்ப வளர்ச்சியின் தவறான பயன்பாட்டின் விளைவாக, குற்றசம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு மட்டுமே வழி என்கின்றனர் துறைசார் வல்லுநர்கள்.
இந்த கணிணி யுகத்தில் ஆண்ட்ராய்டு போன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது என்றால் மிகையல்ல. பெரியவர்களை காட்டிலும் பல வீடுகளில் குழந்தைகள் கைகளில்தான் ஆண்டராய்டு எனப்படும் தொடுதிரை அலைபேசிகளை பார்க்க முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.. இதிலும் யூடியூப் உள்ளிட்ட சில செயலிகளை 18 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையிலும் யாரும் பின்பற்றுவதில்லை.. தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எளிமையான கையடக்க உபகரணம்தான் என்றாலும், இதனால் ஏற்படும் தீமைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆண்ட்ராய்டு போனை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் முறையற்ற கையாளுதலால் சிக்கல்களில் சிக்கித்தவிக்கின்றனர். ஒருசில நேரங்களில் இணையவழி குற்றங்கள் மரணத்தில் முடிகின்றன என்பதே வேதனை.. இணைய வழிகுற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதே மிகமிக சிரமம் என்பதே உண்மை.. விழிப்புணர்வு ஒன்றே இணைவழி குற்றங்களை தடுக்கும் கேடயம் என்கின்றனர் காவல்துறையிரும், துறைசார்ந்த வல்லுநர்களும்.
இதன் ஒரு முயற்சியாக சேலம் மாநகர காவல்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவியரை உள்ளடக்கிய "சைபர் வாரியர்ஸ்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 36 கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்குழுவினருக்கு இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்தப்பயிற்சியில் நவீன செயலிகளை முறையற்று பயன்படுத்தும் போது என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று எடுத்துரைக்கப்பட்டது. 90 சதவிகித இணைய வழி குற்றங்கள் Facebook எனப்படும் முகநூல் வாயிலாகவே நடப்பதாகவும், எவ்வாறு அவை நடக்கின்றன என்றும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இளைய தலைமுறையினரை தன்னிலை மறந்த மிகுந்த மோகத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய செல்ஃபியால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதிலும் ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோரில் 20 விழுக்காட்டினர் ஈமகாரியங்களில் கூட செல்ஃபி எடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செல்போன் செயலிகளை பயன்படுத்துவோர் அவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தகவல்களை பதிவிடுவதே இணைய வழி குற்றங்களின் ஆனிவேர் என்று கூறும் வல்லுநர்கள், இலவச வைஃபை வசதியை பயன்படுத்தும் போது கூட தனநபரின் சுயதகவல்களை பதிவு செய்யப்படுவதால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மொத்தத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் இதுகுறித்த தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே இணைய வழி குற்றங்களை தடுக்க முடியும் என்பதுமே காவல்துறை மற்றும் வல்லநர்கள் கருத்தாகும்.
தகவல்கள் : மோகன்ராஜ் - செய்தியாளர் , சேலம்.