கோவிட்-19 வாக்சின்கள் எந்த நிலையில் உள்ளன?

கோவிட்-19 வாக்சின்கள் எந்த நிலையில் உள்ளன?
கோவிட்-19 வாக்சின்கள் எந்த நிலையில் உள்ளன?
Published on

உலக அளவில் பல மாதங்களாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் தற்போது எந்த அளவில் உள்ளன?

இந்தியாவில் தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளிகள், தினமும் ஆயிரம் புதிய கொரோனா மரணங்கள் எனும் நிலையை எட்டிவிட்டோம். லாக்டவுன், ஊரடங்கு, முடக்கம் என எத்தனை பெயர்களில் அறிவித்தாலும் பொருளாதாரம் சரிகிறதே தவிர நோய் பரவல் குறையவில்லை.

முன்பு நகர்ப்புறங்களில் மட்டும் இருந்த கொரொனா சமீப வாரங்களாக கிராமப்புறங்களிலும் அதிகமாக பரவியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது. உலக அளவில் பல மாதங்களாக நடைபெற்றுவரும் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தற்போது எந்த அளவில் உள்ளன?

மொத்தம் 165க்கும் அதிகமான தடுப்பூசிகள் ஆராய்ச்சிகளில் உள்ளன. அவற்றில் சுமார் 135 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைக்கு முந்திய நிலையில் உள்ளன.

முதற்கட்ட மனிதப் பரிசோதனை - 23
இரண்டாம் கட்டம் - 14
மூன்றாம் கட்டம் - 9
என்ற எண்ணிக்கையில் ஆராய்ச்சியில் உள்ளன.

தினமும் பல புதிய தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இணக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. எனவே இந்த எண்ணிக்கை தினமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இவற்றில் ஆராய்ச்சிப் பந்தயத்தில் முதலில் வந்து கொண்டுள்ள சில குறிப்பிடத்தக்க தடுப்பூசிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

1. ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனிகா : இவை இரண்டும் சேர்ந்து தயாரித்துள்ள தடுப்பூசி. சிம்பன்சி குரங்குகளில் சளியை உண்டாக்கும் அடினோ வைரஸுடன் கொரோனா வைரஸ் மரபணுத் துகள்களை இணைத்து உருவாக்கியுள்ள தடுப்பூசி. முதற்கட்ட பரிசோதனையில் நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டுவதாகவும் பாதுகாப்பானதாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இப்போது இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்க ஆகிய நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த சோதனைகள் வெற்றிபெற்றால் அக்டோபர் மாதம் முதல் அவசரப் பயன்பாட்டிற்கு இந்தத் தடுப்பூசியை கொண்டுவர இருப்பதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. மார்டனா : மெசெஞ்சர் ஆர் என் ஏ எனப்படும் செய்தித் தொடர்பாளராக செயல்படும் மரபணுத் துகள்களை வைத்து மிகவும் புதிய முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இது. முதற்கட்ட சோதனையில் நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் வந்ததால் தற்போது அமெரிக்காவில் 30,000க்கும் அதிகமானோருக்கு தரப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு அமெரிக்க அரசும் நிதி உதவி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி வெற்றி பெற்றால் அமெரிக்க அரசாங்கத்திற்கு தான் முன்னுரிமை தரப்படும் என்பதால் மற்ற நாடுகளுக்கு இது கிடைக்க தாமதம் ஆகலாம்.

3. சீன நிறுவன தடுப்பூசிகள் : i. சினோவாக், ii.வுகான் உயிரியல் பொருட்கள் நிறுவனம் மற்றும் சினோபார்ம், iii. பெய்ஜிங் உயிரியல் பொருட்கள் நிறுவனம் மற்றும் சினோபார்ம், iv. கேன்சினோ மற்றும் பெய்ஜிங் உயிரியல் பொருட்கள் நிறுவனம் - இந்த நான்கு கூட்டு நிறுவனங்களும் நான்கு தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. முதல் மூன்று நிறுவன தடுப்பூசிகள் செயலிழக்கப்பட்ட கொரோனா வைரஸ்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன.

கேன்சினோ நிறுவன தடுப்பூசி அடினோவைரஸுடன் கொரோனா மரபணுத் துகள்களைச் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. சினோவாக் நிறுவனம் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. வுகான் உயிரியல் பொருட்கள் நிறுவனமும் பெய்ஜிங் உயிரியல் பொருட்கள் நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சோதனைகளை நடத்திவருகின்றன. கேன்சினோ நிறுவன தடுப்பூசிகள் சீன இராணுவப் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவிலும் கேன்சினோ சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

4. இரஷ்ய தடுப்பூசி - காமாலயா எனும் இரஷ்ய நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக் வி எனும் தடுப்பூசி, இரஷ்ய அரசால் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு இப்போது மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் உள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், சைடஸ் கெடில்லா நிறுவனம் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை தவிர சீரம் நிறுவனம் சார்பில் ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்தச் சோதனைகள் திட்டமிட்டபடி வெற்றிபெற்றால் இந்தவருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கலாம்.

கட்டுரையாளர்: மருத்துவர் சென்பாலன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com