எட்டரை லட்சம் கோடி வசூலுக்கு என்ன திட்டம் உள்ளது அரசிடம்?

எட்டரை லட்சம் கோடி வசூலுக்கு என்ன திட்டம் உள்ளது அரசிடம்?
எட்டரை லட்சம் கோடி வசூலுக்கு என்ன திட்டம் உள்ளது அரசிடம்?
Published on

இந்தத் தலைப்பைப் படிக்கும் போதே, "இந்திய வங்கிகளின் வாராக்கடன் தொகை வசூல் குறித்த கேள்வி இது!" என நீங்கள் யூகித்திருந்தால், உங்களுக்கு 100% மதிப்பெண்! நாட்டு நடப்பும், பொருளாதார நடப்பும் ஒருங்கே தெரிந்து வைத்திருக்கும் நபர் என்று உங்களைச் சொல்லலாம். 

சரி.... விஷயத்துக்கு வருவோம். கடந்த ஓராண்டிற்கு முன், 'கிங் ஃபிஷர்' விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் வாங்கியிருந்த 7000 கோடி ரூபாய் கடனைத் திருப்பி தரவில்லை என பேசிக் கொண்டிருந்த நேரத்திலேயே, அவர் காணாமல் போனார். அடுத்த சில நாட்களில், நாட்டை விட்டும் ஓடிவிட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நீரவ் மோடி தன் பங்குக்கு 13,000 கோடி ரூபாயை 'ஆட்டை'யை போட்டுவிட்டு தப்பிவிட்டார். அதன்பிறகு நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வங்கிகள் ஒரு துண்டு சீட்டை நீட்டத் தொடங்கின. அதில் இருந்த தகவல் - "இதோ இன்னொரு ஏமாற்றும் கடனாளி!". இந்த நேரத்தில், "பொதுத்துறை வங்கிகளில்தான் இதுபோன்ற பிரச்னைகள். அதனால், எல்லா வங்கிகளையும் தனியார் மயமாக்கிவிடுங்கள்!" என சில அறிவு ஜீவிகள் பேசத் தொடங்க... ஒரு பட்டிமன்றமே தொடங்கியது. 

எதிர்க்கருத்து சொன்ன தொழிற்சங்கவாதிகள் தங்கள் வாதத்தை முழுசாக முடிக்கும் முன்பே, ஐசிஐசிஐ வங்கியிலும் பிரச்னை என, சின்னத்திரையில் அரங்கு நிறைந்த காட்சிகள் தொடங்கின. அப்போது, "வங்கிகளில் உள்ள பணம் எல்லாம் இப்படி காலியானால், அடுத்து கட்டம் என்ன?" வங்கிகளை நம்பி தன் கையிருப்பை எல்லாம் அதில் சேர்த்து வைத்திருக்கும் அப்பாவி வாடிக்கையாளர்களின் மனதில் எழுந்த கேள்வி இதுதான். அதிலும், மத்திய மற்றும் மாநில அரசுகள்.... பொதுத்துறை நிறுவனங்கள்... போன்றவற்றில் வேலை செய்து ஓய்வு பெற்ற பலரும், அப்போது கிடைத்த பல்வேறு பலன்களையும் பொதுத்துறை வங்கிகளில் டெப்பாசிட் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் - அவர்களது பணமெல்லாம், இப்படி கரைந்து போனால்..... அவர்களது நிலை என்ன என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.   

வங்கிப் பணம் என்றால், - பொதுத்துறை... தனியார்த்துறை... என எதுவானாலும், அவற்றில் பெரும்பகுதி பொதுமக்களிடம் இருந்த பெறப்பட்டவைதான். அது, சேமிப்பு கணக்கு  மூலமோ.... நடப்புக் கணக்கு  வழியாகவோ.... வைப்பு நிதித் தொகை (Fixed Deposit) வகையிலோ....எப்படியானாலும், பொதுமக்களிடம் இருந்து வந்த பணம்தான். அதை மற்றவர்களுக்குக் கடனாக கொடுத்து, திரும்ப வசூல் செய்வதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதிதான் நமக்கு வட்டியாகக் கிடைக்கிறது. அப்படியிருக்க, வங்கிகள் கடனாகக் கொடுத்த தொகை திரும்ப வசூல் செய்யப்படாமலேயே போனால்....? வங்கியை நம்பி பணம் போட்டவர்களின் கதி என்னவாகும்? இதுதான், இன்று இந்திய வங்கித்துறை சந்திக்கும் மிகப்பெரிய... ஆனால், மிக முக்கியமான கேள்வி!

இந்த நிலையில் இந்திய வங்கிகள் கடனாகக் கொடுத்து, மீண்டும் திரும்பி வராமல் இருக்கும் மொத்த தொகை... அதாவது, வாராக்கடன் (NPA)அளவு எவ்வளவு தெரியுமா....? தலைப்பில் சொல்லப்பட்டுள்ள எட்டரை லட்சம் கோடி ரூபாய்! ஆனால், அதுவும் கூட, கடந்த ஆண்டின் செப்டம்பர் நிலவரம். அதையே, மார்ச் 2018 நிலவரப்படிப் பார்த்தால், 9 அல்லது 9.5 லட்சம் கோடி ரூபாய் என்கின்றன நம்பகமானக் கணிப்புகள். சரி.. அத்தனை கோடிகளை... ஸாரி... இத்தனை லட்சம் கோடிகளை..., திரும்ப வசூல் செய்ய அரசு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா.... நடவடிக்கை எடுக்கிறதா என்பதையும்... அப்படி இருந்தால், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதையும் அறிய நம்மில் பலருக்கும் ஆர்வம் இருக்கத்தானே செய்யும். காரணம் - அதெல்லாம், நம் வியர்வையில் விளைந்த பணம்! 

விஜய் மல்லையாவையும், நீரவ் மோடியையும் தப்பி ஓட விட்டு... இப்போது அவர்கள் பின்னால், ஒடிக் கொண்டிருக்கும் மத்திய அரசு குறித்து, நம் எல்லாருக்குமே வருத்தம் இருக்கிறது. இந்திய வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு, அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அது அவர்கள் பெயரிலும், பினாமியாகவும் வைத்துள்ள எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வகை செய்கிறது. ஆனால், அவர்கள் தவிர மீதமுள்ள.... வெளிநாட்டுக்கு ஓடாமல், உள்நாட்டிலேயே வலம் வந்து கொண்டு, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை ஏதுவும் உண்டா....? முயற்சிகள் ஏதுவும் நடக்கிறதா....? அப்படியானால் அவை என்ன....? இது பலரது கேள்வி! 

ஒரு நேரத்தில் வங்கியில் கடன் வாங்கி, அதைக் கட்டாமல் போனால், வங்கி - நீதிமன்றத்துக்கு செல்லும். சிவில் வழக்கு தொடர்ந்து, கடனாளியிடமிருந்து பணத்தை வசூல் செய்ய முயற்சி நடக்கும். ஆனால், அதனால் பெரிய பலன் இருக்காது. காரணம், பல்வேறு காரணங்களைச் சொல்லி..... கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து நடத்தும் சட்டப்போராட்டம் முடிவுக்கு வருவது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என்பதைத் தவிர, அவ்வாறு வரும் முடிவு வங்கிக்கு சாதகமாகத்தான் அமைகிறதா என்பதிலும் பல கேள்விகள் இருந்தன. அடுத்தடுத்து கடன் வசூல் தீர்ப்பாயம் (Debt Recovery Tribunal), சர்ஃபாஸி சட்டம் (SARFAESI Act) போன்ற பல முயற்சிகளை கடந்த காலங்களில் அரசும், வங்கிகளும் முயற்சி செய்து பார்த்தன. ஆனால், இதில் நிஜமாகவே தவறு செய்த பலர் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பது தொடர, உண்மையிலேயே கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத அளவு சிக்கலில் இருந்த பலர் சிரமங்களைச் சந்தித்து அல்லாடியதும் நடந்தது. இப்போது, அவற்றை எல்லாம் தாண்டி "இன்சால்வன்ஸி அண்ட் பேங்க்ரப்ட்ஸி சட்டம் (Insolvancy & Bankruptacy Code) எனக் குறிப்பிடப்படும், புதிய திவால் சட்டம் அமலுக்கு வந்து. இதுவரை ஓரளவு நம்பகமானத் தீர்வைத் தரத் தொடங்கியுள்ளது. இந்த நடைமுறைகளில் - நிபுணர்களுக்கு மட்டுமே புரியும், நுட்பமான விஷயங்களை விட்டுவிட்டு, மற்ற விஷயங்களை தெரிந்து கொள்வது - வங்கியில் பணம் போட்டவருக்கு ஓரளவு நம்பிக்கை தரும் எனத் தோன்றுகிறது. 

2015ம் ஆண்டில், தனக்கான வடிவத்தைப் பெற்று வந்த புதிய திவால் சட்டம், உருவிலும் பொருளிலும் முழுமையடைந்து நடைமுறைக்கு வந்தது 2016ல்தான். அப்போது இந்தச் சட்டத்தை அமலாக்க தனி வாரியம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அதை ஐபிபிஐ என்றார்கள். அதாவது, இன்சால்வன்ஸி அண்ட் பேங்க்ரப்ட்ஸி போர்ட் ஆப் இந்தியா (Insolvancy & Bankruptacy Board of India).அது தற்போது ஆன்லைனில் ஒரு தேர்வை நடத்தி, சில தகுதியான நபர்களைத் தேர்வு செய்கிறது. அவர்களை இன்சால்வன்ஸி நிபுணர்கள் (Insolvancy Professionals) எனக் குறிப்பிடுகிறது. அதாவது, புதிய திவால் சட்ட நிபுணர்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள்தான் வருங்கால வசூல்ராஜாக்கள். வங்கிகள் கொடுத்து வசூலாகாமல் உள்ள கடன்களை வசூல் செய்யப் போகும் 'ஈட்டிக்காரர்கள்'. இதுதான் அரசின் எதிர்பார்ப்பு. நீதிமன்ற படியேறி ஓய்ந்து போன வங்கிகள், இனி இந்த வசூல்ராஜாக்களை அணுகலாம். 

"இன்ன நிறுவனம்.... எனக்கு இவ்வளவு தொகை பாக்கி வைத்துள்ளது. அதை இத்தனை நாட்களாக திருப்பித் தரவில்லை. அதற்கான, முயற்சி அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. என்னால் ஆன முயற்சி எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். முடியவில்லை. எனது பணம் திரும்ப கிடைக்க ஆவன செய்ய வேண்டும்" என இந்த வசூல் ராஜாக்களிடம் கோரிக்கை வைத்தால், அவர்கள் வேலையைத் தொடங்குவார்கள். இந்த முறையை Insolvency Resolution எனக் குறிப்பிடுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. ஒரு நிறுவனத்தின் மீது, இப்படி புகார் சொல்வது- அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த நிறுவனம் வேறு வகையில், பணம் பாக்கி வைத்துள்ள மற்ற யாரும் கூட புகார் கொடுக்கலாம். அதாவது, அந்த நிறுவனத்துக்கு மூலப் பொருள் சப்ளை செய்தவர். அதற்கான பணம் கிடைக்காமல் இருந்தால், அவரும் புகார் செய்யலாம். நிறுவனத்துக்காக வாங்கிய இயந்திரங்களுக்கான தொகை.... தொழிற்சாலை அமைந்துள்ள இடத்துக்கான வாடகை..... அது ஏன்?.... அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தால், அவர்கள் கூட இவ்விதமாக புகார் செய்யலாம். ஆனால், தற்போதைய நிலையில் அந்த கடன் / பணப் பாக்கி இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். இதை 10 லட்ச ரூபாயாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை இருக்கிறது. ஆனால், அதை ஏற்க தற்போதைய நிலையில் மத்திய அரசு உடன்படவில்லை.

சரி.... விஷயத்துக்கு வருவோம். இவ்விதமான கடன் வசூல் முயற்சி - கடன் கொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல. கடன் வாங்கி நிறுவனத்தை உண்மையாகவே நடத்தி, அதனால் நிஜமாகவே நொடித்துப் போன தொழிலதிபர்களுக்கும் உதவும். அதாவது, 'தன்னால் மேற்கொண்டும் தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியவில்லை; அதற்காக பணம் இல்லை. வெளியில் தன்னால் தற்போது கடன்பெற இயலாது' என்ற நிலையில் உள்ள தொழிலதிபர் இவர்களை அணுகி பிரச்னையைச் சொன்னால், வசூல்ராஜாக்கள் அவர்களது கோரிக்கையையும் ஏற்று, நடவடிக்கை எடுப்பார்கள். அது அந்த நிறுவனத்தையே வேறு தகுதியான நபருக்கு விற்பதாகக் கூட இருக்கலாம். ஆனால், கடன்காரர்களை சந்திக்க அஞ்சி கூனிக்குறுகும் நியாயமான தொழிலதிபர், தனது கடன் பிரச்னையில் இருந்து மீண்டு வெளியேறிலாம்.  இந்த வகையில் - கடன் கொடுத்தவர்... கடன்பெற்றவர்... என இருதரப்பின் கடன் பிரச்னைக்கான தீர்வும் 180 நாட்களில், அதாவது 6 மாதங்களில் முடிவுக்கு வர வேண்டும் என்பது. இந்தப் புதிய நடைமுறையின் மிக முக்கியமான அம்சம். அதாவது, கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டு இருந்த வழக்குகள் போன்ற நிலைமை இருக்காது. அதனால், 6 மாத கால முடிவில் இந்த வழிமுறை மூலம் திரும்பக் கிடைக்கும் கடன் பாக்கித் தொகை, சற்று குறைவாகவே இருந்தாலும் கூட பரவாயில்லை. எப்போது கடன் பாக்கி திரும்பக் கிடைக்கும் என்ற நிச்சயமில்லாத நிலையும்... அந்தக் காலம் வரையான வட்டித் தொகையும் மிச்சமாகும் எனச் சொல்லலாம்.   

அப்படி வரும் விண்ணப்பத்துடன் தொடர்புள்ள - கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனத்திடமிருந்து வசூல் செய்ய, 'வசூல்ராஜாக்கள்' என்னவெல்லாம் செய்யலாம்... அதை எப்படியெல்லாம் செய்யலாம் என நிறைய விதிகள் உள்ளன. ரொம்பவும் நுட்பமான அந்த விஷயங்களின்படி செயல்பட்டு, அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க முடியுமா என ஆய்வு செய்து, அதற்கான வாய்ப்பு இருந்தால்.... அப்படி செய்ய தயாராக உள்ள ஆளைத் தேடிப் பிடித்து, அவரிடம் ஒட்டுமொத்த நிறுவனத்தையே கூட விற்கலாம். அப்படி நடந்தால், வங்கியிடம் கடன் வாங்கியவர் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டுதான் நிற்க வேண்டும்; குறுக்கிட முடியாது. ஒருவேளை, கூடுதலாகக் கடன் தந்தால், ஏற்கனவே நிறுவனத்தை நடத்தியவரே கூட நிறுவனத்தைக் காப்பாற்றி விடுவார் என நம்பினால், அதற்கும் வசூல் ராஜா வங்கிகளிடம் பரிந்துரைக்கலாம். இதற்கெல்லாம் மாறாக - ஒருவேளை... இந்த நிறுவனத்தில் தற்போது இருப்பதையெல்லாம், "பழைய இரும்பு.... பித்தளைக்கு பேரிச்சம் பழம்!" என, சாலையில் கூவி விற்பதுபோலத்தான் செய்ய முடியும். வேறு யாரும் இதில் எதுவும் செய்வதற்கு ஒன்றுமில்லை. அதற்கு சாத்தியங்கள் இல்லை என வசூல்ராஜா முடிவு செய்தால், அப்படியும் கூட செய்யலாம். ஆனால், எந்தக் காரியமாக இருந்தாலும், அதை 180 நாட்களுக்குள்.... அதாவது 6 மாதத்திற்குள் செய்ய வேண்டும். அதற்காகத்தான், 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' போன்றவர்களை பணியமர்த்தாமல், இந்தப் பணியைச் செய்ய தகுதியானவர்களைச் தேர்வு செய்ய.... தனியாக ஆன்லைனில் தேர்வு எல்லாம் நடத்தி.... அதன்பிறகும் தொடர்ந்து பயிற்சி எல்லாம் கொடுத்து ஆட்களை தேர்ந்தெடுக்கிறது ஐபிபிஐ.

இதில் இன்னொரு விஷயம் கூடுதல் நம்பிக்கைத் தருகிறது. அதாவது, வசூல்ராஜாக்கள் களமிறங்கி கடன்பெற்ற நிறுவனத்தை அலசும்போது, அந்த நிறுவனத்தின் சொத்துகளை... கையிருப்பை... மீட்க வாய்ப்புள்ள பிற விஷயங்களின் உண்மையான சந்தை மதிப்பிட, தற்போது தகுதியுள்ள மதிப்பீட்டாளர்களை மட்டும்தான் நியமிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருப்பதுடன், அதற்கு தகுதியான மதிப்பீட்டாளர்களை அடையாளம் காணும் பணியையும் ஐபிபிஐ தொடங்கியுள்ளது. அதனால், கடந்த காலங்களில் நடந்ததுபோல இல்லாமல், நிகரச் சொத்துகளின் நிஜமான சந்தைமதிப்பு கணக்கிடப்படுகிறது. அதனால், பாக்கியுள்ள கடன்தொகையில் - முடிந்தவரை எவ்வளவு அதிகபட்சமாக வசூல் செய்ய முடியுமோ, அந்தத் தொகையை வசூல் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

எனவே, இந்த வகையில், வங்கிகள் கொடுத்தக் கடனில், திரும்பி வராதக் கடனை, வசூல் செய்யும் காரியங்கள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன. நிறுவனங்களிடமிருந்து மட்டுமல்ல; கடன் வாங்கிய நபர், தனிநபராக இருந்தால், அவரிடமிருந்தும்....! கூட்டு நிறுவனமாக இருந்தால், அதனிடமிருந்தும்...!! இப்படி பலமுனைகளில், இந்தப் புதிய திவால் சட்டம் இந்தியாவில் தற்போது கடன் பாக்கி வசூலில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக... வானில் தெரியும் வால் நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறையிலான கடன் பாக்கி வசூல், தற்போது பாக்கியுள்ள முழுதொகையையும் பெற்றுத் தருவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகள் கடன்காரனின் பின்னால் அலைந்து... திரிந்து... - அதற்காகச் செலவிடும் தொகை, கடனை வசூல் செய்ய தாமதமாகும் காலம் வரையான வட்டி போன்றவற்றை செலவாகிக் கருதி, அதைக் குறைத்துக் கொண்டால்... "வந்தவரை லாபம்... அது முடிந்தவரை, முன்னதாகக் கிடைத்தால் சரி!" என்ற யுக்திப்படி, புதிய திவால் சட்டமே தற்போதுள்ளதில் சிறந்த அணுகுமுறையாகத் தெரிகிறது.

எனினும், இது முழுமையாக நடைமுறைக்கு வந்து... தீவிரமடையும்போதுதான் இந்த நடைமுறையின் மற்ற பிரச்னைகள் என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும். அதை அப்போது பார்த்து, மாற்றங்களைச் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இப்போது முன்னேறலாம். எட்டரை லட்சம் கோடியல்ல; மொத்த வாராக்கடன் பாக்கி ஒன்பதரை லட்சம் கோடி ரூபாயே ஆனாலும்....., அதில் ஓரிரு லட்சம் குறைந்தாலும் பரவாயில்லை!. மீதித் தொகை வசூலாகி, அது வங்கிகளின் கைக்குத் திரும்பி, அந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் பங்கெடுக்கும்போது ஏற்பட வாய்ப்புள்ள மாற்றங்களை... முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்திருப்போம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com