நீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன?

நீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன?
நீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன?
Published on

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்து உள்ளது. நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கு கடந்து வந்த பாதை என்ன? - பார்ப்போம்

கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மே 6ஆம் தேதி நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி தவிர 9 பட்டியலிடப்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன.

இதில் தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் இருந்த 180 கேள்விகளில் 68 தவறுகள் இருந்தன, இதனால் 49 கேள்விகள் பிழையாக இருந்தன. அதாவது நான்கில் ஒரு கேள்வி தவறானது. இவை தவறான மொழிபெயர்ப்பு, மற்றும் அலட்சியத்தால் ஏற்பட்டவை. ஒரு கேள்விக்கான மதிப்பெண் 4 எனும்போது, இந்தக் குளறுபடிகளால் பாதிக்கப்படும் மதிப்பெண்கள் 196 ஆகும். இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தவறுகளால் பாதிக்கப்பட்டனர்.

நீட் வினாத்தாளின் பல பிழைகள் அதீத அலட்சியத்தால் ஏற்பட்டவையாக இருந்தன. உதாரணமாக, சீட்டா என்ற ஆங்கில வார்த்தையை சிறுத்தை என்று மொழி பெயர்க்காமல் ‘சீத்தா’ என்று மொழி பெயர்த்தது, செங்குத்து என்று மொழிபெயர்க்க வேண்டியதை நேர்குத்து என்று மொழி பெயர்த்தது, இயல்பு மாற்றத்தை இயல் மாற்றம் என்றும், பலகூட்டை பல் குட்டு என்றும், பழுப்பு என்பதை பழப்பு என்றும், கூட்டுறவை பகிர்ந்துறவு என்றும், வெளவாலை வவனவால் என்றும், ஆக்டோபஸ்ஸை ஆதடபஸ் என்றும் அச்சிட்டது சில உதாரணங்கள்.

நீட் வினாத்தாள்களில் பாடத்திட்டம் அல்லாத பிற மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளும் இடம்பெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்து இருந்ததாலும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலேயே பெரும்பாலான கேள்விகள் இருந்ததாலும், மொழிபெயர்ப்புத் தவறுகளை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்வதும் கடினம். அவர்கள் தங்களுக்குத் தெரியாத கேள்வி என்று நினைக்கவே வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2ஆம் தேதியே நீதிபதிகள் கடுமையான கேள்விகளை சிபிஎஸ்இயிடம் முன்வைத்தனர். அவை நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகிறது?

நீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன?

நீட் தேர்வு தொடர்பான கேள்விகள் எந்த பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன? அவை எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன?

 தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதா?.

 இந்தக் கேள்விகளுக்கு ஜூலை 6ல் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறினர். அத்தோடு போட்டி தேர்வு என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

 பின்னர், ஜூன் 6ஆம் தேதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் சி.பி.எஸ்.சி.யிடம் நீதிபதிகள் பல கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது சி.பி.எஸ்.இ. நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது. நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்? வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? – என்று கேட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இன்று அந்த வழக்கில் தமிழில் நீட் எழுதிய அனைவருக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் நீட் தரவரிசை மாற்றம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com