எம்பிசி பிரிவிலிருந்து எஸ்.டி. பிரிவுக்கு எங்களை மாற்றுங்கள் - நரிக்குறவர்கள் கோரிக்கை

எம்பிசி பிரிவிலிருந்து எஸ்.டி. பிரிவுக்கு எங்களை மாற்றுங்கள் - நரிக்குறவர்கள் கோரிக்கை
எம்பிசி பிரிவிலிருந்து எஸ்.டி. பிரிவுக்கு எங்களை மாற்றுங்கள் - நரிக்குறவர்கள் கோரிக்கை
Published on

கல்வி,வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நரிக்குறவ சமுதாய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் கோரிக்கை என்ன விரிவாக பார்க்கலாம்.

அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. பயில்பவரை மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே கூட கல்வி உயர்த்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வசித்து வரும் நறிக்குறவர்களுக்கு கோயில்களில் அன்னதானம் மறுக்கப்படுவதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் மூன்று நாள்களுக்கு முன் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் அன்னதானத்தில் நரிக்குறவ சமுதாய மக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

இதுதொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த அஸ்வினி, இனி தினந்தோறும் தங்களுக்கு மரியாதையுடன் உணவு வழங்குவார்கள் என நம்புவதாக கூறினார். மேலும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்காக எம்.பி.சி. பிரிவிலிருந்து எஸ்.டி. பிரிவுக்கு தங்கள் சமுதாயத்தை மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தது போதும் என, கல்வி மூலமாக தங்களின் முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்ந்து வரும் நரிக்குறவ மக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.இதுதான் எங்கள் வீடு என்று கூறுவதற்கு ஒரு இடமோ, இதுதான் எங்கள் பணி என்று கூறுவதற்கு நரிக்குறவ மக்களிடம் எதுவும் இல்லை. நாடோடி வாழ்க்கையை வாழும் இவர்கள், சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுவது, தொடர்கதையாக இருக்கிறது.

நரிக்குறவர்கள் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் பாரம்பரியத் தொழில் வேட்டையாடுதல். ஆனால், வேட்டையாடுவதற்கு அரசு தடை விதித்ததால், அணிகலன்களை விற்கும் வேலைகளை செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

சமுதாயத்தில் தாங்களும் மதிக்கப்பட வேண்டும், முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்றால் அது கல்வியினால் மட்டுமே முடியும் என்கிறார்கள், நரிக்குறவ மக்கள். ஆனால், இந்த சமூகத்தில் 5 விழுக்காட்டினரே கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். பல தடைகளை, அவமானங்களை தாண்டி பட்டம் பெற்றவர்களும் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலேயே தங்களை பணிக்கு அமர்த்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

சரி, அரசு வேலைக்கு செல்லலாம் என்று முயன்றால் கூட, தங்கள் சமூகம் எம்.பி.சி. பிரிவில் இருப்பதால் அதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்களில் பட்டம் பெற்று அலுவலக வேலையில் 2 பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் தங்களை அரசு எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நரிக்குறவர் சமூகத்தை எஸ்.டி. வகுப்பில் சேர்க்க கடந்த 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும், போதிய ஆதரவு இல்லாததால் அம்முயற்சி தோல்வி அடைந்தது. நரிக்குறவர் நல வாரியத்தின் மூலமாக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வந்தாலும், அது அச்சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் சென்று சேர்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

இது தொடர்பாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஸ்வினி கூறுகையில், ''படிப்பு தான் எல்லாருக்கும் மத்தியிலும் எங்களை சமமாக கருத வைக்கும். பள்ளியில் எங்கள் பிள்ளைகளுக்கு சரியாக பாடம் கற்பிக்கப்படுவதில்லை. எங்கள் பிள்ளைகளை தனியாக அமரவைத்து, உதாசீனப்படுத்துகின்றனர். பள்ளிக்கூடங்களில் பாகுபாடு நிலவுகிறது. மற்ற மாணவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை. உறவினர்களில் கூட பலரும் பெரிய அளவில் படிக்கவில்லை. ஆனால், எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு படிக்க ஆர்வம் இருக்கிறது'' என்றார்.

நரிக்குறவர் பட்டதாரி சிவா கூறுகையில், ''நான் பிசியோதெரபி 2ம் ஆண்டு வரை படித்தேன். குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். எனக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று வேலை செய்து நாடு திரும்பியிருக்கிறேன். எங்கள் மக்களுக்கு எந்தவித சலுகையும் கொடுப்பதில்லை. எங்கள் சமூக மக்கள் இன்னும் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை. தினம் தினம் போராடியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சாப்பாடுக்கே வழியில்லை என்றபோது கல்வி என்பது அடுத்தக்கட்டமாக பார்க்கிறார்கள்.

பல்வேறு சிரமங்களை மீறி வேலைக்கு சென்றால் நிறுவனங்கள் மறுத்துவிடுகின்றனர். ஒரு இன்ஞ் குறைவாக இருந்த காரணத்தால் எங்கள் சமூகத்தில் ஒருவரால் காவல்துறையில் சேரமுடியவில்லை. அதுவே நாங்கள் ST சமூகத்தில் இருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்கும். குரூப்3 தேர்வெழுதிய உறவினர் ஒருவர் 2 மார்க் குறைவானதால் வாய்ப்பை இழந்தார். இட ஒதுக்கீட்டு இருந்திருந்தால் அவர் அரசுப்பணியை பெற்றிருப்பார்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com