ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன?

ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன?
ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன?
Published on

நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்ற சி.பி.ஐ.யின் கோரிக்கையை இன்று ஏற்றுள்ளது இண்டர்போல். ரெட் கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன? இண்டர்போலின் பல வண்ண நோட்டீஸ்களுக்கு அர்த்தங்கள் என்ன? பார்க்கலாம்.

இண்டர்போல் என்பது சர்வதேச புலனாய்வு அமைப்பு. இதில் இந்தியா உட்பட 190 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.

எல்லைகளைத் தாண்டிய காவல் நடவடிக்கைகளுக்காக இண்டர்போல் 8 வகையான நோட்டீஸ்களைப் பிறப்பிக்கும். அவற்றில் ஒரு நோட்டீசே ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகும்.

ரெட்கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கண்டுபிடித்து சரணடைய வைத்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இண்டர்போல் ஏற்கிறது என்பதே இதன் அர்த்தம்.

இது தவிர காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் யெல்லோ கார்னர் நோட்டீஸ், குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக் கோரும் ப்ளூ கார்னர் நோட்டீஸ், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு எச்சரிக்கை செய்யும் கிரீன் கார்னர் நோட்டீஸ், அடையாளம் தெரியாத உடல்களைக் கண்டறியும் பிளாக் கார்னர் நோட்டீஸ், குற்றவாளிகளின் சாதனங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் பர்பிள் கார்னர் நோட்டீஸ், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர், நிகழ்வு அல்லது பொருள் பற்றிய எச்சரிக்க்கை செய்யும் ஆரஞ்ச் கார்னர் நோட்டீஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலால் தேடப்படுபவர்கள் குறித்த சிறப்பு நோட்டீஸ் ஆகிய வேறு 7 நோட்டீஸ்களையும் இண்டர்போல் வெளியிடுகிறது.

வேறு தேசங்களுக்குச் சென்ற குற்றவாளிகள் மீது காவல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு கெடாமல் இருக்கவே இந்த நோட்டீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாக கடந்த 2015ல் லலித் மோடிக்கு எதிராக இண்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com