கிரிமிலேயர் என்பது குறித்து பி.பி.சர்மா குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகின்றன.
இந்த தருணத்தில், இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் பிரிவினர் யார் என்பது பற்றிய ஒரு சுருக்கமான வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு என்பது சாதிய படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது பொருளாதா ரீதியாக முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள் என்ற அளவீடுகள் ஏற்கப்படுவதில்லை. ஆனால் மத்திய அரசு விதிகளின்படி ஒருவர் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும், அவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவராகவும் இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார அளவுகோல்தான் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ‘‘இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல” என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தை நாம் இந்த நேரத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது.
27 சதவீத இடஒதுக்கீடு
1990-ஆம் ஆண்டில் மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார். அதனை எதிர்த்து வட மாநிலங்களில் எதிர்ப்பும் கலவரமும் ஏற்பட்டது. இடஒதுக்கீடு ஆணையை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையை பெற்றனர். அடுத்து வந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் ஆணை 1991 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையும், உச்ச நீதிமன்ற வழக்கில் சேர்க்கப்பட்டது.
இறுதியாக, இந்த இரு வழக்குகளுக்கும் சேர்த்து உச்சநீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும். பி.வி.நரசிம்மராவ் பிறப்பித்த பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களைக் கண்டறிந்து (கிரிமிலேயர்), அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிரிமிலேயர் யார் யார்?
பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர் பற்றி கண்டறிய 1993, பிப்ரவரி 22 ஆம் தேதியன்று நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு. பின்னர், அந்தக் குழு பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள் (கிரிமிலேயர்) யார் என்று பட்டியலிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தது. அதனால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டவர்களாக அறியப்படும் கிரிமிலேயர் பிரிவினர், 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தமுடியாத நிலைஏற்பட்டது.
நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழு பல்வேறு பதவி வகிப்பவர்களை ஆறு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள்தான் கிரிமிலேயர் எனப் பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், மத்திய, மாநில அரசு சர்வீஸ் கமிஷன் ஆணையர்கள், மத்தியதணிக்கைத்துறை தலைவர் உள்ளிட்ட பதவிகள். அதில், ஆளுநர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது.
மத்திய, மாநில அரசில், குரூப் ஏ பதவிகள், கணவன் மனைவி இருவரும் குரூப் பி பதவிகள், பொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசுக்கு ஈடான பதவி எது என கண்டறியும்வரை வருமான அடிப்படையில், ராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கும் மேல்நிலை பதவியில் உள்ளவர்கள், வணிகர்கள், தொழில் சார்ந்த பிரிவினர், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில்முறை நிர்வாகத்தினர், சொத்து வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளவர்கள் (தற்போது வருமாவரம்பு மாற்றப்பட்டுள்ளது) மற்றும் செல்வம் வைத்திருப்போர் ஆகியோர் கிரிமிலேயர் என அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிரிமிலேயரை மீண்டும் மறுவரையறை செய்வதற்காக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இயக்குநர் பி.பி. சர்மா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை அடையாளம் காண்பதற்கு அவர்களது சம்பளத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அந்தக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை
செய்தது. தற்போதைய வருமான வரம்பு 8 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் எனவும் அண்மையில் தகவல் வெளியானதால் எதிர்ப்புக் குரல்கள் எழத்தொடங்கின.
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
கிரிமிலேயர் பிரிவில் வருபவரின் வருமான வரம்பு 2017 ஆம் ஆண்டில் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது கிரிமிலேயர் பிரிவினருக்கான
தகுதியை நிர்ணயிப்பதில், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி அதை திருத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இடஒதுக்கீடு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவில்லை. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வைத்துள்ளார்.
மேலும், “இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் கிரிமிலேயர் பிரிவினர் யார் என்பதை முடிவு செய்யும்போது, சம்பளமும், விவசாய வருமானமும் அவர்களின் வருவாயில் தற்போது சேர்க்கப்படுவதில்லை. எனவே கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் சம்பளம் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள கொள்கையே நீடிக்கவேண்டும்” என்றும், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில்
தமிழக அரசை முன்மாதிரியாக மத்திய அரசு கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எதிர்ப்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கிரிமிலேயர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த விவாதத்தைத் திரும்பப் பெறுதல், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல், மருத்துவப் படிப்புகள் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான (நீட்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை ரத்து செய்தல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இடஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைதானே தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையல்ல. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரிமிலேயரை வகைப்படுத்துவதற்கான வருவாய் ஆய்வுவரம்பிற்குள் அவர்களது சம்பளத்தைச் சேர்ப்பது என்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்துவரும் சமூகத் தடைகளைப் புறக்கணிப்பது போன்றதாகும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.இப்படி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும்பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பதில் தேவையற்ற பொருளாதார அளவுகோலைப் புகுத்தி சம்பளம், விவசாய வருமானம் உள்ளிட்ட 12 லட்சம் என்றெல்லாம் உயர்த்தி இடஒதுக்கீட்டின் அடிப்படைத்தத்துவத்தையே அழிக்க முயற்சி செய்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
குற்றம்சாட்டுகிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு, பாதுகாக்கப்படும் முக்கியக் கோட்பாடாக இடஒதுக்கீடு இருந்துவருகிறது. அது பொருளாதார அடிப்படை என்பதாக அரசமைப்புச் சட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவுகள் கிடையாது. பிரதமர் நேரு, நாடாளுமன்றத்தில் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்த விவாதத்தின்போது கூறியதுபோல, அது நிலையான அளவுகோல் அல்ல; ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது என்பதே காரணம்.
பல ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான நலிந்த மக்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்கித் தருவதற்காக தலைவர்கள் போராடி பெற்ற உரிமையான இடஒதுக்கீடு, எப்போதும் எரியும் நெருப்பாக இருந்துகொண்டே இருப்பதுதான் இந்திய எதார்த்தம்.
சுந்தரபுத்தன்