பெகாசஸ் உளவு மென்பொருள் (Pegasus Spyware) விவகாரம் சர்வதேச அளவில் பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த மென்பொருள் வாயிலாக, பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த உளவு மென்பொருளால், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் வரும் நாட்களில் தொடர்ந்து வெளியிடப்படும் என இதற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் 'பெகாசஸ் புராஜக்ட்' (Pegasus Project) அறிவித்துள்ள நிலையில், பல்வேறு அரசாங்களின் கண்காணிப்பு செயல்கள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் 'பெகாசஸ்' விவகாரம் தொடர்பாக தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான அம்சங்களை பார்க்கலாம்.
உளவு பட்டியல்? - பெகாசஸ்' எனும் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் என கருதப்படும் 5,000 பேரின் பட்டியல் கசிந்துள்ளது. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் இதில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய பத்திரிகையாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை 'தி வயர்' (The Wire - இணைய செய்தித் தளம்) வெளியிட்டுள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள் பெயர்கள், பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக 'தி வயர்' தெரிவித்துள்ளது.
என்ன பிரச்னை? - 'பெகாசஸ்' உளவு மென்பொருள் பொதுவாக அரசு அமைப்புகளால் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதால், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அரசாங்களின் கண்காணிப்பு உள்ளாகியிருக்கலாம் அல்லது கண்காணிக்கப்படுவதற்காக இலக்காக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவில் பாதிப்பு: இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பத்திரிகையாளர்களில் 'இந்துஸ்தான் டைம்ஸ்', 'இந்தியா டுடே', 'தி இந்து', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆகிய முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்களும் இருப்பதாக 'தி வயர்' செய்தி தெரிவிக்கிறது. 'தி வயர்' இணைய செய்தித் தளத்தின் நிறுவனர் மற்றும் அதன் பத்திரியாளர்கள் சிலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள சிலரது போன், பெகாசஸ் ஊடுருவலுக்கு உள்ளானதை டிஜிட்டல் புலனாய்வு மூலம் தெரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் 'தி வயர்' தெரிவித்துள்ளது.
உளவு மென்பொருள்: பெகாசஸ் மென்பொருளின் தன்மை பற்றி தெரிந்துகொண்டால், இந்தப் பட்டியல் வெளியானதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். 'பெகாசஸ்' என்பது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO Group) எனும் நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருளாகும். எனினும், இந்த மென்பொருள் எல்லோருக்குமானது அல்ல. தேர்ந்தெடுத்த அரசு அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருளை நிறுவனம் விற்பனை செய்கிறது. தனியார்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.
என்ன செய்கிறது? - 'பெகாசஸ்' மென்பொருள் என்ன செய்கிறது என்றால், பயனாளிகளின் போனில் உள்ள ஏதேனும் ஓர் ஓட்டை வாயிலாக அந்த போனில் நுழைந்து, அதன் செயல்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள வழி செய்கிறது. பெகாசஸ் மென்பொருள் நிறுவப்பட்டுவிட்டால், அந்த போனின் மைக் மற்றும் கேமரா உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டவர்கள் உளவு பார்க்கலாம். போனில் பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகளையும் பார்க்கலாம்.
எப்படி பாதிக்கிறது? - 'பெகசாஸ்' மென்பொருள் மிகவும் நுட்பமானதாக அமைகிறது. இது பாதித்திருப்பது பயனாளிக்கு தெரியாமலே அவரது போனில் இந்த மென்பொருள் ஊடுருவக்கூடியது. ஸ்மார்ட்போன்களில் உள்ள ஏதேனும் ஒரு குறைபாடு வழியே இந்த மென்பொருள் தன்னை நிறுவிக்கொள்ளும். இது மென்பொருள் ஓட்டையாக இருக்கலாம் அல்லது, வாட்ஸ் அப் போன்ற மேசேஜிங் சேவைகளை பயன்படுத்திக்கொள்வதன் வாயிலாகவும் நிகழலாம். பொதுவாக 'மால்வேர்' எனும் நச்சு மென்பொருள் வடிவில் இந்த ஊடுருவல் நிகழ்வதாக கருதப்படுகிறது.
அரசு கண்காணிப்பு: 'பெகாசஸ்' மென்பொருள் அரசு அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்படுவதாக, இந்த மென்பொருள் கண்காணிப்பு நோக்கில் பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. சர்வாதிகார அரசுகள் இந்த மென்பொருள் மூலம் எதிர்ப்பாளர்கள் செயல்பாடுகளை கண்காணிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பெகாசஸ் மறுப்பு: சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் தனது மென்பொருள் உளவு நோக்கில் பயன்படுத்தப்படுவதை மறுத்து வருகிறது. தீவிரவாதிகளை கண்காணிக்க பாதுகாப்பு நோக்கில் இந்த மென்பொருள் அரசு அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறது. மேலும், கவனமாக தேர்வு செய்த அமைப்புகளுக்கு மட்டுமே மென்பொருள் விற்கப்படுவதாக கூறுகிறது. எனினும், வாடிக்கையாளர்கள் பட்டியலை இந்நிறுவனம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
பெகாசஸ் திட்டம்: கடந்த சில ஆண்டுகளாகவே 'பெகாசஸ்' மென்பொருள் உளவு தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் சேவையில் உள்ள ஓட்டை வழியாக 'பெகசாஸ்' மென்பொருள் பலரது போன்களில் நிறுவப்பட்டதாக செய்தி வெளியாகி சர்ச்சை வெடித்தது. இதில் இந்தியர்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், பெகாசஸ் மென்பொருளால் கண்காணிப்புக்கு இலக்காகி இருக்க கூடியவர்களின் பட்டியல் கசிந்துள்ளது. இந்தப் பட்டியலை பெற்ற பிரான்ஸைச் சேர்ந்த போர்பிடன் ஸ்டோரிஸ் (Forbidden Stories) எனும் லாப நோக்கில்லாத இதழியல் அமைப்பு மற்றும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு ஆகியவை இந்த விவரங்களை, சர்வதேச அளவிலான முன்னணி ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த ஊடகங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பாக 'பெகாசஸ் புராஜக்ட்' (பெகாசஸ் திட்டம்) எனும் பெயரில் விசாரணை மேற்கொண்டு தகவல்களை வெளியிட்டு வருகிறது.
தி வயர்: 'பெகாசஸ்' விசாரணையில் 'தி கார்டியன்', 'வாஷிண்டன் போஸ்ட்' உள்ளிட்ட ஊடகங்கள் உள்ளன. இதில் இந்தியாவின் 'தி வயர்' இணைய இதழும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டம் வெளியிட்டுள்ள செய்தியில், பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்களின் முதல்கட்ட பெயர்கள் உள்ளன. இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் இதில் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரும் கண்காணிப்புக்கு உள்ளானதாக பொருள் கொள்ள முடியாது என்றாலும், டிஜிட்டல் புலனாய்வில், ஒரு சிலரது போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருப்பதாக 'தி வயர்' தெரிவித்துள்ளது. இந்தியா தவிர மெக்சிகோ போன்ற நாடுகளில் பல பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்.எஸ்.ஓ மறுப்பு: இந்தப் பட்டியல் கசிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள என்.எஸ்.ஓ நிறுவனம், இந்தக் கசிவுப் பட்டியலுக்கும் 'பெகாசஸ்' மென்பொருளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியல் 'பெகாசஸ்' மென்பொருளுக்கான உளவு பட்டியல் இல்லை என்றும், நிறுவன வாடிக்கையாளர்கள் மற்ற பணிகளுக்காக பயன்படுத்திய பட்டியலாக இருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய சர்ச்சை: 'பெகாசஸ்' பாதிப்பு பட்டியலில் இந்திய பத்திரிகையாளர்கள் இருப்பது, அவர்கள் கண்காணிப்பு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தை எழுப்புவதால் சர்ச்சை உண்டாகியுள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்திய அமைப்புகளின் அடையாளம் தெரிவில்லை என்றாலும், அரசு அமைப்புகள் மட்டுமே இதை பயன்படுத்தலாம் என்பதால், அரசு தரப்பில் கண்காணிப்பு செய்யப்பட்டதா எனும் கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனம் இந்தியா தனது வாடிக்கையாளரா என்பதை தெரிவிக்கவில்லை.
அரசு மறுப்பு: இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்வதில் அக்கறை கொண்ட துடிப்பான ஜனநாயகமாக இந்தியா திகழ்கிறது என தெரிவித்துள்ளது.
- சைபர்சிம்மன்