காணாமல் போன கருண் நாயர் !

காணாமல் போன கருண் நாயர் !
காணாமல் போன கருண் நாயர் !
Published on

கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத முச்சதம் அது, அதுவும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கண்ட இரண்டாவது முச்சதம். முதல் முச்சதம் அடித்தவர், விரேந்திர சேவாக். இரண்டாவது முச்சதம் அடித்தவர் கருண் நாயர். சேவாக் தென்னாப்பிரிக்காவுடன் அடித்த முச்சதமும், கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 303 ரன்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது. அப்படிப்பட்ட ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடிய கருண் நாயர் அதன் பின்பு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்களை எடுத்த கருண் நாயர் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 26,0, 23 மற்றும் 5 என்ற ஸ்கோர்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆனது. அவருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்புகளை இந்தியக் கிரிக்கெட் தேர்வு வாரியம் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர்களின் கருணைப் பார்வை கருண் மீது விழவே இல்லை என்பதுதான் சோகம். இந்திய அணியின் நடப்புத் தேர்வுக்குழு கோலியின் மேற்பார்வையில் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கிறது என்ற பெயர் எடுத்தாலும் அதன் இன்னொரு பக்கம் சில திறமைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை, சில திறமைகள் வாய்ப்பளிக்கப்படுவதில்லை, இது போக அணிக்குள்ளேயே நன்றாக ஆடிக்கொண்டிருப்பவர்களை உட்கார வைப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

கருண் நாயர் ஒரு பார்வை:

மலையாள வம்சாவளியைச் சேர்ந்த கருண் நாயர் பிறந்தது ராஜஸ்தானில், ஆனால் வளர்ந்தது, கிரிக்கெட் ஆடியது எல்லாமே கர்நாடகாவில். பதினைந்து வயதிலேயே கர்நாடக அணிக்குள் நுழைந்த பெருமை இவருக்கு உண்டு. 2012ஆம் ஆண்டு விஜய் ஹஸாரே கோப்பையில் ஆடியது தான் கருண் நாயர்  முதன் முதலில் விளையாடிய முதல் தர போட்டி. அதன் பின்னர்  ரஞ்சி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். ரஞ்சி போட்டியில் முதல் சீசனிலேயே ஆறு போட்டிகளில் விளையாடி 494 ரன்களை குவித்தார். கருண் நாயரின் ஸ்டைலான கவர் மற்றும் ஆன் டிரைவ்களை பார்த்த ராகுல் டராவிட் அவரை 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ஏலத்தில் எடுக்க பரிந்துரை செய்தார்.  75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் கருண் நாயருக்கு  கிரிக்கெட் கேரியர் வேற லெவலுக்கு செல்ல தொடங்கியது.

2015 ஆம் ஆண்டு கர்நாட அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடினார். இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. தமிழகமும் கர்நாடகமும் மோதின. தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 134 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி 31/4 என தத்தளித்தது, பின்னர் 84/5 என்றானது. கருண் நாயரும், லோகேஷ் ராகுலும் இணைந்தார்கள். அந்த போட்டியில் அவர்கள் ஆடிய விதம் மிரட்டல் இன்னிங்ஸ். ராகுல் 188 ரன்களை குவித்தார். கருண் நாயரோ 872 நிமிடங்கள் களத்தில் நின்று 560 பந்துகளைச் சந்தித்து 46 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 328 ரன்கள் குவித்தார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டும் தான். அந்த மேட்சில் பெங்களூரு 762 ரன்களை குவித்தது. தமிழ்நாடு 411 ரன்னுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.பிறகு கோப்பையை வெல்லவே முடியாத சோகத்துடன் வெளியேறியது தமிழ்நாடு. 

ஸ்வீப் ஷாட் ஸ்பெஷலிஸ்ட்:

ஸ்வீப் ஷாட் ஆடுவது என்றால் கருண் நாயருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். சுழற் பந்து வீச்சாளர்களை அடித்து பிரித்து திறன் கொண்டவர் கருண். பேடில் ஸ்வீப் (சச்சின் ஆடுவது) என எல்லா வகை ஸ்வீப்களையும் அடிப்பது கருண் ஸ்பெஷல். கலாதரன் – பிரேமா நாயர் தம்பதிக்குக் குறைப்பிரசவத்தில் பிறந்த கருண் நாயர்தான், கிரிக்கெட்டில் அதிரடி காட்டியவர் என்றால் அவர் சொந்தக்காரர்களால் கூட நம்ப முடிவதில்லை. இப்போது கிங்க்ஸ் லெவன் பஞ்ஜாப் ஐ.பி.எல். அணியில் விளையாடுகிறார். இத்தனை திறமைகள் கொண்ட கருண் நாயரை கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரியம் கண்டுக்கொள்ளவில்லை.

அண்மையில் இது குறித்து மனம் திறந்து கருண் நாயர் கூறியது அவரின் முதிர்ச்சியை காட்டியது," 300 அடித்த பின், அமைந்த ஆட்டங்களில் நல்ல தொடக்கத்தின் மீது இன்னிங்சை கட்டமைக்கவில்லை. 20-25 எடுத்து ஆட்டமிழந்தேன். அதன் பிறகு என்னையே நான் கேட்டுக் கொண்டேன், எதற்காக இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம் என்று. நான் மகிழ்வுடன் ஆடவில்லை. என் மீதே அதிக அழுத்தம் செலுத்திக் கொண்டேன். அந்த முச்சதத்துக்குப் பிறகே வாழ்க்கை ஒரு முழு வட்டமாகத் திரும்பியது. உயர்வையும் கண்டேன், தாழ்வையும் கண்டேன். ஆனால் எதுவாக இருந்தாலும் உணர்ச்சி அளவில் கட்டுப்பாடு தேவை என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டேன். ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடக் கற்றுக் கொண்டேன் இதன் மூலம் மெல்ல என் மீதிருந்த அழுத்தத்தைக் குறைத்து கொண்டேன்” என்றார் கருண் நாயர்.

இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாழ்த்துகள் கருண் !
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com