சிறப்புக் களம்
தவறிப்போன பல் சிகிச்சையால் கதறும் நடிகை - ரூட் கேனல் சிகிச்சை தவறானால் என்னவாகும்?
தவறிப்போன பல் சிகிச்சையால் கதறும் நடிகை - ரூட் கேனல் சிகிச்சை தவறானால் என்னவாகும்?
பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்த நடிகை சுவாதி, சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த சுவாதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு, அளிக்கப்பட ஊசியை செலுத்திய பின், சுவாதியின் முகம் திடீரென வீங்கியுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இந்நிலையில், தவறான மருத்துவ சிகிச்சையால் மருத்துவமனை நிர்வாகம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாக சுவாதி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுவாதி கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு செய்யப்பட்ட ரூட் கேனல் சிகிச்சை பற்றியும், அது தவறிப்போனால் என்னவாகும் என்பது பற்றியும் பார்க்கலாம்.
பல்லின் மையப் பகுதியில் ’பசை’ என்று சொல்லப்படுகிற pulp உள்ளது. இதில் இணைந்துள்ள இரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இணைப்பு திசுக்களில் தொற்று ஏற்படும்போது அவை வீக்கமடைகின்றன. அதற்கு ரூட் கேனல் சிகிச்சை (root canal treatment) அல்லது எண்டோடான்டிக் சிகிச்சை (endodontic treatment) செய்யவேண்டியிருக்கும். இந்த ரூட் கேனல் சிகிச்சை எப்படி உதவுகிறது? சேதமடைந்த மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட பல்லை பெயர்த்தெடுப்பதற்கு பதிலாக அதை இந்த சிகிச்சைமூலம் சரிசெய்யலாம்.
ரூட் கேனல் சிகிச்சைக்குப்பிறகு என்னவாகும்?
American Association of Endodontists கூற்றுப்படி, ரூட் கேனல் சிகிச்சை எடுத்த முதல் சில நாட்களில் சிலருக்கு உணர்ச்சி அதிகரித்தல், வீக்கம் போன்ற இருக்கும். சிலருக்கு சாப்பிடுவதில் சிரமம் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் கடுகடுப்பு போன்ற பிரச்னை இருக்கும்.
ரூட் கேனல் சிகிச்சை எதனால் தோல்வியடையும்?
1. பாதிக்கப்பட்ட பற்களை முறையாக சுத்தம் செய்யாமல் சிகிச்சை அளித்தல்
2. மேலே பொருத்தப்பட்ட கேப் அல்லது அதன் உள்ளே அடைக்கப்பட்ட சீல் முறிதல்
3. முன்பு ரூட் கேனல் சிகிச்சை செய்யப்பட்ட பல் வேரில் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பற்களை பாதிப்பது. அதாவது சிகிச்சையின் போது பல் மற்றும் அதனுடைய மென்மையான திசுக்களில் பாக்டீரியா நுழைவதால் தொற்று ஏற்படலாம்.
ரூட் கேனல் சிகிச்சைக்கு பிறகு வீக்கம்?
ரூட் கேனல் சிகிச்சைக்குப் பிறகு பல் ஈறுகளில் எரிச்சல் அல்லது சிறுவலியைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது. பெரும்பாலும் சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்க மரத்துபோகும் ஊசி செலுத்துவர். அந்த ஊசியின் வலிமட்டும்தான் இருக்கவேண்டும். ஆனால் பல் ஈறு, தாடை அல்லது பக்கவாட்டில் வீக்கம் ஏற்பட்டால் அப்போது சிகிச்சையில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். அந்த வீக்கம் பற்களுக்கு கீழே எலும்புகளில் தொற்று ஏற்பட்டதையோ அல்லது சீழ் உருவானதையோ குறிப்பதாக இருக்கலாம். உடைந்த பற்களின் வேர்க்கால்கள், முறையாக சுத்தம் செய்யப்படாத ரூட் கேனல் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் எளிதில் நுழைந்து திசுக்களில் தொற்றை ஏற்படுத்தும் என்பதை மறக்கவேண்டாம்,.