படத்தின் நாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மையை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக பெயர் பெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் அவரது கதைத் தேர்வு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஓடிடிக்களை ஓபன் செய்தால் தேடாமலேயே முன்னால் வந்து நிற்கிறார் விஜய் சேதுபதி. சரி என தியேட்டருக்கு சென்றாலும் பேனர்களில் பார்த்து சிரிக்கிறார்; படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சியில் வெண்தாடி வேந்தனாக தோன்றி வியப்பூட்டுகிறார். 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு' என ரசிகர்கள் கேட்டால், 'கடைசி விவசாயி' திரைப்படம் ஆன் தி வே என்கிறார். செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதிக்குள், அதாவது பத்தே நாட்களுக்குள் விஜய் சேதுபதியின் 3 படங்கள் வெளியாகியிருக்கின்றன. அது பிரச்னையில்லை. ஆனால் குவான்டிட்டி அளவுக்கான குவாலிட்டி இல்லை என்பதுதான் பிரச்னை. 'வின்டேஜ் விஜய் சேதுபதி இப்படியில்லையே' என தோன்றுகிறது.
விஜய் சேதுபதியின் ப்ளஸே அவரது கதைத் தேர்வுதான். அதற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்தான், ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்தது. தொடக்கத்திலிருந்த அவரின் கதைத் தேர்வுதான் மக்களிடம் விஜய் சேதுபதி என்ற நடிகனை பரவலாக்கியது. அவரது படங்களை நோக்கி ஓடி வரவைக்கும் நம்பிக்கையை விதைத்தது. சிறிய கதாபாத்திரம், நெகட்டிவ் கதாபாத்திரம் என எந்தவித பாகுபாடுமின்றி கதைக்காகவும், கனமான கதாபாத்திரத்துக்காகவும் நடிப்பவர். அது அவரிடம் பலமும் கூட. அதுதான் சுந்தரபாண்டியன் படத்தில் அவருக்கு சிறந்த வில்லனுக்கான தமிழக அரசின் விருதை பெற்றுத் தந்தது.
'பீட்சா' 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' 'சூது கவ்வும்' படங்கள் விஜய் சேதுபதிக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றன. 2012 விஜய் சேதுபதிக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. மூன்றே படங்கள்தான். ஆனால், மூன்றும் விஜய் சேதுபதி கேரியரில் முக்கிய படங்களாக அமைந்தது. அதே சூட்டுடன், 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' வெளியாகி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அவரை உயர்த்தியது. 'இது விஜய் சேதுபதி காலம்' என ரசிகர்கள் புகழ்ந்தனர்.
'ரம்மி' யில் நடந்த தவற்றை 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் திருத்திக்கொண்ட விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஸ்பெஷ் அப்பியரன்ஸில் சில படங்கள் நடித்தார். இடைவெளிக்கு பிறகு, 'புறம்போக்கு எனும் பொது உடைமை' 'ஆரஞ்ச் மிட்டாய்' என நடிக்க ஜாலியான விஜய் சேதுபதியை பார்க்க ஆசைப்பட்டனர் அவரது ரசிகர்கள். இப்டியே போனா செட் ஆகாது என ரூட்டை மாற்றி பக்கா கமர்ஷியல் ஒன்றில் ஜாலியான கேரக்டரைத் தேடினார். அப்படியாக அவருக்கு வந்து சேர்ந்தது 'நானும் ரவுடிதான்' படம். தொடர்ந்து வந்த, 'சேதுபதி' 'காதலும் கடந்துபோகும்' 'இறைவி' 'தர்மதுரை' படங்கள் ரசிகர்கள் மனதில் நங்கூரமிட்டன. 'ஆண்டவன் கட்டளை' படமும் ஓரளவுக்கு ஏமாற்றவே இல்லை என்று சொல்லலாம்.
'கவண்' படமும் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில், 'விக்ரம் வேதா' படத்தில் விளாசினார் விஜய் சேதுபதி. 'கம்பேக் கொடுத்துட்டாருயா' என கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். உண்மையில் 'விக்ரம் வேதா' விஜய் சேதுபதியின் மாஸ்டர் பீஸ்!
இந்தப் படத்துக்கு பிறகு நேரடியாக '96' படத்துக்கு வருவது நல்லது என தோன்றுகிறது. காரணம், 'கருப்பன்' ஓரளவுக்கு பேசப்பட்டாலும் 'நல்ல நாள் பாத்து சொல்றேன்' 'ஜீங்கா' படங்கள் விஜய் சேதுபதி கேரியரில் பெரிய ஏமாற்றத்தை அளித்தன.
அதேபோல 'சீதக்காதி'யில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாக அவருக்கு புகழ்மாலை சூட்டியது. 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்திலும் அவரது கதாபாத்திரம் ஓரளவுக்கு பேசப்பட்டது. அது கதையின் மையமான கதாபாத்திரமாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 'பேட்ட' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றுக் கொள்ளும்படி அமையவில்லை. 'மாஸ்டர்' படம் போல் வெயிட்டாக கொடுத்திருந்தால் இன்னுமும் நன்றாக அமைந்திருக்கும்.
'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதியும் பாராட்டப்பட்டார். ஏன் பலருக்கு விஜய்யை விட விஜய் சேதுபதியின் நடிப்பு பிடித்திருந்தது. கதையும் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருந்தது. பவானி என்ற கேரக்டராகவே அவர் பார்க்கப்பட்டார். நேரடி தெலுங்கு படமான 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதி நேர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளினார். தெலுங்கில் தனக்கான ஒரு மார்க்கெட்டையும் உருவாக்கினார். க/பெ ரணசிங்கம் படத்தில் முழுமையாக வரவில்லை என்றாலும் மனதில் நிற்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால், '96' படத்துக்கு பிறகு முழுமையான விஜய் சேதுபதி படத்தைக் காண 2 ஆண்டுகள் தவம் கிடந்த ரசிகர்களுக்கு, 'லாபம்' 'துக்ளக் தர்பார்' 'அனபெல் சேதுபதி' என ஏமாற்றமே கொடுத்தார். அவசரகதியிலோ அல்லது நெருக்கடியினாலோ, கட்டாயத்தின் பேரிலோ இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். பழைய கதைத் தேர்வு விஜய்சேதுபதியிடம் இல்லை என்ற ரசிகர்களின் ஆதங்கம் அனிச்சையாக வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.
அடுத்தடுத்து வரிசைக்கட்டி நிற்கும் அவரின் படங்கள் சற்று பயத்தை கொடுத்தாலும், நம்பிக்கையையும் சேர்த்தே விதைக்கிறது. தற்போது செய்யும் தவறுகளை திருத்தி, கதைத் தேர்வில் கவனம் செலுத்தி 'வின்டேஜ் விஜய் சேதுபதி'யாக திரும்பி வரவேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.