2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? - அலசல்

2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? - அலசல்
2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? - அலசல்
Published on

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அசுரபலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் இந்த கருத்தினை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்திருக்கிறார். இத்தகைய சூழலில் பாஜகவை எதிர்கொள்ள 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன? எதிர்க்கட்சிகள் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

5 மாநில தேர்தல் – எப்படி எதிர்கொண்டது எதிர்க்கட்சிகள்?

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாபில் மட்டும்தான் பாஜக ஓரளவு பலம் குறைந்த நிலையில் இருந்தது, எனவே பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மற்ற மாநிலங்களில் பாஜக மிக வலுவான நிலையில் இருந்தது.  இந்த 4 மாநிலங்களில் பாஜக ஆதரவு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அவர்களுக்கு சென்றது. ஆனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் கன்னாபின்னாவென சிதறியது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஓவைசி கட்சி ஆகியவை தனித்தனியாக பாஜகவை எதிர்த்தன.

கோவாவில் காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக பாஜகவை எதிர்த்தன. மணிப்பூரில் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம் என நான்கு கட்சிகள் தனித்தனியாக பாஜகவை எதிர்த்தன. உத்தராகண்டில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தனித்தனியாக பாஜகவை எதிர்கொண்டன.

கிட்டத்திட்ட மினி நாடாளுமன்ற தேர்தலாக கருதப்பட்ட இந்த தேர்தல் தோல்வி என்பது எதிர்க்கட்சிகளை சுயபரிசோதனை செய்ய வைத்துள்ளது. 2024 தேர்தலில் காங்கிரஸுடன் இணைய தயார் என தயார் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒரே புள்ளியில் ஒற்றிணைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸும் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தவுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் முன்னே உள்ள வாய்ப்புகள் என்ன?   

காங்கிரஸ் முன்னே உள்ள வாய்ப்புகள்:

நடந்து முடிந்த கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எதிர்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதுதான் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. அதுபோலவே உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியின் எழுச்சியை காங்கிரஸ், பகுஜன் சமாஜ்  கட்சிகள் தனித்து போட்டியிட்டது மட்டுப்படுத்தியது என்றும் சொல்கிறார்கள். எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னே அனைத்து மாநிலக்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே காங்கிரஸால் பாஜகவை எதிர்கொள்ள முடியும்.

மம்தா பானர்ஜி, சரத் பவார், சந்திர சேகர ராவ், மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்கள் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்க முயன்றாலும், அவர்கள் காங்கிரஸின் குடையின் கீழ் வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனையெல்லாம் சரிசெய்யவேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது, மாநிலக்கட்சிகளுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களை அரவணைக்கும் பொறுப்பும் காங்கிரஸுக்கு உள்ளது. ஆனால், இதற்கெல்லாம் முன்பாக காங்கிரஸ் தங்களுக்குள் உள்ள உட்கட்சி பூசலை சரிசெய்ய வேண்டும்.

மம்தாவால் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முடியுமா?

பாஜகவுக்கு எதிரான அணியை ஒருங்கிணைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெறும் முயற்சி எடுத்து வருகிறார். அதே நேரத்தில் அவர் காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார். மம்தா ஒருவேளை மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து களமிறங்கினால் அது மூன்றாவது அணியாகவே இருக்கும்.  ஏனென்றால் மம்தாவின் தலைமையின் கீழ் காங்கிரஸ் வர கிட்டத்திட்ட வாய்ப்பில்லாத சூழல்தான் தற்போதைக்கு நிலவுகிறது.

எப்படி பார்த்தாலும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, உத்தராகண்ட், சத்தீஸ்கர், வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது.  எனவே சில மாநிலங்களில் மட்டும் உள்ள திரிணாமுலின் தலைமையை ஏற்க காங்கிரஸ் ஒத்துக்கொள்வது கடினம். ஆனாலும், காங்கிரஸை உள்ளடக்காத அணியை மம்தா உருவாக்கினால் அது போட்டிக்கு உதவுமே தவிர, வெற்றிக்கு வித்திடுமா என்பது சந்தேகமே.

மாநிலத்தலைவர்களின் மூன்றாவது அணி சாத்தியமா?

பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்க தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மும்மரமாக உள்ளனர். மேலும் அரவிந்த் கேஜ்ரிவால், பிஜூ பட்நாயக், ஹேமந்த் சோரன், சரத் பவார், ஓவைசி, சந்திரபாபு நாயுடு, தேவ கவுடா உள்ளிட்டோருக்கும் இந்த எண்ணவொட்டம் உள்ளது. ஆனால் இவர்கள் ஒருங்கிணைந்தாலும் அதற்கு யார் தலைமை தாங்குவது, யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது அல்லது பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஒரு அணி உருவானால் அது மக்களின் நம்பிக்கையை பெற முடியுமா என பல கேள்விகள் உள்ளது.

ஒருவேளை இவர்கள் ஒருங்கிணைந்து மம்தா தலைமையிலோ அல்லது  தனியாகவோ மூன்றாவது அணியை உருவாக்கினாலும் அது வெற்றியை நோக்கி செல்லுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.

அனைவரும் ஒற்றைப்புள்ளியில் ஒருங்கிணைவது சாத்தியமா?

கிட்டத்திட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. ஆனால், காங்கிரஸ் படிப்படியாக பல மாநிலங்களில் தனது பலத்தை இழந்துவிட்டது. என்ற போதிலும் பாஜகவுக்கு அடுத்த இடத்தில் பலம் பொருந்திய நிலையில் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. மற்றபடி திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தேசிய கட்சியாக இருந்தாலும் இந்த கட்சிகளுக்கு ஒரு சில மாநிலங்களில்தான் செல்வாக்கு உள்ளது. இந்தியாவில் கிட்டத்திட்ட 10 மாநிலங்களில் மாநிலக்கட்சிகள்தான் எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியாகவோ உள்ளது. எனவே பாஜகவை வென்றே ஆகவேண்டும் என கங்கணம் கட்டி இறங்க வேண்டுமானால் அனைத்து கட்சிகளும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும்.

ஆனால், இதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஏனென்றால் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி சேர்வதிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்டுகள் இணைவதிலும், இவர்களுடன் மாயாவதி, ஓவைசி , பிஜூ பட்நாயக், தேவகவுடா போன்றோர் இணைவதிலும் பல சிக்கல்கள் உள்ளது. இத்தனை சிக்கல்களையும் மீறி இவர்கள் ஒருங்கிணைவார்களேயாயின் 2024 தேர்தலில் பாஜகவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com