செய்தியாளர் - ஆனந்தன்
எல்லா அரசியல் கட்சியிலும் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது. அந்த பொறுப்பை வகித்த பலருக்கு சிறப்பும் உண்டு. அதிலும் கூடுதல் சிறப்பு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு உண்டு. அதிமுக பொதுச் செயலாளராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்து அந்த பொறுப்புக்கு மலர் கிரீடம் சூட்டியவர் ஜெயலலிதா என்றால் அது மிகையில்லை. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஒவ்வொரு கட்சியிலும் இருந்தாலும் அந்த பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று ஜெயலலிதா நிரூபித்துக் காட்டினார்.
பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஆதரித்து அரவணைத்து, கட்சியை சிறப்பாக வழி நடத்தியதோடு ஆட்சியை பிடித்து சிறப்பான நிர்வாகத் திறமையுடன் கம்பீரமாக ஆட்சி செய்தார் என்பதை நாம் அறிவோம்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேமலதாவுக்கு முன்பாக பல்வேறு சவால்கள் உள்ளன. இந்நிலையில், அந்த பொறுப்பை ஏற்றுள்ள அவர் மேடையில் பேசும்போது, ”இது மலர் கிரீடம் இல்லை. முள் கிரீடம் இந்த மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் வழங்கியுள்ளீர்கள். திறன்பட செயல்படுவேன். எனக்கு முழு ஒத்துழைப்பை நீங்கள் தர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரேமலதா விஜயகாந்த்திற்கு 20 வருட அரசியல் அனுபவம் உள்ளது. மிகப்பெரிய பேச்சாற்றல் திறன் கொண்ட நபர், விஜயகாந்த் ரசிகர் மன்றம் தொடங்கிய காலம் முதல் அதை இயக்கமாக மாற்றி அந்த கட்சியினுடைய வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவர் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக-வை போல் தொண்டர்கள் பலம் இல்லாமல் இருந்தாலும் கிளைக் கழகம் வரை நிர்வாகிகள் கொண்ட இயக்கமாக தேமுதிக உள்ளது என்றால் மாற்றுக் கருத்தில்லை. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு புத்துணர்வு அளித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவது என்பது சுலபமான காரியமல்ல.
கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டுமரம், விசைப்படகு, சிறிய கப்பல், மிகப்பெரிய கப்பல் என முடிந்தவரை தங்களை தயார்படுத்திக் கொண்டு செல்வர். அப்படி செல்லும் மீனவர்கள விரிக்கும் வலையில் சிக்கும் மீன்களை போல் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களை சந்தித்து மக்களுடைய உணர்வை புரிந்து கொண்டு, மக்கள் பக்கம் நின்று அவர்களின் நன்மதிப்பை பெற்றால் மட்டுமே முள் கிரீடத்தை மலர் கிரீடமாக மாற்ற முடியும். இந்த மிகப் பெரிய சவாலை பிரேமலதா எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.