கைக்கொடுக்குமா ராகுல் காந்தியின் பாத யாத்திரை? காங்கிரஸ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

கைக்கொடுக்குமா ராகுல் காந்தியின் பாத யாத்திரை? காங்கிரஸ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?
கைக்கொடுக்குமா ராகுல் காந்தியின் பாத யாத்திரை? காங்கிரஸ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?
Published on

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கட்சியை வலுப்படுத்தவும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ‘’ பாரத் ஜோடோ யாத்ரா’’(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரையானது 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக என 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

நேற்று கன்னியாகுமரியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார். பெறும் அரசியல் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் 300 பேர் கலந்துகொள்கிறார்கள்.

ராகுல்காந்தியின் யாத்திரை போலவே பல யாத்திரைகள் வரலாற்றில் நடந்துள்ளது. அவை யாவும் பல முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த யாத்திரை என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம். இந்திய அரசியலில் யாத்திரையை பிரிக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் யாத்திரைகள் கைக்கொடுத்திருக்கிறது. கைவிட்டும் இருக்கிறது. காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமும் ஓர் யாத்திரை தான்.. அதேபோல் காங்கிரஸின் எழுச்சிக்கு யாத்திரை கைக்கொடுக்குமா? 

 அரசியலும் யாத்திரையும்..

Ø  1930- இந்தியாவில் யாத்திரை மூலம் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என விதை போட்டது காந்திஜிதான். சுதந்திரப் போராட்டத்தில்  முக்கியமானது நிகழ்வு, தண்டி யாத்திரை (அ) உப்பு சத்தியாகிரகம் நிகழ்வு. ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைச் சந்தித்து காந்தி உரையாடினார். அவர் செல்லும் வழியெங்கும் மக்கள் பலர் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்துகொண்டனர்.

Ø  1970 – பீகாரில் நடைப்பயணம் செய்தார் ஜெயபிரகாச  நாராயணன். இந்த பயணம் மாணவர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மாணவ போராட்டமாக மாறிய இந்த யாத்திரையின் விளைவாக 1977-ல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத புதிய அரசாங்கம் உருவானது. இன்றைய காங்கிரஸின் வீழ்ச்சிக்கு இந்த யாத்திரை முக்கிய காரணமாக அமைந்தது.

Ø  1983- இந்திராகாந்திக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், கன்னியாகுமரி முதல் புதுதில்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதி  ராஜ்காட் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். ஜனவரி 6 முதல் ஜூன் 25 வரை 4260 கீ.மீ. நடந்தார். மக்களிடம் உள்ள தொடர்பைப் புதுப்பிக்கவும் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. பெரிய அளவில் இந்த யாத்திரை கைகொடுக்கவில்லை என்றாலும் கூட அடுத்து வந்த பீகார் தேர்தலுக்கு உதவியது.

 Ø  1989 – அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கோரி ரத யாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. அப்போது அது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பிஜேபியின் வளர்ச்சிக்கு இந்த யாத்திரை முக்கிய பங்காற்றியது.

Ø  1991- மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி ‘ ஏக்தா யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரைக்குப் பொறுப்பாளராக இருந்தவர் இன்றைய  பிரதமர் நரேந்திர மோடி.

ராகுல்காந்தியின் முன் இருக்கும் சாவல்கள்!

இப்படி வரலாற்றில் பல அரசியல் திருப்புமுனைகளை யாத்திரைகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த யாத்திரை புத்துயிர் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல்காந்தி முனைப்புக்காட்டி வருகிறார்.

தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரண்டும் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 1984-க்கு பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக மூன்றாவது முறையாக வென்றால் காங்கிரஸுக்கு இனி எதிர்காலமே இல்லை என்ற நிலை உருவாகிவிடும். மேலும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் வளர்ந்து விட்ட சூழலில், தனது இடத்தை ஆம் ஆத்மி பிடித்துவிடுமோ என்ற பதட்டமும் காங்கிரஸை சூழ்ந்திருக்கிறது.

மறுபக்கம் கட்சிக்குத் தலைவர் இன்னும் தேர்வாகவில்லை, தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயக்கம் காட்டுவது சரியா? உட்கட்சி பூசலை சரி செய்ய முனைப்புக் காட்டவில்லை, மூத்த தலைவர்களின் அதிருப்தி எனக் கட்சிக்கு இருக்கும் பல சிக்கலை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த யாத்திரை மேற்கொள்வது காங்கிரஸுக்கு நல்லதில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமில்லை, இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என ஏழு மாநில தேர்தல்களுக்கும் காங்கிரஸ் முன் இருக்கிறது. இவை அனைத்தும் காங்கிரஸின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் களம். இந்த கடுமையான சவாலைக் காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பதைக் காங்கிரஸ் தான் செய்துகாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எழுத்து - கே. அபிநயா 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com