ஓலா எலெக்ட்ரிக் வாகன ஆலைக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? - பவிஷ் அகர்வால் விளக்கம்

ஓலா எலெக்ட்ரிக் வாகன ஆலைக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? - பவிஷ் அகர்வால் விளக்கம்
ஓலா எலெக்ட்ரிக் வாகன ஆலைக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? - பவிஷ் அகர்வால் விளக்கம்
Published on

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஞாயிற்றுக்கிழமை அறிமுகமான நிலையில், எலெக்ட்ரிக் வாகன சந்தை, தற்போதைய சூழல், கிருஷ்ணகிரியில் ஆலை அமைத்தன் பின்னணி குறித்து விவரித்திருக்கிறார் ஓலாவின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால்.

இதுகுறித்து, 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "எங்களுக்கு மிகப்பெரிய இடம் தேவைப்பட்டது. ஆலை அமைந்திருக்கும் இடம், எலெக்ட்ரிக் வாகன மையமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டோம். எங்களுடைய ஆலை மட்டுமல்லாமல் உதிரிபாகனங்கள் தயாரிப்பதற்கான ஆலையும் அமையும். அதனால், கிருஷ்ணகிரியை தேர்ந்தெடுத்தோம். தவிர, எங்களுடைய தலைமை அலுவலகமான பெங்களூருவில் இருந்து குறைவான நேரத்தில் ஆலையை அடைந்துவிடலாம்.

மேலும், தமிழ்நாடு தொழில்மயமான மாநிலம். அதைவிட ஆலைக்கு தேவையான தகுதி வாய்ந்த பணியாளர்கள் எளிதில் கிடைப்பார்கள். பல விஷயங்களும் ஒன்றாக அமைந்ததால் கிருஷ்ணகிரியை தேர்ந்தெடுத்தோம். பல மாநிலங்களை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்திருந்தாலும் தமிழ்நாட்டில் எங்களுக்கு தேவையானவை கிடைத்தது. ஆனால், வரும் காலத்தில் இதர மாநிலங்களையும் நாங்கள் பரிசீலனை செய்வோம்" என தெரிவித்திருக்கிறார்.

இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கேட்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு அதற்கு எதிராக ட்விட் செய்திருந்தார் பவிஷ் அகர்வால். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது, "சர்வதேச நிறுவனங்கள் இறக்குமதி மூலம் அதிகபட்சம் ஆண்டுக்கு 100 வாகனங்களை விற்க முடியும். இதனால், இந்திய எலெக்ட்ரிக் வாகன துறைக்கு எந்த பயனும் இல்லை.

போட்டி காரணமாக டெஸ்லாவை நாங்கள் எதிர்ப்பதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அனைத்து விதமான போட்டியையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இறக்குமதி வரியை குறைப்பது யாருக்கும் பயனில்லாத செயல் என்றுதான் ட்வீட் செய்திருந்தேன். இந்தியாவில் வந்து ஆலை தொடங்கி செயல்படுவதை விமர்சிக்கவில்லை" என்று பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

மேலும், "டெக்னாலஜியை உருவாக்குவதற்கு நாங்கள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இதுவரை ஐசிஇ இன்ஜின் மூலமாக நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன. அந்த லாபத்தை எலெக்ட்ரிக் வாகனத்துறையில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு நாட்டுக்கும், எலெக்ட்ரிக் வாகனதுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

செமி-கண்டக்டர் குறித்து பேசும்போது, "நாங்கள் செமி-கண்டக்டர் நிறுவனம் கிடையாது என்பதால், அதனை தயாரிக்க மாட்டோம். ஆனால், பார்ட்னர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம். 2025-ம் ஆண்டுக்கு பிறகு இருசக்கர பெட்ரோல் வாகனங்கள் இல்லாத சூழல் வரவேண்டும். அதேபோல அடுத்த இரு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கான திட்டமும் இருக்கிறது" என பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com