என் பதிவு ஏழு லட்சம் லைக்ஸ் போனது: வெதர்மேன் பிரதீப் சிறப்பு பேட்டி

என் பதிவு ஏழு லட்சம் லைக்ஸ் போனது: வெதர்மேன் பிரதீப் சிறப்பு பேட்டி
என் பதிவு ஏழு லட்சம் லைக்ஸ் போனது: வெதர்மேன் பிரதீப் சிறப்பு பேட்டி
Published on


மழைக்கு இவரை தெரியாது. ஆனால் மழையால் இவரை தமிழகமே தெரிந்து வைத்திருகிறது. ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான். இவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம். படித்தது முழுக்க சென்னை. அண்ணாநகரில்தான் இவர் வசிக்கிறார். ஆன் லைனைதான் இவர் அன்றாடம் புசிக்கிறார். இந்த மழைநேசரை புதிய தலைமுறை இணைய தளத்திற்காக சந்தித்தோம்.

“வானிலையை யார் வேண்டுமானாலும் கவனிக்கலாம். அதற்கு உரிய பயிற்சி உள்ளவங்கதான் கவனித்து சொல்ல வேண்டும் என்று ஒரு நிர்பந்தமும் கிடையாது. உலகம் முழுக்க அதற்கான நிறைய வெப் சைட்ஸ் வந்தாச்சு. உங்களுக்கு விரும்பம்னா நீங்க தகவலை தேடி அடுத்த செகண்ட் கொடுக்கலாம்” ஆரம்பிக்கும் போதே மழையைப் போலவே மனசை நனைக்கிறார் பிரதீப்.

எப்ப ஆரம்பிச்சது இந்த வெதர்மேன் ஐடியா? 


“சரியா சொன்னா 2015. நெய்வேலியில கடுமையான மழை அடிச்சு நகர்த்திக் கொண்டிருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாள். இப்பவும் மனசுல ஈரமா இருக்கு. 500 மில்லி மீட்டர் மழை அடிச்சு விரட்டிக் கொண்டிருந்தது. சென்னையில 200 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த செய்தி வந்த அளவுக்கு நெய்வேலி பத்தின செய்தி பெரிய அளவுக்கு வெளியில வரல. தொடர்ந்து கவனிச்சுக்கிடிருந்த எனக்கு அது பெரிய ஆச்சர்யமா இருந்தது. அரை நாளுக்குள் 500 மி. மீட்டர். ஒரு மணி நேரத்திற்கு 100 மி.மீட்டர் அளவில் மழை கொட்டியது. உடனே ஒரு பதிவை போட்டேன். மழையில் ஒவ்வொரு நொடியையும் பற்றியும் செய்தி போட்டேன். சென்னையில் ஹெலிகாப்டர்ல வச்சு உதவி எல்லாம் செஞ்சாங்க. நான் தான் முதன்முறையா சொன்னேன். கரண்ட் கட் ஆக போகிறது. 2 நாள் நல்ல மழை இருக்கும். எல்லோரும் கவனமா இருங்கனு சொன்னேன். அந்த செய்தி 2 மணிநேரம் கழிச்சு எனக்கே திரும்ப வந்தது. அந்தப் பதிவுதான் முதன்முறையாக 5 ஆயிரத்தை தாண்டியது. அங்க ஆரம்பிச்சது என் வேலையின் வேகம். ஆனா அதுக்கு முன்ன 2014-ல இருந்தே நான் தொடர்ந்து பதிவுகளை போட்டுக் கொண்டுதானிருந்தேன். ஆனா பெருசா ரெஸ்பான்ஸ் ஒண்ணும் இல்ல. முன்னாடி எல்லாம் என் பதிவுக்கு ஒரு லைக்..ஒரு ஷேர் கிடைச்சாலே அது அபூர்வம். நான் ஒரு விஷயத்தில் தெளிவா இருந்தேன். நாம லைக்ஸுக்காக போஸ்ட் போடல. யார் ஷேர் பண்றாங்கனு கூட நான் கவனிச்சதில்லை. அது என்னவாது ஆகட்டும் நாம திருப்தியா வேலை செய்வோம்னு இருந்தேன். அந்த வேலைக்கான பலனா இன்றைக்கு நான் போடுற ஒவ்வொரு பதிவும் ஏழு லட்சம், எட்டு லட்சம்னு போகிறது.அத நினைக்கும் போது நாம தானா இது? நம்ம நியூஸை இவ்வளவு பேர் பார்க்குறாங்களா என எனக்கே ஒரு டவுட் வருது. அந்தளவுக்கு மக்கள் என்னை ஆதரிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. அது மகிழ்ச்சிதான்” 

உங்க கணிப்புகளில் எப்பவாது தவறுகள் நடந்திருக்கா? 


“நிச்சயம் நடக்கும் சார். நாம சொல்றது வானிலை. நிமிஷத்துக்கு நிமிஷம் அதுல மாற்றம் இருக்கும். அப்படி மாற்றம் இருந்தாதான் அது வானிலை. முன் கூடியே கணிக்கக்கூடிய விஷயங்களில் மாற்றங்கள் கட்டாயம் இருக்கும். வடமேற்கு பருவமழையே இந்தளவுக்கு இருக்காதுனுதான் நாங்க கணித்திருந்தோம். திடீர்னுதான் இப்ப மாற்றம் வந்து இந்தளவுக்கு மழை பெய்தது. ஆக, நாம சொல்லிட்டோமே அத மாத்திக்க முடியாதுனு நான் அடம்பிச்சு நின்றது இல்ல. நான் சொன்னதுதான் சரினு வாதம் பண்ணதில்ல.உடனே மாறுதல்கள் இருந்தா அத அப்டேட்ஸ் பண்ணிடுவேன். அதானல பெரிய தவறுகள் வந்ததில்லை. மக்கள் நம்ம கிட்ட மழையை பத்தி பெரிய வியாக்கியானத்தை எல்லாம் எதிர்பார்க்குறதில்ல. எப்ப மழை வரும்? எவ்வளவு மழை வரும்? எப்ப நிற்கும்? இத சொன்னாலே அவங்க தேவை முழுசா பூர்த்தியாகிடும். நான் அத மட்டும்தான் சொல்றேன். அதுவும் புரிகிற மாதிரி தெளிவா சொல்றேன். மிக எளிமையா சொல்றேன்.”

எப்ப இருந்து மழையை கவனிக்குறீங்க?

“சின்ன வயசுல இருந்தே அந்தப் பழக்கம் இருந்தது. என் கிட்ட மழையை பத்தின  20 வருஷத்து டேட்டாஸ் இருக்கு. எல்லாவற்றையும் கையில வச்சு இருக்கேன். 94ல ஒரு புயல் வந்தது. அந்தப் புயலை பத்தின செய்திகள் யாருக்காவது ஞாபகம் இருக்குமானு தெரியல. ஏன்னா அந்தப் புயல் இராத்தியோட இராத்திரியா கரையை கடந்துவிட்டது. அந்த மழை கடக்கும் போது இரவு முழுவதும் ஊலை சத்தம் போல கேட்டது. அதை கேட்டுக் கொண்டே தூங்காம இருந்தேன். இருநூறு வருடங்களில் பதிவான மழைகளில் அந்த மழைதான் பெரிய ரெக்கார்ட். 700 மி.மீட்டர் பதிவாகி இருந்து. ஆனா அதை 2015 மழை மிஞ்சி விட்டது. 1996-ல் பெய்த மழை மூன்று நாள் இடைவெளியே இல்லாம அடிச்சு நகர்த்தியது. அது காற்று சார்ந்த புயலில்லை. மழை சார்ந்து உருவான புயல். அந்தக் காலத்தில் பெருசா இண்டர்நெட் வசதிகள் இல்லாத காலம்.”

நீங்க என்ன செய்றீங்க? 


“ஏறக்குறைய பாதி அரசு ஊழியர். மனைவி வீட்டில் இருந்த படியே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வேலை செய்யுறாங்க. ஒரு பெண் குழந்தை இருக்கு. அப்பா ஓய்வு பெற்ற நகராட்சி கமிஷனர். அம்மா அரசு தலைமை ஆசிரியை. நான் ஒரு ஃபேஷனா தான் வெதர் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பிச்சேன். அதனாலதான் காலையில என் பதிவுகள் இருக்கும். திரும்ப மாலையிலதான் அதிகம் இருக்கும். நடுவில் ஆஃபீஸ்ல இருக்கும் போது போட முடியாது. சில அவசர தேவைக்கு எப்பவாவது போடுவேன். ”

நீங்க மழையில மாட்டி இருக்கீங்களா?


“நிறைய மாட்டி இருக்கேன். இப்ப மெரினாவில் பதிவான 30 சென்டி மீட்டர் மழையில கூட மாட்டேன். அடையாறில் இருந்து வீட்டுக்குப் போக பத்தே கால் ஆகிவிட்டது. 2015 டிசம்பர் 1 அன்று பெய்த கனமழையில மாட்டினேன். டிசம்பரில் பெய்த மழையில் 6 மணிநேரம் மேல சென்னையில் ட்ராஃபிக் ஆனது. இரவு ஒரு மணிக்குதான் நான் வீட்டுகே போனேன். அடையாறில் இருந்து அண்ணா நகர் என் வீடுக்குப்  போக அவ்வளவு மணிநேரம் ஆனது. அப்படி மாட்டிக் கொண்ட நேரங்களில் கூட எங்காவது ஓரமாக ஒதுங்கி பதிவுகளை போட்டுக் கொண்டே இருப்பேன்”

அரசாங்கமே வானிலை சார்ந்த விஷயங்களை தெரிவிக்கிறது..ஒரு தனி மனிதரா உங்க தேவை என்ன? 

“அரசாங்க உடனடியாக ஒரு விஷயத்தை சொல்ல முடியாது. அவங்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும். உயர் அதிகாரிகள் ஒப்புதல் இருந்தாதால் சொல்ல முடியும். அதையும் தாண்டிய விஷயங்கள் இருக்கும். ஆனா எனக்கு அப்படி இல்லை.இன்றைக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற பல ஊடகங்கள் வந்தாச்சு. ஆனாலும் அவங்க இன்னும் அந்த பகுதிகளில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. ஆகவே நான் அந்தப் பகுதிகள்ல அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஒரு தனி மனிதராக இருப்பதால அரசாங்கம் கொடுக்குற தகவலை தாண்டி என்னால் எதையும் தர முடியாதுனு சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரே தொழில் நுட்பம்தான். யார் வேண்டுமானாலும் வானிலையை கவனிக்கலாம்.”

எதிர்கால திட்டம்? 
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல. எனக்கு இப்ப கிடைத்திருக்கும் வரவேற்பே பெரிசுதான்.”

இந்த வருடம் மழையை போலவே வெயிலும் கடுமையாக இருக்குமாமே?


“என்னிடம் மழை  பத்தின 20 வருஷ ரெக்கார்ட்ஸ் இருப்பதை போலவே 20 வருஷத்திற்கான வெயிலை பத்தின புள்ளி விபரங்களும் இருக்கு.இப்ப மழை அதிகமாக இருப்பதால் உடனே வெயில் அதிகமாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை வானிலை சார்ந்து மெய்ப்பிக்கப்படவில்லை. அதற்கும் இதற்கும் பருவகால ரீதியாகவே சம்பந்தம் கிடையாது.”


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com