தமிழகத்தையே பெரும் பரபரப்பூட்டிய ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலைவழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறை செய்தபோது, ஆயுள் தண்டனையாக மாற்றி நீதியை நிலைநாட்டியது நீதிபதிகள் ‘தீபக் மிஸ்ரா- பானுமதி’ அமர்வுதான். அத்தீர்ப்பால்தான், உச்சநீதிமன்றமும் ராஜகோபாலுக்கு தண்டனையை உறுதிசெய்தது. சாந்தக்குமார் கொலைவழக்கில் நீதியை நிலைநாட்டிய நீதிபதி பானுமதி, இன்றுடன் ஓய்வுபெறுகிறார். அதுவும், தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெறுகிறார்.
நீண்ட வருடங்கள் போராடி இத்தீர்ப்பை பெற்ற ஜீவஜோதியிடம் நீதிபதி பானுமதி குறித்தும் பேசினோம்,
“பானுமதி அம்மா இப்படியொரு தீர்ப்பை மட்டும் சொல்லலைன்னா… எனக்கு வாழ்நாள் முழுக்க வலியும் களங்கமும் ஏற்பட்டிருக்கும். அவர், நீதியை நிலைநாட்டவேதான் இன்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கையோடு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வழக்கை தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவருமே உற்றுநோக்கினார்கள். சரவணபவன் ராஜகோபால் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல, அதிகார பலம்கொண்டவர். எதற்கும் விலைபோகாமல் அஞ்சாமல் பானுமதி அம்மா நேர்மையோடு தீர்ப்பு வழங்கினார்.
பிரேமானந்தாவுக்கு ஆயுள்தண்டனை விதித்ததன் மூலம் அவரது நேர்மை என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். 2002 ஆம் ஆண்டு பூந்தமல்லி செஷன்ஸ் கோர்ட் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையையும், நஷ்ட ஈடாக எனக்கு 50 லட்ச ரூபாய் கொடுக்கவும் உத்தரவிட்டது. காவல்துறையினர்கூட அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இப்போதுவரை அந்தப் பணம் குறித்து யோசிக்கவே இல்லை. சாந்தக்குமாரின் படுகொலைக்கான நீதியை மட்டுமே எதிர்பார்த்தேன். அந்த நீதியைக் கொடுத்து என்னை தன்னம்பிக்கையோடு வாழவைத்தது பானுமதி அம்மாதான். நேர்மையான நீதிபதி பானுமதி அம்மாவை ஓய்வுபெறுவதோடு விட்டுவிடக்கூடாது. பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க தனி ஆணையம் அமைத்து, அதற்கு அவரைத் தலைவராக நியமிக்கவேண்டும். அப்போதுதான், பாதிக்கப்படும் பெண்களுக்கு தொடர்ந்து நீதி கிடைக்கும். இதுவரை, அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஓய்வுபெற்று தமிழகம் வந்தபிறகு பானுமதி அம்மாவை நேரில் பார்த்து ஒரேயொரு நன்றியை மட்டும் சொல்லவேண்டும்.
பா.ஜ.கவில் உங்களது பணிகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?
அண்ணன் கருப்பு முருகானந்தத்தின் கீழ் தஞ்சாவூரில் கட்சியின் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை, எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவேன். தற்போது, திருச்சி பைபாஸ் சாலையில் எனது அப்பா பெயரில் ஒரு ஹோட்டலையும், தஞ்சாவூரில் பிரைடல் ஷாப்பையும் கவனித்துவருகிறேன்.
பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி மிகக்குறைவாக உள்ளதே?
பிரதமர் மோடியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பெண்களின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் முன்னிறுத்துவதாக இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலும் கழிப்பறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். வேறு எந்த ஆட்சியிலும் இதுபோல் நடக்கவில்லை. பிரதமர் மோடி படித்தவர்களிடம் ரீச் ஆகிவிட்டார். கிராம மக்களும் விரைவில் புரிந்துகொள்வார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த, ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்றத்தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க பிடிக்கப்போகிறது.