சினிமா கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது: இரஞ்சித் ஃபார்முலா

சினிமா கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது: இரஞ்சித் ஃபார்முலா
சினிமா கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது: இரஞ்சித் ஃபார்முலா
Published on

இன்றைக்கு கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது இயக்குநர் இரஞ்சித் கூறியுள்ளார்.

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆனந்த் சங்கர்,பா. இரஞ்சித், இயக்குநர் ராஜேஷ், டிகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘‘ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனத்தின் ஆதரவால்தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதேபோல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘அருவி’ என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார். 

இன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள்தான் எந்தவித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்தவித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்தியச் சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்குப் பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் ‘நோட்டா’ என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்தப் படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’’என்றார். 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,“ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி  இரஞ்சித்துடன் இணைந்து ‘கபாலி’ படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இதுதான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்தச் சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.”என்றார்.

நடிகர் சத்யராஜ்,‘‘ஞானவேல் ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்தப் படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் நான் பத்திரிகையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்அப் புதிதாக இருக்கிறது. 

நான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ்த் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்”என்றார். 

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “எனது ‘பெள்ளி சூப்புலு' படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான்தான் மறுத்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமானக் கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன். 

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்தக் கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.  இந்தச் சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்தப் படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள்.” என்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com