அன்று இன்ஜினியர்... இன்று 'சரித்திர நாயகன்'... - பாலிவுட்டில் கொடி நாட்டும் விக்கி கௌஷல்!

அன்று இன்ஜினியர்... இன்று 'சரித்திர நாயகன்'... - பாலிவுட்டில் கொடி நாட்டும் விக்கி கௌஷல்!
அன்று இன்ஜினியர்... இன்று 'சரித்திர நாயகன்'... - பாலிவுட்டில் கொடி நாட்டும் விக்கி கௌஷல்!
Published on

'சர்தார் உத்தம்' (Sardar Udham) படத்தின் மூலம் பேசுபொருளாக மாறியிருக்கும் நடிகர் விக்கி கௌஷலின் வியப்பூட்டும் திரைப் பயணம் குறித்து பார்ப்போம்.

விக்கி கௌஷல்... சந்தேகத்திற்கு இடமின்றி பாலிவுட்டில் தற்போது சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான `சர்தார் உத்தம்' (Sardar Udham) வெற்றி அதனை உரக்கச் சொல்லி வருகிறது. 2015-ல் ஆரம்பித்த அவரின் திரை வாழ்க்கை குறுகிய ஆண்டுகளில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருப்பதற்கு முழுமுதற் காரணம் அவர் மட்டுமே.

பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட விக்கி கௌஷலின் தந்தை ஷாம் கெளஷல் ஓர் இயக்குநர். அதிரடி - ஆக்‌ஷன் படங்களை இயக்கி புகழடைந்தவர். விக்கி கௌஷலை திரைத் துறை பக்கம் திருப்புவதில் ஷாம் கௌஷலுக்குக்கு விருப்பம் இல்லை. விக்கியை படிப்பை நோக்கி திசைதிருப்பினார்.

ஆனால், விக்கிக்கு தந்தையின் துறையின்மீதே ஆர்வம். என்றாலும் தந்தையின் விருப்பத்தை மீற முடியாமல், பொறியியல் படித்தவர் சில வருடங்கள் மென்பொருள் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்தார். விருப்பம் இல்லாமல் தொடர்ந்த அந்த வேலையில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தந்தையிடம் தனது கனவு குறித்து வெளிப்படுத்தியவர், சினிமாவுக்கு ஒப்புதல் வாங்கி, இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் `கேங்ஸ் ஆஃப் வாஸாபூர்' படத்தில் உதவி இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

அங்கு சந்தித்த நீரஜ் கெய்வான் என்பவரால் விக்கியின் வாழ்க்கையில் திருப்பம் நிகழ்ந்தது. இந்த நீரஜ் கெய்வான்தான், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு `மசான்' (Massan) என்கிற படத்தில் விக்கியை நடிக்கவைத்தார். இதற்கு முன்பு அனுராக் காஷ்யப் இயக்கிய இரண்டு நாடகங்களில் விக்கி நடித்திருந்தாலும், திரையில் முதல் படம் என்றால் அது `மசான்' தான். இதில் தீபக் என்ற கேரக்டரில் அவரின் நடிப்பு கவனம் ஈர்த்தது. முதல் படமே ஐஃபா மற்றும் ஸ்கிரீன் போன்ற விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

முதல் படம் விருதுகளை பெற்றுக் கொடுத்தாலும், அதன்பிறகு அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை. `மசான்' படத்துக்கு பிறகு அனுராக் காஷ்யப்பின் 'ராமன் ராகவ்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், இந்தப் படங்களில் இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆஃபிஸில் பெரிதும் எடுபடவில்லை. எதிர்பாராதவிதமாக 2018-ல் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான `லவ் பெர் ஸ்கொயர் ஃபுட்' படத்தின் `சாக்லேட் பாய்' கதாபாத்திரம் இளசுகளின் மனசுகளில் விக்கி ஓர் இடத்தை பெற்றுக்கொடுத்தது.

இதே ஆண்டில் இரண்டு படங்கள் பாலிவுட்டில் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. அதில் ஆலியா பட், மேக்னா குல்சாரின் `ராஸி' படமும், சஞ்சய் தத் பயோபிக்கான `சஞ்சு' படமும் அடங்கும். இந்த இரண்டு படங்களிலும் விக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படங்களுக்கு பிறகு விக்கிக்கு பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் உருவானது. குறிப்பாக, `சஞ்சு' படத்தில், ரன்பீர் கபூரின் நண்பராக கம்லியாக நடித்தது ரன்பீருக்கு நிகரான அவருக்கு மிகப்பெரிய புகழை தேடிதந்தது.

2018-ம் ஆண்டு விக்கிக்கு மிகவும் ராசியான ஆண்டாக அமைந்தது எனலாம். ஏனென்றால், அனுராக் காஷ்யப்பின் `மன்மார்ஜியன்' விக்கிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. 2018 அப்படி என்றால் 2019-ம் ஆண்டின் தொடக்கம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தியாவின் தேசபக்தியை அதிகரித்த படமாக சொல்லப்பட்ட `உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' வடமாநிலங்களின் பட்டிதொட்டி எங்கும் விக்கியை கொண்டுச் சேர்ந்தது.

இப்போது `சர்தார் உத்தம்' (Sardar Udham) மூலமாக தீவிர சினிமா ஆர்வலர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் விக்கி. ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் வலி, அழுகை, சோகம் என அனைத்து உணர்ச்சிகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்கி கௌஷல். படம் ஆஸ்கர் என்ட்ரிக்கான ரேஸில் இருந்து வெளியேறியிருக்கிறது. என்றாலும், மக்களின் மனங்களை வெல்லத் தவறவில்லை. அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இந்தியாவின் டாப் ட்ரென்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com