தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக திட்டங்களின் கோப்புகளை ஆய்வு செய்துள்ள சம்பவம் அரசியல் விமர்சகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கோயம்பேடு - கீழ்பாக்கம் நேரு பூங்கா இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு சென்று தமிழக திட்டங்களின் கோப்புகளை ஆய்வு செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, மாநில அரசில் ஒரு வலுவான தலைவர் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு, எல்லை மீறுகிறது என்ற விமர்சனத்திற்கு வழி வகுத்திருக்கிறது வெங்கையா நாயுடுவின் இந்த நடவடிக்கை.
ஜெயலலிதா இருந்தவரை மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து இவ்வாறு கோப்புகளை ஆய்வு செய்த சம்பவம் நடந்ததில்லை. தலைமைச் செயலகத்திலிருந்து 45 நிமிடம் பேட்டியளித்த வெங்கய்யா நாயுடு, ஒரு செய்தியை அழுத்தம் திருத்தமாக சொன்னார், “நான் அரசியலுக்காக இங்கு வரவில்லை; துறை ரீதியிலான ஆய்வுக்காக வந்திருக்கிறேன்” என்றார். இந்த கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் கிளப்பியுள்ளது. முதல்வர் பழனிச்சாமி வெறும் 5 நிமிடம் மட்டுமே, எழுதி வைத்த செய்தியைப் படித்தார். பெரிதாக பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
“வெங்கய்யா நாயுடுவின் செயல் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்த செயல் மூலம் தமிழக அரசின் மாண்பை அவர் களங்கப்படுத்திவிட்டார். இந்த எதேச்சதிகாரப்போக்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிமுகவின் ஊழல் கோப்புகள் அனைத்தும் மத்திய அரசின் விரல்நுனியில் இருப்பதால் அவர் துணிச்சலாக தமிழக அரசு திட்டங்களின் கோப்புகளில் கை வைத்துள்ளார். உங்கள் பிடி எங்களிடம் உள்ளது என்பதைக் காட்டவும், மத்திய அரசு நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று காட்டவும்தான் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த செயல் கட்சிகள் கடந்து அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
இதற்கு பதிலளித்த பாஜகவின் தமிழக தலைவர்களில் ஒருவரான நாராயணன், “தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு சார்ந்த திட்டங்களை ஆய்வு செய்துவருகிறார், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு. உதாரணமாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஹரியானாவிலும், ஏப்ரல் 11 வடகிழக்கு மாநிலங்களிலும், மே 3 ஆம் தேதி கர்நாடகாவிலும், மே 5 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலும் ஏற்கனவே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றுகிறது. மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மத்திய அமைச்சரை வாழ்த்துவதை விடுத்து அத்துமீறுவதாக விமர்சிப்பது துரதிஷ்டவசமானது”என்றார்.
-வீரமணி பன்னீர்செல்வம்