பீதியில் தவிக்கும் வெள்ளம்புத்தூர் பெண்கள்?: ஒரு நேரடி ரிப்போர்ட்

பீதியில் தவிக்கும் வெள்ளம்புத்தூர் பெண்கள்?: ஒரு நேரடி ரிப்போர்ட்
பீதியில் தவிக்கும் வெள்ளம்புத்தூர் பெண்கள்?: ஒரு நேரடி ரிப்போர்ட்
Published on

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஆராயி குடும்பத்தினர் மீதான கொலை வெறித் தாக்குதலானது‌ பாலியல் வன்கொடுமை செய்யும் எண்ணத்தோடு வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டதாக இருக்கலாம் என காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாதி மற்றும் நிலத்தகராறு உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்ய வந்தபோது தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம், ஏற்கனவே இதே ஊரில் நடந்த 2 சம்பவங்களுடன் ஒற்றுப்போவதாகக் கூறும் காவல்துறையினர், இந்த ஊரில் நடந்துள்ள மூன்று சம்பவங்களும், ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஆண்கள் இல்லாத, எளிதில் தப்பியோட வழி உள்ள வீடுகளில் நடந்துள்ளது தெரியவந்திருப்பதாகக் கூறுகின்றனர். 

இச்சம்பவங்களில் கூராக இல்லாத, ஆனால் கனமான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.இந்தப் பகுதியில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே தனியாக வசிப்பதும், ஆண்கள் அவ்வப்போது மட்டுமே வெளியூரில் இங்கே வருவதுமாக உள்ளனர். ஆண்கள் ஏதேனும் விழாக்கள் அல்லது இறப்புக்கு மட்டுமே ஊருக்கு வருகின்றனர். நடந்த மூன்று சம்பவங்களும் வார இறுதி நாளில், இறப்போ அல்லது விழாக்கள் முடிந்த நேரத்திலோ நடைபெற்றிருக்கிறது. எனவே, வெளியூரில் இருந்து வந்து செல்பவர்கள் யாரேனும் இதனை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இப்பகுதியில் உள்ள பெண்கள் கான்கீரிட் பணிகளுக்குச் சென்றுதான் தங்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தச்சம்பவத்திற்குப் பிறகு பயத்தின் காரணமாக ஊரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சில பெண்கள்,கான்கீரிட் பணி முடிந்து கிராமத்திற்குத் திரும்ப இரவு நேரமாகிவிடும் என்பதினால் நாங்கள் பணிக்குச் செல்வதில்லை. வீட்டில் உள்ள பெண்கள் தங்களுக்கும் இதுபோன்று ஏதாவது நடந்துவிடுமோ என்ற  அச்சத்தில் இருக்கிறார்கள் என்றனர்.

வெள்ளம்புத்தூரில் இரவு 7மணிக்கு மேல் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வருவது இல்லை. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு வந்த பிறகே கதவுகளும் திறக்கப்படுகிறது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை தனியாக அனுப்புவதில்லை. கூட்டமாக வீட்டில் இருந்து பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர். பள்ளி முடிந்ததும் அவ்வாறே திரும்பி வருகிறார்கள். பெண்கள் நான்கு, ஐந்து பேர் ஓன்றாக சேர்ந்துதான் இரவில் இருக்கிறார்கள். ஒன்றாகதான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் யாரும் உறங்குவது இல்லை. பயத்தில் உறக்கம் வருவதில்லை என்கிறார்கள். 

இச்சம்பவத்திற்குப் பிறகு ஊரே தனித்தீவு போல் உள்ளது. ஊருக்குள் யார் யாரோ வருகிறார்கள் என்றனர். கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பக்கத்து நகரத்தில் இருந்துதான் இதுவரை வாங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெண்கள் யாரும் வீட்டை விட்டே செல்வதில்லை. ஊரில் உள்ள ஆண்களிடம் கொடுத்து பத்து வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கின்றனர். இந்தக்கிராமத்தை விட்டு வெளியேறும் முடிவில் சிலர் உள்ளனர். இப்பகுதியில் உள்ள ஆண்களில் பெரும்பாலானோர் பெங்களூரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அங்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். 

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 26 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வரும் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவோம் எனக் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com