பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள பழைய வாகன அழிப்புக்கொள்கையின் நோக்கம் என்ன? இது எப்படி செயல்படுத்தப்படும் என தற்போது விரிவாக பார்க்கலாம்.
சாலைகளில் ஓடும் மிகவும் பழைய, கரும்புகை மூலம் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கழித்துக்கட்டுவதே 'பழைய வாகன அழிப்புக்கொள்கை'யின் நோக்கமாகும். ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாகனங்கள் மோசமான நிலையில் இருந்தால் அழிப்புக்கு அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். அவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு உரியவை என தெரியவந்தால் கூடுதலாக 5 ஆண்டுகாலம் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டு பிறகு, மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி கழித்துக்கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்தியாவில் 20 ஆண்டுகளை கடந்து 51 லட்சம் வாகனங்களும் 15 ஆண்டுகளை கடந்து 34 லட்சம் வாகனங்களும் சாலைகளில் ஓடி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது போன்ற பழமையான வாகனங்கள் புதிய வாகனங்களை காட்டிலும், 10 முதல் 12 மடங்கு நச்சு வாயுக்களை வெளியிட்டு சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகவும் தகவல்கள் உள்ளன. இவற்றை குறிப்பிட்ட தொகைக்கு திரும்பப் பெறும் வகையில் பழைய வாகன அழிப்புக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய வாகனங்களை பிரித்து அதிலிருந்து இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை மறு சுழற்சி செய்வதன் மூலம் உற்பத்திச் செலவுகள் குறைந்து புதிய வாகனங்களுக்கான விலையும் குறையும் என அரசு கூறுகிறது.
இந்தியா சில ஆண்டுகளாக காற்று மாசுபாட்டில் உலக அளவில் முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மே.வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் ஆகிய 5 மாநிலங்களில் தான் அதிக அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்ற ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 50 சதவீதம் மேலே குறிப்பிட்ட 5 மாநிலங்களில் நிகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 3.50 லட்சம் பேர் காற்று மாசால் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
காற்று மாசில் தமிழகம் 9ஆவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு தமிழகத்தில் 85ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 16லட்சம் பேர் காற்று மாசு தொடர்பான நோயால் பாதிக்கப்படுகின்றனர். டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசால்தான் 3ல் 2பங்கு உயிரிழப்புகள் நிகழ்கிறது. காற்று மாசுபாட்டை பொறுத்தவரை டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்துவருகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் மனிதர்களின் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கின்றன.
பழைய வாகனங்களை அழிக்க செயல்படுத்தப்படும் நடைமுறை :
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பழைய வாகனங்களை அழிப்பதற்கான ஸ்க்ரேப்பேஜ் மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனங்கள் அதிக அளவில் புழங்குவதால் அப்பகுதிகளில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. வாகன உரிமையாளர்கள் ஸ்க்ரேப்பேஜ் மையங்களுக்குச் சென்று தங்களது வாகனங்களைக் கொடுத்து விடலாம். பழைய வாகனங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு வாகன உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். புதிய வாகனத்தை வாங்குவதை ஊக்கப்படுத்த பதிவு செய்தல், சாலை வரிக்கு உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படும். வாகனங்களின் நிலை குறித்து தானியங்கி சோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பழைய வாகனங்கள் 15, 20 ஆண்டுக்குப் பிறகு நல்ல நிலையில் இருந்தாலும் அதை ஸ்க்ரேப்பில் போட வேண்டும். அப்படியில்லை நான் வாகனத்தை ஓட்டுவேன் என கூறினால், ''க்ரீன் டேக்ஸ்'' எனப்படும் பசுமை வரி விதிக்கப்படும். ஸ்க்ரேப்பேஜ் முறையை செயல்படுத்த 10,000 கோடி ரூபாய் செலவில் ஸ்க்ரேப்பிங் தொழிற்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஸ்க்ரேப்பிங் தொழிற்சாலையில் பணிகளை கவனிக்க போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்படுவர். 2023 ஏப்ரல் மாதத்தில் வாகன அழிப்புக் கொள்கை செயல்பாட்டுக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவே வாகன அழிப்புக் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துதுறை நிபுணர் அமுதன் வளவன் பேசுகையில், ''இந்த சட்டம் கொண்டுவருவதால் புதிய வாகனங்களின் விற்பனை அதிகமாகும். இதனால், வாகன தயாரிப்பாளர்கள் பயன்பெறுவார்கள். இதன்பிறகு வரும் வாகனங்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலமாக தயாரிக்கப்படும். காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும். இந்த சட்டம் வந்தபின்பு, செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால், தனி நபர் வாகன பயன்பாடு குறைந்து மக்கள் பொதுப்போக்குவரத்தை நாடுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கரும்புகை குறைந்து, அதனால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள், உலக வெப்பமயமாதால் தடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மக்கள் மாற்று எரிபொருளுக்கு செல்வது இன்னும் பயனளிக்கும் விதமாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார்.