இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் பக்கமாக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தமிழ் வம்சாவளியை சேர்ந்த வீராசாமி பெருமாள்.
யார் இவர்?
32 வயதான வீராசாமி பெருமாள், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கயானாவை சேர்ந்தவர். இவர் பிறந்ததும் அங்கு தான். காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் இருந்து மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அப்போதையை ஆட்சியாளர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்படிதான் 1838 முதல் 1917 வரையில் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவை சேர்ந்த இந்தியர்கள் மேற்கிந்திய தீவு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் புலம் பெயர்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்படி கொண்டு செல்லப்பட்ட தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர்தான் வீராசாமி பெருமாள்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரது முன்னோர்கள் கயானாவில் குடியேறி உள்ளனர். இவரது தந்தை பெயர் பெருமாள். அதே போல வீராசாமியின் உடன்பிறப்புகளின் பெயர்களும் தமிழ் பெயர்களையே தாங்கி நிற்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் வேறு நாட்டுக்கு புலம் பெயர்ந்திருந்தாலும் தமிழ் மீதான பற்று இன்னும் அவரது குடும்பத்திடம் மாறாமல் உள்ளது இதற்கு சான்றாக நிற்கிறது. இருப்பினும் இவருக்கு தமிழ் சரளமாக பேச வராது என சொல்லப்படுகிறது.
கிரிக்கெட் ஆர்வம்!
13 வயது முதலே தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் விளையாடி வருகிறார் வீராசாமி. அவரது சொந்த ஊரான Albion-இல் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் இருந்து அவரது ஆட்டம் தொடங்கி உள்ளது. இடது கை ஆர்தோடக்ஸ் சுழற்பந்து வீச்சாளர் இவர்.
2006-ஆம் ஆண்டில் முதல் தர கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். 121 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 536 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல 95 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடி 132 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். CPL என சொல்லப்படும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டிலும் இவர் விளையாடி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அனுபவம்!
கடந்த 2012 முதல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடி வருகிறார் வீராசாமி. இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அவர் விளையாடி உள்ள பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து மாதிரியான அந்நிய மண்ணில்தான். ஒரே ஒரு முறை ஜமைக்காவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் மொத்தம் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் கெரியரில் சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் இவர். தொடர்ந்து இடம் கிடைக்கும் பட்சத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.
குட் லக் தமிழா!