விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இருக்கைகளில் நடந்து சென்றது ஏன் என்பது குறித்து அக்கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார்.
மழை நீரில் காலணி நனையாமல் இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, தொண்டர்கள் இருக்கைகள் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு சர்ச்சையானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக திருமாவளவன் சென்னை வேளச்சேரி வீட்டில் இருந்து டெல்லி புறப்பட தயாரானார். ஆனால் வீட்டை மழை நீர் சூழ்ந்திருந்ததால் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவர் நின்றபடி ஆதரவாளர்கள் நாற்காலியை இழுப்பது, அக் கட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளது. பின்னர் தண்ணீரில் நனையாதப்படி ஒவ்வொரு இருக்கையாக தாண்டிச்சென்று தயாராக இருந்த காரில் திருமாவளவன் ஏறியுள்ளார். இந்த வீடியோ விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விளக்கமளித்துள்ள வன்னி அரசு, ''தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கின்றது. ஊரிலும் வீடு இருக்கும். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு சென்னையில் வீடு இல்லை. காரணம், அவருக்கு யாரும் வீடு வாடகைக்கு கொடுக்க முன்வரவில்லை. இதனால், அரசு சார்பில் அவருக்கு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. அதில் 'மருதம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி' என்ற ஒன்றை உருவாக்கி அந்த பயிற்சி பள்ளி முதல்வருக்கான அறையில் அவர் தங்கியிருக்கிறார். அது, அவரது வீடு இல்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். வேளச்சேரியை பொறுத்தவரை மழைபெய்தாலே அங்கு தண்ணீர் தேங்கும் என்பது நமக்குத்தெரியும். அப்படி தண்ணீர்தேங்கியிருந்த நிலையில் அவர் இருக்கையில் ஏறி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர் நேற்று மட்டும் அப்படி செல்லவில்லை. கடந்த 10 நாட்களாவே தண்ணீர் தேங்கியிருப்பதால் வேறு வழியின்றி அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறார். நாங்களுமே அப்படித்தான் செல்கிறோம். காரணம், பொது இடத்துக்கு செல்லும்போது, ஷூ, பேண்ட் நனைந்துவிடக்கூடாது என்பது தான் அதன் நோக்கம். அன்று திருமாவளவன் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்படியான சூழலில் உங்களால் என்ன செய்ய முடியும்? வேறு வழியேல்லை; நனைந்த பேண்ட்டுடன் எப்படி செல்ல முடியும்?
பொதுவெளியில் இப்படி நடந்ததால் அது நீங்கள் சொல்வது போல விமர்சனத்துக்கு உட்பட்டது. ஆனால், அவர் தங்கியிருக்கும் இடத்தில் இப்படி தண்ணீர் சூழ்ந்திருக்கும்பட்சத்தில் அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை பரப்பி வெறுப்பரசியலை விதைத்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக அவரது கால் வீக்க பிரச்னை இருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சையும் எடுத்து வருகிறார். தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்னையும் இருக்கிறது. இதையெல்லாம் சேர்ந்து தான் அப்படி செய்ய வேண்டியதாயிற்று. குறிப்பாக நாடாளுமன்றத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தண்ணீரில் நனைந்து எப்படி செல்ல முடியும்?
புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் சாக்கடைகளில் கூட இறங்கி வேலை செய்திருக்கிறோம். களத்தில் எப்போதும் நிற்பவர் திருமாவளவன். நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது தண்ணீரில் நனைந்து செல்ல முடியாது என்பதுதான் அதற்கான காரணம். மற்றபடி, சேறு, சகதியில் உழன்ற சமூகம் தான் நாங்கள். சாக்கடையிலும், தண்ணீரிலும் கலக்குற சமூகம்தான் இந்த சமூகம். இதையெல்லாம் மற்றவர்கள் போல தவிர்த்துவிட்டோ, கடந்துவிட்டோ செல்ல முடியாது. அரசியல் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பாஜக உள்ளிட்ட சனாதான கட்சிகள் இப்படியான பொய்யை பரப்பி வருகிறது'' என்றார்.